Oct 17

"நிட்சயமாக இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் என்றும் சூடாக இருக்கின்றது............................."

செப்டம்பர் இறுதியில் நடந்துமுடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 36 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்தீர்கள். இதன் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்ற போதிலும், பிரதான மண்டபத்திலும், பக்க நிகழ்வுகளிலும் இலங்கை தொடர்பில் பேசப்பட்டது. இதற்குக் காரணம் என்ன? இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்னும் சூடாக இருக்கின்றது என இதனைக்கொள்ளலாமா?

நிட்சயமாக இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் என்றும் சூடாக இருக்கின்றது. ஆனால் ஈழத்தமிழ் தமிழ் மக்களை பொறுத்தவரையில், அதாவது தமிழர்களது தாயாக பூமியான வடக்கு கிழக்கு பிரதேசத்தை சார்ந்த, பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்த வரையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் போதாது என்ற குற்றச் சாட்டு மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இங்கு தான் நடைபெற்ற தவறை நாம் மீள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. சிறிலங்காவின் கடந்த ஜனதிபதி தேர்தலில், முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபக்சா தொடர்ந்து ஆட்சியிலிருந்தால், இன்று ஐ.நா. உட்பட சர்வதேச நிலைமை பாதிக்கப்பட்ட மக்களிற்கு சார்பாக இருந்திருக்கும்.  சுருக்கமாக கூறுவதனால், சிறிலங்காவின் ஆட்சி மாற்றம், நிலைமைகள் மறுவதற்கு காரணமாகியுள்ளது.

எது என்னவானலும், கடந்த 36வது கூட்டத் தொடரில், சிறிலங்கா பற்றிய ஐ.நா.மனித உரிமையாளரின் கடுமையான அறிக்கை, சிறிலங்கா அரசிற்கு எச்சரிக்கையை கொடுத்துள்ளது

இந்தக் கூட்டத் தொடரில் தொடர்ச்சியாக பல வருடமாகக் கலந்துகொள்பவர், இராஜதந்திரிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொர்பை வைத்திருப்பவர் என்ற முறையில், சர்வதேச சமூகம் இலங்கைப் பிரச்சினையை குறிப்பாக போர்க் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தை எவ்வாறு பார்க்கின்றன? இதில் மாற்றம் ஏற்பட்டுவருகின்றதா?

இலங்கைதீவில் ஈழத்தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் போன்ற விடயங்களில், சர்வதேச சமூதாயம் நிட்சயம் விழிப்பாகவுள்ளது. தூர்அதிஸ்டவசமாக இதற்கு பக்க துணையாக நின்று உழைக்க வேண்டிய மாபெரும் சக்தியான புலம்பெயர் வாழ் தமிழர், 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், பல பிரிவுகளாக பிரிந்து நின்று, பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டு போட்டிகள் போன்று - போட்டி, பொறமையில் காலத்தை கடத்துகின்றனர். இவ் பிரிவுகளை சிறிலங்கா தமக்கு சதகமாக பாவிக்கின்றது. 

போர்குற்றம் தொடர்பான விடயத்தில் பாரீய முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், முதலில் புலம்பெயர் வாழ் தமிழரிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். அடுத்து ஐ.நா.மனித உரிமை சபை மட்டுமல்லாது, ஐ.நா. பொது சபை, பாதுகாப்பு சபை ஆகியவற்றுடன் வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையின் போர்குற்ற விவகாரம் நகர்த்தப்பட வேண்டுமானால், அதை நிட்சயம் ஐ.நா. பொது சபை, பாதுகாப்பு சபையினலேயே முடியும். அதற்கு இவற்றில் அங்கத்துவம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு தேவை.

இவற்றை உணராது, கடுதசி அறிக்கை, ஆய்வு, உணர்ச்சிவாச பேச்சுக்களை முகநூல்களிலும் தரம் அற்ற இணைய தளங்களிலும் பிரசுரிப்பதன் மூலம் நாம் எதையும் சாதிக்க முடியாது.   

