Oct 16

உனக்கு மட்டும்: மகளே எனக்கும் ஒரு மனதுண்டு

தலை வாரிவிட அம்மா வேண்டும், முதுகு தேய்த்துவிட அம்மா வேண்டும், உடல் பிரச்சினை பற்றிப் பேச அம்மா வேண்டும், பக்கத்து வீட்டுத் தாத்தா தொடுவது சரியான முறைதானா என உறுதிசெய்ய அம்மா வேண்டும், தூங்கும்போது மேலே கால் போடுவதற்கு அம்மா வேண்டும், வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போட அம்மா வேண்டும். ஆனால், யார் கேட்டாலும் கொஞ்சம்கூடத் தயக்கமின்றி அப்பாதான் பிடிக்குமென்பாள் என் மகள். அப்பாதான் ரொம்பப் பிடிக்கும் என்று அவள் சொல்லும்போது, அவள் தலையில் ‘நங்’என்று குட்ட என் கை பரபரக்கும். இருக்காதா பின்னே?

அவளை மட்டும் குறை சொல்வது அர்த்தமில்லைதான். அவள் ஏதாவது தவறு செய்திருந்தால் அவள் நன்மைக்காகத் தொண்டை கிழிய ஒரு மணி நேரம் கண்டித்து அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பேன். அவள் அப்பா வீட்டில் நுழைந்தவுடனே நடிகை சரோஜாதேவி மாதிரி, “அப்பா...” என்று அழுதுகொண்டு ஒடுவாள். அவரோ என்ன பிரச்சினை என்று கேட்காமலேயே, “பரவாயில்லை விடும்மா” என்பார். இப்படிச் செய்பவரை அவளுக்குப் பிடிக்காமலா இருக்கும்?

அவள் பிறந்தவுடன் அவரும் நானும் மகிழ்ந்தோம். ஆனால், ஏன்டா மகிழ்ந்தோம் என்று நினைக்கும் அளவுக்குத் தினமும் இம்சை தர ஆரம்பித்தாள். நான்தான் என் கணவருக்கு எல்லாமுமாக இருந்தேன். அவள் பிறந்த பின் நான் அவருக்கு இரண்டாம்பட்சமாகிவிட்டேன். சரி, என் மகள்தானே என்று சகித்துக்கொண்டு வாழப் பழகினேன். அவள் குழந்தையாக இருந்தபோது, எங்களுக்கு இடையில் படுக்க வைப்போம். ஆனால், அவள் பெரியவளாக வளரும்வரை எங்களுக்கு இடையில்தான் அடம்பிடித்துப் படுத்து இம்சை பண்ணுவாள். அவரும், “குழந்தை தானேம்மா முக்கியம்” என்று சொல்லிச் சிரிப்பார். எனக்குப் பத்திக்கொண்டு வரும்.

அவள் பெரியவளானாள். ஒரு மாதம் என்னையே சுற்றிச் சுற்றி வந்தாள். அந்த ஒரு மாதம் அவளுக்கு அப்பா இரண்டாம்பட்சமாக இருந்தார் என்று நினைக்கிறேன். அப்பொழுது என்னிடம் நிறையப் பேசினாள். இரவில் அவளுடன் நானும் கொஞ்ச நாள் தூங்கினேன். பின்பு அந்த வழக்கத்தை மாற்றுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. தயக்கமும் கூச்சமும் விலகிய பின் மீண்டும் அப்பாவுக்கும் மகளுக்கும் நான் இரண்டாம்பட்சமாகிவிட்டேன்.

சிறு வயதில், நான் எழுத்தாளர் பாலகுமாரனின் தீவிர ரசிகை. அவர் ஏதோ ஒரு நாவலில் நம் பெண்களின் பாரம்பரிய உடையான சேலைதான் இடுக்கு மற்றும் மடிப்புகளில் மாட்டாதவண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று எழுதியிருந்தார். அதன் தாக்கம் எனக்கு அதிகமாக இருந்ததால் வீட்டில்கூட நைட்டி அணிய மாட்டேன். பெரியவள் ஆனதும் இவளை நான் தாவணி அணியச் சொன்னேன். என்னை ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி பார்த்தாள். பண்டிகை தினத்தில் மட்டும் அணிந்துகொள்வதாகச் சொன்னாள். அதெல்லாம் முடியாது தினமும் அணிய வேண்டும் என்று நான் பிடிவாதம் பிடித்தேன். காரணம் கேட்டாள். அவள் புத்திசாலி, காரணம் சொன்னால் என்னை மடக்கிவிடுவாள் என்று தெரியும். எனவே, காரணம் சொல்லாமல் சமாளித்தவண்ணம், ‘பாகுபலி’ சிவகாமிதேவி போல் ‘இதுவே என் கட்டளை’ என்று முடித்தேன்.

