Apr 22

ஐ.பி.எல் திருவிழா; ரெய்னா அபாரத்தால் குஜராத் வெற்றி

ஐபி.எல் .தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற 23ஆவது ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற குஜராத் தலைவர் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து  துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணிக்கு காம்பீர், சுனில் நரேன் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. சுனில் நரேன் (42) காம்பீர் (33) ரொபின் உத்தப்பா (72) மணீஷ் பாண்டே (24)  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க  20 ஓவர்களில் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 187 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 188 ஓட்டங்கள்; இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் ஆரோன் பின்ச், மெக்கலம் ஜோடி அதிரடியாக விளையாடியது.ஆரோன் பின்ச் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

குஜராத் அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்கள்  எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் ஆட்டம் ஆரம்பமானது. எனினும் ஓவர்கள்  ஏதும் குறைக்கப்படவில்லை. மெக்கலம்  (33)  தினேஷ் கார்த்திக் (03) , இஷான் கிஷன்(04), டுவைன் ஸ்மித்(05)  என விக்கெட்கள் சரிந்த போதும் ரெய்னா அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.

தொடர்ந்தும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய அவர் 46 பந்துகளில் 84 ஓட்டங்கள்  விளாசி ஆட்டமிழக்க கடைசி கட்டத்தில் ஜடேஜாவும், பாக்னரும் நிதானமாக விளையாடி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 188 ஓட்டங்களைப் பெற்று  அணியின் வெற்றிக்கு வழிகோலினர்.