இந்த முறை உங்களுடைய அமைப்பின் சார்பிலும் பக்க நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொர்பில் சுருக்கமாகச் சொல்வீர்களா?

எங்கள் அமைப்பான ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையம் – T.C.H.R.’ 1990ம் ஆண்டிலிருந்து, ஐ.நா.மனித உரிமை மன்றங்களில் தொடர்ச்சியாக வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இவ் நீண்ட கால அடிப்படையில், இம் முறை எம்மால் நடாத்தப்பட்ட பக்க நிகழ்விற்கு, ஐ.நா.வின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான பேராசிரியர் அல்பிரட் சயஸ் என்பவர் எமது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இவர் ஐக்கிய நாடுகளின் “ஜனநாயக மற்றும் சமபங்கு சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துவதின்” சுதந்திர நிபுணர். இப்படியாக தகமை கொண்ட ஒருவர், விசேடமாக ஐ.நா.மண்டபத்தில், அதாவது தமிழ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில், “தமிழீழ மக்களது சுயநிர்ணய போராட்டம் நியாயமானது. ஆனால், இது ஒழுங்கான முறையில் சர்வதேசமயப்படுத்தப்படாமல் உள்ள காரணத்தினால் ஐ.நா.அங்கத்துவ நாடுகளின் கவனத்தை பெறவில்லையென” கூறியது ஐ.நா.வில் ஓர் முக்கிய நிகழ்வு

இப்படியாக விசேட தகமை கொண்ட ஒருவர், ஐ.நா.மண்டபத்தில், உரையாற்றியதற்கும் ஐ.நா.நடைமுறை, விதிமுறை, தகமைகளை அறியாத அற்ப மனிதர்கள், வியாக்கியனம் கூற தவறவில்லை. இதை தான் கூறுவார்கள் ‘கழுதைக்கு விளங்குமா கற்பூர வாசைன’ என்று.

பொறுப்புக்கூறல் மீள்நல்லிணக்கம் போன்ற விடயங்களில் இலங்கை அரசுக்கு அதிகளவு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் தரப்புக்கள் ஜெனீவாவில் செயற்படுவதாக நினைக்கின்றீர்களா? இல்லையெனில் எவ்வாறு செயற்பட வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.

நாம் இங்கு சில உண்மைகளை ஏற்று கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசு சார்பாக ஒருவரை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா.விற்கு நியமிக்கும் பொழுது, சிறிலங்காவின் மிகவும் தலை சிறந்த ராஜதந்திரியையே நியமிக்கிறார்கள். அவர் மட்டுமல்லாது, அவருடன் இணைந்து வேலை செய்வதற்கு நியமிக்கப்படுபவர்களும் அப்படியாக தகமை கொண்டவர்களே. அப்படியானால், இவர்களிற்கு நிகராக நின்று எதிர்த்து வேலை செய்யும் நாங்களும் இவர்கள் போன்று காணப்பட வேண்டும். 

ஆனால் 2009ம் மே மாதத்தின் பின்னர் எமது நிலை தலைகீழாக மாறியுள்ளது. இன்று ஐ.நா.வில் செயற் திட்டங்களை முன்னெடுக்க எந்த அருகதையோ தகமையோ அற்ற சிலர், நிதி பலம் காரணமாக மனித உரிமைகள் பேரவையில் பிரசன்னமாகியுள்ளார்கள். இவர்கள் ஐ.நா.வின் செயற்திட்டங்களையோ, வரையறையோ அறவே அறியாதவர்கள். அவர்களது அறிக்கைகளில் ஆயிரத்து எட்டு தொழில்நுட்ப தவறுகள் உண்டு. அது மட்டுமல்லாது, ஐ.நா.மொழி ஒன்றில் ஒழுங்காக உரையாற்றும் தகமையும் அற்றவர்கள். இப்பெயர்வழிகளால் நாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அழைக்கபடுபவர்களும் இவர்கள் போன்றே தகமையற்றவாகளாக கணப்படுகிறார்கள். இவர்களது செயற்பாடு எப்படியாக சிறிலங்காவிற்கு சவலாக அமைய முடியும்? 

எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும், மனித உரிமை சம்பந்தப்பட்ட எனது முதலாவது துறைசார் கல்வியை பிரித்தானியாவில் உள்ள ஓக்ஸ்போட் பல்கலைகழகத்தில் பயின்றேன். வேறு சில பல்கலைகழங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் மனித உரிமை பயின்ற வேளையில்,  சிறிலங்காவிலிருந்து - சட்ட மா அதிபர் காரியாலயம், நீதி துறை, வெளிநாட்டு அமைச்சு, காவல்துறை ஆகியவற்றிலிருந்து வருகை தந்த முக்கிய புள்ளிகளும் என்னுடன் பயின்றார்கள். இதன் காரணமாகவே, சிறிலங்கா அரச சார்பு ஆங்கில, சிங்கள பத்திரிகைகள் அன்றும் இன்றும் என்னை கடுமையாக தாக்கி எழுதுவார்கள். அன்று என்னுடன் மனித உரிமை படித்த சிலர், இன்று சிறிலங்காவில் முக்கிய இடங்களில் முக்கிய பதவி வகிக்கிறார்கள்.

துர்அதிஸ்டவசமாக, தற்பொழுது எம்மிடம் நிதி பலம் இல்லாத காரணத்தில், பாரீய அளவில் எமது செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளது. 

தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை என இம்முறை குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் சிங்கள - பௌத்த கடும்போக்கைக் கொண்ட அமைப்பு ஒன்றும் இம்முறை கூட்டத் தொரில் கலந்துகொண்டிருந்தது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தற்பொழுது தான் ஐ.நா.வில் தமிழர் தரப்பு என நாம் கதைக்கிறோம். காரணம் சிறிலங்கா பற்றிய விடயங்களில் தற்பொழுது ஒன்றரை அல்லது இரண்டு நிமிட உரையாற்றுபவர்கள் யாவரும் தமிழ் அமைப்புகளால் தமிழரே உரையாற்றுகிறார்கள். ஐ.நா.வில் தனி தமிழர் செயற்பாடு ஈழத்தமிழருக்கு  ஆக்கபூர்வமானதோ நன்மை தரக்கூடியததோ அல்லா. இங்கு பலருடைய அறிக்கைகள் எந்தவித உப்பு சொப்பு அற்றவையும், அரை குறை ஆங்கிலத்தில் உள்ளவை. இவ் அறிக்கைகள் எந்தவிதத்திலும் சிறிலங்காவிற்கு தாக்கத்தை கொடுக்க போவதில்லை.

முன்பு அப்படியல்லா! மிக அண்மை காலம் வரை சிறிலங்கா விடயத்தில் உரையாற்றுபவர் யாவரும் சர்வதேச அமைப்புக்களான – சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பு, சர்வதேச கல்வி நிறுவனம், இமடார், மிறாப் போன்ற அமைப்புகள் மூலமே நடைபெற்றனா. இதே போன்ற வேறுபல அமைப்புக்கள் மூலம் நூற்றுக்கணக்கான அறிக்கைகளை நாங்கள் முன்பு செய்துள்ளோம். 

இங்கு வியப்பிற்குரிய விடயம் ஒன்றை வெளிப்படையாக கூற விரும்புகிறேன். எமது அமைப்பான ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையம் - T.C.H.R . ஒன்றே முதன் முதலில் 1999ம் ஆண்டு ஐ.நா. அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்தது. ஆனால் சிறிலங்கா அரசின் கடும் எதிர் பிரச்சாரத்தால்  எமக்கு அவ் அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது பல தமிழ் அமைப்புக்கள் எப்படியாக சிறிலங்கா அரசின் எதிர்ப்பு இல்லாது ஐ.நா.அந்தஸ்தை பெற்றது என்பது கேள்வி குறியகவுள்ளது! இவ் நடவடிக்கை, ராஜபக்சாவிற்கும் முன்னாள் தமிழ் அமைச்சர் ஒருவருக்குமிடையிலான மபெரும் ரகசியமென பலர் கூறுகிறார்கள். இவ் தமிழ் அமைப்புகளின் ஐ.நா. நடவடிக்கைகள் யாவும், 2020ல் ராஜபக்சா அரசாங்கம் அமைக்கும் பொழுது அமைதியாகிவிடும் என்பது சிலருடைய கணிப்பு. பொறுத்திருந்து பார்ப்போம். 

