Apr 22

ஐ.பி.எல் திருவிழா ; புனேக்கு 'த்ரில்' வெற்றி பெற்றுக்கொடுத்த டோனி

ஐ.பி.எல். தொடரில் 24ஆவது   போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக நாணயச் சுழற்சியில் வென்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணித் தலைவர் ஸ்மித் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

புனே அணியில் 17 வயதே ஆன தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்  யுவராஜ் சிங் உடல் நலக் குறைவால் விளையாடவில்லை. 

ஐதராபாத்  அணியின்  டேவிட் வோர்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஐதராபாத் அணி 8.1 ஓவரில் 55 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது தவான் 30; ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் (21) டேவிட் வோர்னர் (43)  ஹென்றிக்ஸ் (55) ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்கு  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பேட்டிங்கை தொடங்கியது. ரகானே மற்றும் திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம்  இறங்கினார்கள். ரகானே (02) ஸ்டீவன் ஸ்மித் (27)  திரிபாதி (59) ஸ்டோக்ஸ் (10) ஆட்டமிழக்க புனே அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

23 பந்தில் 56 ஓட்டங்கள் தேவைப்பட்ட  டோனி களத்தில் இருந்தார். டோனியுடன் மனோஜ் திவாரி ஜோடி சேர்ந்தார். 18ஆவது ஓவரை மொகமட் சிராஜ் வீசினார். 

இந்த ஓவரில் திவாரி ஒரு பவுண்டரி, டோனி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க புனே அணிக்கு 17 ஓட்டங்கள் கிடைத்தன. இதனால் கடைசி 12 பந்தில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

19ஆவது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார்.  டோனி, முதலாவது பந்தை பவுண்டரிக்கு விரடிட்டியவர்  3ஆவது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் 19ஆவது ஓவரில் 19 ஓட்டங்கள் கிடைத்தன.

இறுதி 6 பந்தில் 11 ஓட்டங்கள்; தேவைப்பட்டது. 20ஆவது ஓவரை கவுல் வீசினார். முதல் பந்தை திவாரி லெக் சைடு தூக்கி அடித்தார். கேட்ச் ஆக சென்ற பந்தை ரஷித் கான் பிடிக்க தவறினார். 

அத்துடன் பந்து பவுண்டரிக்குச் சென்றது. 2, 3 மற்றும் 4ஆவது பந்தில் தலா ஒரு ஓட்டங்கள் எடுத்தனர். ஐந்தாவது பந்தில் 2 ஓட்டங்கள்; எடுத்தனர். இதனால் கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்டன. 

இறுதிப்பந்தை டோனி சந்தித்தார். எக்ஸ்ட்ரா கவரில் சிறப்பாக டோனி பவுண்டரி அடிக்க புனே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டோனி 34 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 61 ஓட்டங்களையும்;, மனோஜ் திவாரி 8 பந்தில் 3 பவுண்டரியுடன் 17 ஓட்டங்களையும்; எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டோனி ஆட்டநாயகனாக தெரிவானார்.