Apr 23

தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்?; அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தொகுப்பு

மன்னார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன? எனும் தலைப்பிலான  கருத்தாய்வு  நிலை கருத்து  பகிர்வுறவாடல் நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா நகர விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. 

இதன்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரெஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் முன்வைத்த கருத்துக்கள் வருமாறு. 

புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பங்காளிக்கட்சியாக இருக்கும் எல்லாக்கட்சிகளுமே முடிவெடுக்கும் விடயத்தில் ஒரு பங்காளிகளாக இருக்கவில்லை. இருந்தாலும் எங்களுக்கு கூட்டுப்பொறுப்பு இருக்கின்றது. அந்த கட்சியில் அங்கத்துவமாக இருக்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றோம்.

இருந்தாலும் கட்சியில் எப்போதாவது நடக்கின்ற கூட்டங்களில் ஆனந்தனும், பிரேமச்சந்திரனும் மிகத்தெளிவாக விடயங்களை கூறுகின்றார்கள். அதாவது கூட்;டுப்பொறுப்பு விலத்திச்செல்வதை தெளிவாக கூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில் நீங்கள் ஏன் தொடர்ந்தும் இருக்கின்றீர்கள் என்ற கேள்வி வருகின்றது. இந்த விடயத்தில் என்னைப்பெறுத்தவரையிலும் எங்கள் கட்சியைபொறுத்தவரையிலும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

அதாவது இன்றிருக்க கூடிய அரசியல் சூழலில் அரசியலமைப்பு தொடர்பான வரைவுகள் நடந்துகொண்டிருக்கும்போது அரசியலமைப்பு சரியாக வரும் என்று நான் கூறாவிட்டாலும் அது முற்றுப்புள்ளிக்கு சென்ற நிலை இருந்தாலும் நாம் கலந்துரையாடும் வெளிநாட்டு தூதரகங்களாக இருக்கலாம் அல்லது மக்களாக இருக்கலாம் எங்களுக்கு சொல்வது  நீங்கள் குழப்பிவிடாதீர்கள் என்பதோகும். 

கூட்டமைப்புக்குள்ளே ஒரு உடைவு வந்து அது சிதைவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டால் அது அரசிற்கு சாதகமாக மாறிவிடும். அவர்கள் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை அவர்களே ஒன்றையும் சீராக சொல்கின்றார்கள் இல்லை.

நாங்கள் என்ன செய்வது என்று சர்வதேசத்திற்கு கூறி தம் பக்கத்தை நியாயப்படுத்தும் நிலை ஏற்படும். இது எமக்கு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்பை இல்லாமல் பண்ணிவிடும். இதனாலேயே எங்களுக்கு தெரியாமல் நடக்கும் விடயங்களில் கூட நாம் மௌனியாக இருக்கின்றோம் என்றார். 

சுரேஸ் பிரேமச்சந்திரன் 

2015ஆம் ஆண்டுக்கு பிற்பாடு  தமிழத் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி பதவியை ஏற்றுக்கொண்டதன் பிற்பாடு இந்த அரசாங்கத்தால் பல்வேறு விடயங்களை நிறைவேற்றலாம் என்று எமது தலைவர்கள் வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.

அதன் அடிப்படையில் அவ் வாக்குறுதிகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனப் பர்க்க வேண்டும். அவ் வாக்குறதிகள் நிறைவேற்றப்படவில்லையாயின் அதற்கான காரணங்கள் என்ன என்ற அடிப்படையில் இருந்து கடந்த காலத்தை பார்க்கின்றபோது நாம் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுகின்றது.

யுத்தத்திற்கு பிற்பாடு  வடக்கு மாகாணத்தில் 15 டிவிசன் இராணுவத்தினர் இருந்தனர். அதில் 1 50, 000 இராணுவம் இருந்தது. என்னைப் பொறுத்தவரையில் அதேயளவு இராணுவம் இன்னும் இருக்கின்றது. முகாம்கள் மாற்றப்பட்டிருக்கலாம் ஆனால் 5 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 3 டிவிசன் என்ற வகையில் இன்னும் அதேயளவு இராணுவம் இருக்கின்றது. 

இதற்குமப்பால் கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு படை, பொலிஸ் என்பனவும் உள்ளது. வடக்கு மாகாணத்தில் இறுதியாக எடுத்த தரவுகளின் அடிப்படையில் பத்து இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள்.

இதனடிப்படையில் பார்க்கின்றபோது மூன்று நான்கு தமிழர்களுக்கு ஒரு இராணுவம் என்ற வகையில் உள்ளதால் எந்தளவு தூரம் நாம் இராணுவ அடக்குமுறைக்குள் இருக்கின்றோம்.

இராணுவத்தினரை வீதியில் பார்க்க முடியவில்லை என்று சிலர் கூறுக்கின்றனர்.  ஆனால் எந்த சிறிய கூட்டத்தினை நடத்தினாலும் அனைத்து புலனாய்வு பிரிவுகளும் உள்ளதாகவே நிகழ்வை நடத்தவேண்டியுள்ளது. இவை யுத்தத்திற்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைகள். 

மக்களை மீளக்குடியேறவேண்டும். அதற்கு நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும். அதற்கு இராணுவம் வெளியேற வேண்டும். எனவே வடக்கில் உள்ள இராணுவத்தினரை 9 மாகாணங்களுக்கும் பிரிக்கவேண்டும்.

அவ்வாறு செய்தால் வடக்கில் மக்களை குடியற்றுவதற்கான நிலங்கள் வெளிப்படும். எனினும் அவ்வாறு செய்யாமல் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதே நடைபெறுகின்றது.