சிறிலங்கா மீதான அரச சார்பற்ற நிறுவனங்களின் குற்றச்சாட்டுகளிற்கு பதில் அழிப்பதில்லை என்ற நியதியை, 1990ல் சிறிலங்காவின் விசேட பிரதிநிதியாக ஐ.நா.மனித உரிமை அமர்வுகளில் கலந்து கொண்ட திரு பிறட்மன் வீரக்கோன் கடைபிடித்தார். ஆனால் வடமாகாண சபையின் ஆளுநாராக கடமையாற்றிய, சிறிலங்காவின் முன்னாள் ஐ.நா.பிரதிநிதி, திரு பள்ளியகாற  ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தை’ கடுமையாக வஞ்சிப்பதற்காக நடை முறைப்படுத்தியிருந்தார்.

ஐ.நா.வில் எந்தவொரு நாடும் தாக்கமற்ற அறிக்கைகளிற்கு பதில் கூறுவதில்லை. இது, ஜெனிவா மனித உரிமை சபையின் கலந்து கொள்ளும் கடும்போக்கை கொண்ட சிங்கள பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளிற்கு புரியவில்லை. 

உண்மையில், கடும்போக்கை கொண்ட சிங்கள பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள், கடந்த மார்ச் மாதம் முதல், அதாவது 34வது கூட்டத் தொடரிலிருந்து ஜெனிவா மனித உரிமை சபை கூட்டத் தொடர்களில் கலந்து கொள்கிறார்கள்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள், சிறிலங்கா பாதுகாப்பு படைகளின் முன்னாள் அங்கத்தவர்களும், முன்னாள் ஜனதிபதி ராஜபக்சாவின் நெருங்கிய நண்பர்களும். இக்குழுவிற்கு தலைமை தாங்குபவர், சரத் வீரசேகரா எனும் முன்னாள் கடற் படை தளபதி. இவர் திருகோணமலை பஸ்தரிப்பின் மத்தியில், ஓர் பாரீய புத்தர் சிலையை முன்னின்று நிறுவியவர். 2020ல் மகிந்த ராஜபக்சா ஆட்சி அமைக்கும் வேளையில், சரத் வீரசேகராவே ஜெனிவா ஐ.நா.மனித உரிமை சபைக்கு பிரதிநிதியாக நியமிக்கப்படலாமென செய்திகள் ஊலவுகின்றன. இக் குழுவினர், தமிழர் மீது மிகவும் மோசமான இனத்துவேசத்தை ஜெனிவாவில் கக்குகிறார்கள்.

நவம்பரில் வரவுள்ள உலளாவிய காலக்கிரம ஆய்வு (யூ.பி.ஆர்)  மற்றும் அடுத்த மார்ச் மாதம் நடைபெறப்போகும் கூட்டத் தொடர் ஆகியவற்றில் இலங்கை அதிகளவுக்கு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என நினைக்கின்றீர்களா?

நவம்பர் 15ம் திகதி சிறிலங்கா பற்றி நடைபெறவுள்ள பூகோள காலக்கிரம ஆய்விற்கான (யூ.பி.ஆர்) அரச சார்பற்ற நிறுவானங்களின் அறிக்கைகள் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டு அவை தொகுக்கப்பட்டுள்ளது. இதற்கு எமது அமைப்பு உட்பட பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்கள் அறிக்கைகள் சமர்பித்துள்ளன. 

இறுதியாக 2012ம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா பற்றிய பூகோள காலக்கிரம ஆய்வில, பெரும் தொகையான நாடுகள், சிறிலங்காவிற்கு தொல்லை கொடுக்கும் பல வினாக்களை தொடுத்திருந்தனர். நடைபெறவுள்ள ஆய்வில் எந்தனை நாடுகள் என்ன வினாக்களை தொடுக்கவுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இச் சந்தர்பத்தில் சீனா, ராஸ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற சிறிலங்காவின் நட்பு நாடுகள், சிறிலங்காவின் தற்போதை அரசை புகழ்வார்கள் என்பதில் ஐயமுமில்லை.

