Oct 13

முப்படையினருடன் தீபாவளி கொண்டாட்டம்: நிர்மலா சீதாராமன் முடிவு

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாட முடிவு செய்துள்ளார்.

கொண்டாட்டம்:

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியாவின் முப்படைகளும் அந்தமான நிகோபார் தீவுகளில் நிலைகொண்டுள்ளன. அங்கு வரும் 18ம் தேதி(அக்.,18) பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். முப்படைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் தினமான அக்.,19ம் தேதி, முப்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் பயணம்:

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இரு நாட்கள் சுற்றுப்பயணமாக நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். அக்., 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் பிலிப்பைன்ஸ் செல்லும் அவர், அந்நாட்டு தலைவர்களுடன் ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சரான பின், நிர்மலா சீதாராமன் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.