Mar 04

வடகொரிய தூதுவரை வெளியேற்றியது மலேசியா

வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜாங் நம் கடந்த 13ஆம் திகதி  மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். 

விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட 'வி எக்ஸ்' என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இக்கொலை தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது  வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பல வடகொரியர்களை மலேசிய பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கிம் ஜாங் நம் கொலை வழக்கின் விசாரணை குறித்து வடகொரிய தூதுவர் காங் சோல் விமர்சனம் செய்திருந்தார்.. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மலேசிய அரசாங்கம் வலியுறுத்தியது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் சார்பில் தூதரக அதிகாரி யாரும் நேரில் ஆஜராகி விளக்கமும் அளிக்கவில்லை. இதையடுத்து வடகொரிய தூதரை வெளியேற்ற மலேசிய அரசாங்கம் முடிவு செய்தது

அதன் பிராகரம்  வடகொரிய தூதுவர் காங் சோல் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டு வடகொரிய தூதரகத்திற்கு இன்று உத்தியோக பூர்வமான அறிவிப்பு அனுப்பியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனிஃபா அமான்  கூறியுள்ளார்.