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள 37வது கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. காரணம், சிறிலங்கா மீதான ஐ.நா. தீர்மானம் பற்றிய முதலாவது அறிக்கையை, ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் திரு குசேயின் வெளியிடவுள்ளார். நிட்சயம் இவ் அறிக்கை சிறிலங்காவிற்கு சில தாக்கத்தை கொடுக்கும். ஆனால் ஏற்கனவே இரு வருட அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால், சிறிலங்காவை ஐ.நா.மனித உரிமை சபையில், 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 40வது கூட்டத் தொடர் வரை, ஒன்றும் செய்ய முடியாது.

நவம்பர், அடுத்த மார்ச் கூட்டத் தொடர்களுக்காக நீங்கள் வகுத்திருக்கும் உபாயங்கள் என்ன?

இவ் வினாவிற்கு பதில் கூறுவது மிகவும் சிக்கலானது. காரணம், மனித உரிமை செயற்பாடுகள் நடைபெற்று வெற்றிகரமாக முடியும் வரை, நாம் எமது செயற்பாடு பற்றி ஊடகங்களில் விள்குவோமானால், அவற்றை சிறிலங்கா தமக்கு சாதகமாக பாவித்து கொள்ளும்.

சுருக்கமாக கூறுவதனால், 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 40வது கூட்டத் தொடருக்கான வேலை திட்டத்தை எமது அமைப்பு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரச தரப்பில் முன்னேற்றங்கள் இல்லையெனில் மனித உரிமைகள் ஆணையாளரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? 

நடைபெற்று முடிந்த 36வது கூட்டத் தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், “சிறிலங்கா மீதான ஐ.நா.தீர்மானம் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லையென” ஏற்கனவே கூறியுள்ளார். நிட்சயம் இதே போன்ற அறிக்கை எதிர்வரும் 37வது கூட்டத் தொடரிலும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியானாலும், 40வது கூட்டத் தொடரிலேயே சிறிலங்கா மீதான அடுத்த கட்ட நகர்வு  நாடுகளினால் முன்னெடுக்ப்படும். 

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், திரு குசேயினின் முதல் நாலுவருடங்கள் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுறவுள்ளதினால், இவரது சேவை காலம் நீடிக்கபடாவிடில், 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 40வது கூட்டத் தொடரில், வேறு ஒரு புதிய ஆணையாளரே பதவியிலிருப்பார்.

அவ் ஆணையாளர் கூடுதலாக தென் அமெரிக்கா லத்தின் அமெரிக்கா அல்லது ஐரோப்பா நாட்டை சாந்தவராகவே இருக்ககூடிய வாய்ப்புக்கள் உள்ளது. கரணம், ஐ.நா.வின் முக்கிய பதவிகள் எப்பொழுது பிராந்திய சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிறது. ஆணையாளர் பதவியில் மாற்றம் ஏற்பட்டால், அது சில வேளைகளில் விபரிதங்களையோ நன்மைகளையோ ஏற்படுத்த முடியும். ஆணையாளரின் அறிக்கை, சிறிலங்கா மீது கனாதியாக இல்லையானால், அங்கத்துவ நாடுகள் கரிசனை கொள்ள மாட்டாது. இதற்கு ஐ.நா.வில் செயற்பாட்டாளர்களது செயற் திட்டங்களும் முக்கியமானது.

தமிழீழ அகதிகள் விவகாரத்தை முன்வைத்து, அங்கத்துவ நாடுகளின் பகமையை தேடுவோமானால், சிறிலங்கா மீது உள்ள சர்வதேச தாக்கங்கள் படிப்படியாக தகர்த்தப்படும். இதற்கு நாம் வழி சமைக்க வேண்டுமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். (முற்றும்) 

ச. வி. கிருபாகரன்

பொதுச் செயலாளர், தமிழர் மனிதர் உரிமைகள் மைகயம், பிரான்ஸ்.