சாயங்காலம் கணவர் வீடு திரும்பியதும் இவள் மீண்டும் சரோஜாதேவியானாள். அவர் வாய் திறப்பதற்கு முன்பே, “இதில் யாரும் தலையிடக் கூடாது, உங்களையும் சேர்த்துதான்” என்று கோபமாகச் சொன்னேன். அந்த மனிதர் கொஞ்சம்கூட அசராமல் என்னைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார். வீட்டில் நம்மை இப்படி ஒரு ‘காமெடி பீஸ்’ஆக நினைக்கிறார்களே என எண்ணி இன்னும் அதிகமாகக் கோபம்கொள்ள முயன்றேன். மனிதர் சட்டென்று வெளியே சென்றுவிட்டார். நானே கொஞ்சம் அரண்டுவிட்டேன். ஏனென்றால், இதுவரை அப்படி அவர் சென்றதே இல்லை.

மகளைவிட அப்பா ரொம்ப புத்திசாலி. ஒரு மணி நேரத்தில் கையில் ஒரு கவருடன் திரும்பினார். என்னவென்று பிரித்துப் பார்த்தால் அதில் ஒரு சுடிதார் இருந்தது. கோபத்தில் கத்த வாயைத் திறக்கும் முன்னே “இது உனக்கு” என்றார். சொல்லச் சொல்லக் கேட்காமல் அப்பாவும் மகளும் சேர்ந்து எனக்கு சுடிதாரை மாட்டிவிட்டார்கள். நானோ கூச்சத்தில் நெளிந்தேன். “சூப்பரா இருக்கேம்மா!” என்று உற்சாகமாகக் கத்தினாள் மகள். அவரும் எனக்கு வெட்கம் வருமளவுக்குப் புகழ்ந்து தள்ளினார்.

என்னை எப்பொழுது, எப்படி ஒளிப்படம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. காலையில் என் அக்கா மகள் அமெரிக்காவிலிருந்து போன் பண்ணி, “சித்தி சுடிதாரில் பத்து வயது குறைஞ்ச மாதிரி இருக்கீங்க, ஃபேஸ்புக்கில் பார்த்தேன்” என்று சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அன்று முழுவதும் போன் வழியாகப் பாராட்டு வந்தவண்ணமே இருந்தது.

ஒருவழியாக என் மகள் பள்ளி முடித்து, கல்லூரி சென்றாள். தனக்கு ஜீன்ஸ் வேண்டுமென்று கேட்டாள். எதுவும் பேசாமல் உடனே வாங்கிக் கொடுத்தேன். ஒரு தடவை பட்டது போதாதா? ‘அபியும் நானும்’ படத்தை அப்பாவும் மகளும், டிவிடி தேயத் தேய பார்த்தார்கள். ‘தங்க மீன்கள்’ பார்த்து அவர்கள் அடித்த லூட்டியில் அந்தப் படமே எனக்குப் பிடிக்காமல் போனது. வீட்டில் அப்பொழுது யாழ் மட்டும்தான் இல்லாத குறை. ஏதாவது சொன்னால், ‘உனக்குப் பொறாமை’ என்பார்கள். முதலில் கோபமாக இருக்கும், பின்பு அது உண்மைதானே என்று உணர்ந்ததால், கோபம்கொள்வதை நிறுத்திவிட்டேன்.

காதலை அப்பாவிடம் சொல்வதற்கு என் உதவியை நாடினாள். அவருக்கு இஷ்டமில்லை என்ற போதிலும், என் பிடிவாதத்தால் திருமணத்துக்குச் சம்மதித்தார். திருமணத்துக்குப் பின் அவள் இல்லாமல் எனக்குதான் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. இப்பொழுது அவள் கருவுற்றிருக்கிறாள். அவளுக்குப் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக்கொள்கிறேன்.

- சுகந்தி, கோவை.