Apr 23

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக வசந்திக்குத் திடீர்ப் பதவி நீடிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்துக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த துணைவேந்தர் பதவியைப் பொறுப்பேற்கும் வரை பணியில் தொடருமாறு அவருக்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 
துணைவேந்தர் நியமனத்திற்குள் வெளித் தலையீடுகள், குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே தற்போதைய துணைவேந்தருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது.

அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் புதிய துணைவேந்தர் ஒருவர் இன்னமும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவில்லை. 

துணைவேந்தர் தேர்தலில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் பெயர் விவரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

அவற்றின் அடிப்படையில் வாக்குகள் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்த பேராசிரியர் சற்குணராசாவைத் துணைவேந்தராக நியமிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அது தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.
 
அதன் பின்னர் இந்த நியமனம் தொடர்பில் ஆட்சியில் உள்ள தரப்புகள் சில துணைவேந்தராக வேறு ஒருவரை நியமிக்கும்படி அழுத்தம் கொடுத்ததாகவும், மூன்றாவது தரப்பை நியமிக்கும்படி வேறொரு தரப்பு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது. 

இதனை அடுத்தே துணைவேந்தர் நியமனம் தள்ளிப்போயுள்ளது என்று தெரிகின்றது.