இந்நிலையில் சம்பந்தன்,  மைத்திரி ஒரு இனவாதி அல்ல அவரை நாம் நம்புகின்றோம் என்கின்றார். ரணில் விக்கிரமசிங்கவை நம்புகின்றோம் என்கின்றார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான்  அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தவேண்டாம்.

எழுக தமிழ் நிகழ்வை நடாத்தவேண்டாம். அமைதியாக இருங்கள் நீங்கள் நடத்தும் போராட்டங்கள் குழப்பங்களை உருவாக்கும் என்று பேசி வந்ததெல்லாம் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான். 

சுமந்திரன் ஏன் பொய்யான தகவல்களை செல்லவேண்டும். எந்த வித எழுத்து மூல நிபந்தனையும் இன்றி கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவளித்தது. ஆனால் இன்று சுமந்திரன் சொல்கின்றார்  காணிகளை விடுவிப்போம் என் மைத்திரிபால சிறிசேன எழுத்துமூலம் உத்தரவாதம் தந்துள்ளதாக பொய் கூறுகின்றார்.

அவ்வாறு தந்திருந்தால் அந்த ஆவணத்தினை காட்டவேண்டும். ஆனால் அவ்வாறு எந்தவிடயமும் நடைபெறவில்லை என்பதே உண்மை. இதனைப் பார்க்கின்றபோது இவர்கள் தற்போது தமிழ் மக்களிடம் பொய்களை கூறத ;தொடங்கியுள்ளனர். 

அபிவிருத்தி தொடர்பான பக்கமாக இருக்கலாம். இராணுவமயமாக்கலில் இருந்து விடுவிக்கப்படும் விடயங்களாக இருக்கலாம் அல்லது அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயங்களாக இருக்கலாம் நாங்கள் அனைத்திலும் தோல்வியடைந்தவர்களாக இருக்கின்றோம். 

ஆகவே அடுத்தது என்ன என்பது தொடர்பில் சிந்திக்கவேண்டியவர்களா நாம் இருக்கின்றோம். தற்போது இருக்ககூடிய தலைமை தவறான பாதையில் செல்வதாக இருந்தால் மாற்றுத்தலைமை என்பது தேவை. 

அந்த தலைமை தற்போதுள்ள தலைமை விட்ட தவறுகளை மீண்டும் விடுவதற்காக அல்ல. புதிய யுக்திகளை, புதிய தந்திரோபாயங்களை வகுத்து எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னெடுத்து சென்று வெற்றிபெறலாம் என்ற அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும் என்றார்.

உறுப்பினர் அனந்தி சசிதரன்

வடக்கில் இராணுவம் குறைந்து சென்றமைக்கு வட மாகாணசபையே காணரம் என வட மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்தார். ஆனால் இன்றும் பல பாடசாலை நிகழ்வுகளில் இராணுவத்தினை அழைக்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது. இது வடமாகாண கல்வி அமைச்சர் வாகனத்தில் செல்லுவதனால் தெரியவில்லை போல் உள்ளது. 

நாங்கள் நடத்துகின்ற அறவழி போராட்டங்கள் அனைத்திலும் இராணுவத்தினரதும், இராணுவ புலனாய்வாளர்களின் கண்கானிப்பும், அச்சுறுத்தலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த சூழல் மாறிவிட்டது என்ற தோரணையை மக்களுக்கு சொல்லி விட முடியாது. 

தடுமாறும் தமிழ் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள் என்பது கேள்வியாக இருக்கத்தேவையில்லை அது விடையாகவே போகலாம். ஏன் எனில் என்னைப்போன்ற பாதிக்கப்பட்ட தமிழர்கள் தளர்வடைந்து விட்டோம் என்பதுதான் உண்மையான செய்தி. 

அண்மையில் ஐ.நாவில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக 02 வருட கால நீடிப்பை வழங்கிதற்கு எதிராக பல நாடுகளுடனும், சில மனித உரிமை அமைப்புக்களுடனும் கலந்துரையாடி இருந்தோம்.

அப்போது அவர்கள், அந்நாடுகள் கூறிய கருத்து நீங்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும்  கூட உங்களது கட்சியின் தலைமை இரண்டு வருட கால அவகாசத்தை கொடுக்கச்சொல்லி கூறுகிறார்கள்.

அதுவும் அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள் மற்றும் இங்கே பேசவல்லவர்களாகவும் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

போர் முடிந்த பின்னர் 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் கூட அமெரிக்க அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கொண்டு வந்த 30.1 தீர்மாணத்தில் எதையும் நிறைவேற்றவில்லை.

ஆனால் மீண்டும் இரண்டு வருட காலங்கள் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டவர்களிற்கு இது எவ்வாறு இருக்குமோ தெரியவில்லை? ஆனால் என்னைப்போன்ற பாதிக்கப்ட்டவர்களிற்கு மிகவும் சோர்வான தளர்வான நிலையை உருவாக்கியுள்ளது. 

என்னதான் அரசியல் தீர்வு கிடைக்கும் என எண்ணினாலும் கூட நாங்கள் நினைக்கின்ற, எதிர்பார்க்கின்ற ஒரு நியாயமான அரசியல் தீர்வு எங்களிற்கு கிடைக்காமல் போய்விடும் என்ற வருத்தம் எங்களிற்கு இருக்கின்றது. 

ஐ.நாவில் குறிப்பிட்டதை நிறைவேற்றுகின்றோம் என வாக்குறுதி கொடுப்பதும், அதே சம நேரம் இங்கிருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர்;, அமைச்சர்களும்  இங்கே போர் குற்றம் எதுவும் நடைபெறவில்லை என பேசுவதும் தாங்களே குற்றங்களை நடாத்தி விட்டு விசாரித்து நீதியை வழங்குகின்றோம் என சொல்வதும் நல்ல ஆரோக்கியமான சூழலாக தெரியவில்லை என்றார்.