Apr 24

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே மாதம் 18ஆம்  திகதி மாலை 5 மணிக்கு (பிரித்தானிய நேரப்படி) லண்டன் ஹைட் பார்க்கில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இது குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று எமக்குள்ளே  நிறையவே கதைத்தாகி விட்டது. போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் மிலேச்சத்தனமான போரின் காயங்கள் ஆறவில்லை. வீர சுதந்திரம் கோரிய தமிழினம் இன்று தம் நிலத்தை விட்டு உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டுள்ளது.

நம் கடல், நிலம், வீடு, தோட்டம், உடமை அனைத்தையும் சிங்கள தேசம் எம்மிடமிருந்து கையகப்படுத்தி விட்டது. மிகுதியாய் இருப்பனவற்றையும் காவு கொள்ளும் செயல்திட்டங்களை மவுனமாக நடைமுறைப்படுத்துகின்றது.

ஆயினும் எம் உணர்வுகளை மட்டும் அவர்களால் சூறையாட முடியவில்லை. உலகப் பந்தின் எந்த மூலையில் நாம் நின்றாலும் என்றோ ஒரு நாள் எம் மண்ணிற்கு நாம் மீண்டும் செல்வோம், எம் மண்ணை மீட்டெடுப்போம் என்ற உறுதியையும் அவர்களால் சிதைக்க முடியவில்லை.

வருடங்கள் உருண்டோடிச் செல்ல தமிழர்கள் தம் புண்ணிய பூமியை மறந்து விடுவார்கள், தாம் அடைக்கலம் தேடிய நாடுகளில் தம் நாளாந்த வாழ்க்கையின் தேவைகளுக்கள் தம் மண்ணை மறந்து கரைந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போடுகின்றது சிங்கள தேசம்.

எம் அடுத்த தலைமுறை நாம் எந்த விழுமியங்களைக் காக்க அறவழியிலும் பின்னர் ஆயுதமேந்தியும் போராடினோம். அளப்பரிய உயிர்த் தியாகங்களை புரிந்தோம், அங்கங்களை இழந்தோம், மாறா வடுக்களை உடலெங்கும் சுமந்தோம், உறவுகளை பிரிந்தோம், அவமானப்படுத்தப்பட்டோம் என்பதனை மறந்து விடுவார்கள் என்று கனவு காண்கின்றது சிங்கள தேசம். எம் கலை, பண்பாடு, மொழி, விழுமியங்கள் சிதைந்து போய் விடும் என்று மனப்பால் குடிக்கின்றது.

இவையெல்லாம் சாத்தியமே.  நாம் கடந்து வந்த பாதையை மறக்கும் போது, எம் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை மறக்கும் போது, நாம் போராடியதற்கான அடிப்படைகளை மறக்கும் போது எம் மீது மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கெதிரான வன்கொடுமைகளை வெளிக் கொண்டு வந்து அதற்கான நீதிக்காகப் போராடத்  தயங்கும் போது, சிங்கள தேசம் நினைப்பது கை கூடுதல் சாத்தியமே.

1000 வருடங்களுக்கு மேலாக தம் மண்ணைப் பிரிந்து உலகெங்கும் சிதறி ஓடிய இனங்கள் கூட தம் மண்ணை மீட்டெடுத்தற்கான காரணம், அவர்கள் எத்தனை காலம் உருண்டோடினாலும் தம் தேசத்தை மனதிலிருந்து அகற்றாததும் தமக்கான நீதி கிடைக்க சர்வதேசத்தின் கடமையை வலியுறுத்தி அதில் வெற்றி பெற்றதும் ஆகும்.

உலக நாடுகள் எம் பக்கம் திருப்பப்பட வேண்டும், எம் இன அழிப்பை புரிந்து கொள்ள வேண்டும், அதனைத் தடுத்து நிறுத்தும் சரியான காத்திரமான நடவடிக்கைளை எடுக்க வைக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் நிலைப்பாடு.

இந்த அடிப்படையில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூறல் ஒவ்வொரு வருடமும் உலகின் மனச்சாட்சியை தட்டிக் கேட்க வேண்டும். அழியும் எம் இனத்திற்கான ஆதரவுத் தளத்தினை உலகளாவிய அளவில் விஸ்தரிக்க வேண்டும்.

உணர்வுடன் திரளும் தமிழ் மக்கள் தம் இனத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த உறுதி எடுக்க வேண்டும். பரிகார நீதி கிடைக்கும் வரை ஓய்வின்றி செயல்பட வேண்டும். விலைமதிப்பற்ற உயிர்த் தியாகங்களுக்கு செய்யும் தர்மம் இதுவெயாகும் என்றுள்ளது.