Apr 23

ஐ.பி.எல் திருவிழா குஜராத்தை வென்றது பஞ்சாப்

ஐ.பி.எல். தொடரின் 26ஆவது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதியிருந்தன.

நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பை குஜாராத் தெரிவு செய்ய பஞ்சாப் துடுப்பெடுத்தாடியது.  

முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அம்லா (65), ஷோன் மார்ஷ் (30), மெக்ஸ்வெல் (31), அக்சார் பட்டேல் (34) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களைக் குவித்தது.

189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணியின் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 

குஜராத் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மெக்கல்லம் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ரெய்னா களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் பிஞ்ச் 13 ஓட்டங்களில் வெளியேற, ரெய்னா 32 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

70 ஓட்டங்களுக்கு முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்த குஜராத் அணியால், சரிவில் இருந்து மீள முடியாமல் போனது. தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காது 44 பந்தில் 58 ஓட்டங்கள் சேர்க்க, குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் பஞ்சாப் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா, கரியப்பா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். அம்லா ஆட்டநாயகனாக தெரிவானார்.