Oct 13

அதிபர் ட்ரம்பபை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் கனேடிய பிரதமர்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளன.

அமெரிக்க தலைநகர் வோசிங்டனுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஜஸ்டின் ரூடோவை  வெள்ளை மாளிகையில் வரவேற்ற அமெரிக்க அதிபர்,  இந்த சந்திப்பின் போது குறிப்பாக NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பில் விவாதித்துள்ளார்.

குறித்த இந்த உடன்பாட்டில் இருந்து விலகப் போவதாக அமெரிக்க அதிபர் அச்சுறுத்தல் விடுத்துவரும் நிலையில், அது குறித்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்றைய இந்த தலைவர்களது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல் குறித்து அதன் முடிவில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், NAFTA உடன்பாடு குறித்து கலந்துரையாடியதாகவும், இந்த ஒரு ஆண்டின் பின்னர் இதன் சாத்தியத் தன்மை குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய பிரதமர் தனது நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முயற்சிப்பது போல, தாமும் அமெரிக்க தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டியுள்ளதாகவும், எனவே இந்த ஒப்பந்தமானது இரு தரப்புக்கும் நீதியானதாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பொருளாதாரம், பண்பாடு, மக்கள் என்று அனைத்து வகையிலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ள இந்த இரண்டு நாடுகளும் மிகவும நெருக்கமான உறவினைப் பேணி வருவதாகவும், அதனால் இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையேயான ஆக்கபூர்வமான உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்த ஆண்டில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.