Oct 13

தண்ணீர் யானைப் பிரச்சனைக்கு மத்தியில் போராடும் மைலந்தனை மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைப் பிரிவில் காணப்படும் புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்ட மீள் குடியேற்ற  கிராம மக்கள் வரட்சி மற்றும் யானைகளின் தொல்லைகளால் பெரிதும் கஸ்டப்படுவதாக தெரிவிக்கின்றனர். 

புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்ட மயிலந்தனை, காசலம்பன்சேனை, அணைக்கட்டு, முள்ளிவட்டவான் ஆகிய கிராமங்களில் 230 குடும்பங்களில் 830 பேர் வசித்து வருகின்றனர். இதில் மயிலந்தன்னை கிராமம் கடந்த கால அசாதார சூழ்நிலை நிலவிய காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமமாகும் 1992.08.09ம் திகதி இனம் தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கி ரவைகளுக்கு சிறுவர்கள் பெரியவர்கள் என 35 பேரை இழந்த இக்கிராமம் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மீண்டும் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

தங்களது ஜீவனோபாயத்திற்காக விவசாயம், நன்நீர் மீன் பிடி, கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டு வரும் இக் கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரை தங்களுக்கு குடி நீர் இன்றி காணப்படுவதாகவும் அக்காலப் பகுதியிகளில் கிணறுகளில் நீர் வற்றுவதுடன் மகாவலி கங்கையில் இருந்து மயிலந்தன்னை கிரமத்திற்கு விவசாயத்திற்காக வரும் “விஸர் ஓடை” என்று அழைக்கப்படும் ஓடையிலும் நீர் குறைந்துள்ளதனால் எங்களது அன்றாட தேவைக்கும் எங்களது கால்நடைகளுக்கும் நீர் இன்றி கஸ்டப்பட்டு வருவதாகவும் குடி நீர் பிரச்சினைக்கு எங்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மாவட்ட அரசியல்வாதிகளும் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். 

இப்பகுதிகளில் யானைகளில் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதால் இரவு நேரங்களில் அச்சத்துடன் ஒவ்வொரு இரவையும் கழிப்பதாகவும், யானைகள் வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாயங்களை தொடர்ந்து சேதப்படுத்துவதால் நாங்கள் பொருளாதார ரீதியாக கஸ்டப்படுவதுடன், யானை வேலிகளை அமைத்து தருமாறு தேர்தல் காலங்களில் வரும் அரசியல்வாதிகளிடம் ஒட்டுமொத்த கிராம மக்களின் தேவையாக விண்ணப்பம் வைப்போம். அதனை நிறைவேற்றுவோம் என்று சொல்லி செல்வார்கள். ஆனால் தேர்தல் முடிந்தால் அடுத்த தேர்தலுக்குத்தான் சந்திக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

இதேவேளை எங்கள் பிரதேசத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபையால் ஆறு நீர் தாங்கிகள் எங்கள் கிராமத்திற்குள் வைத்து அதற்குள் நீர் வழங்கி வருகின்றனர் அது தினமும் நீர் வழங்கப்படுவதில்லை ஆறு நாள் ஏழு நாட்களுக்கு ஒரு முறைதான் எங்கள் கிராமத்திற்கு பிரதேச சபையால் நீர் வழங்கப்படுகின்றது இது போதுமானதாக இல்லை என்றும் பிரதேச சபையால் தினமும் நீர் வழங்கப்படுமாக இருந்தால் உதவியாக இருக்கும் என்றும் கோறிக்கை விடுக்கின்றனர்.

இப்பகுதியில் வரட்சி காரணமாக பயிரினங்கள் கருகி காணப்படுவதுடன் கால்நடைகளுக்கும் நீர் இன்றி அப்பகுதி கால் நடை வளர்ப்பாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், யானைகளில் தொல்லைகளால் ஒவ்வொரு இரவுகளையும் அச்சத்துடன் கழிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.