Apr 22

மாகாண சபையின் அதிகாரங்களை பறிப்பது எந்த வகையில் நியாயம் –கிழக்கு முதலமைச்சர் கேள்வி

கொலன்னாவை மீதொட்டுமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் மத்தியரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்க முயல்வது எந்த வகையில் நியாயம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வியெழுப்பினார்,

 

மத்தியரசின் அதிகாரிகள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் மீதும் குப்பை மேட்ட சரிவு தொடர்பில  பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எவ்வாறு மாகாண அரசாங்கத்தின் அதிகாரங்களை பறிப்பதை இதற்கான தீர்வாக முன்வைக்க முடியும் எனவும் முதலமைச்சர் வினவினார்.

 

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்தார்.

 

இதன் போது மேலும் கருத்து  தெரிவித்த கிழக்கு முதலமைச்சர்,

தேசிய ரீதியில் கழிவகற்றல் முகாமைத்துவம்  தொடர்பில்  உரிய திட்டங்கள் இன்மையினாலேயே  கடந்த ஆட்சி காலத்திலும்  இந்த ஆட்சி காலத்திலும் குப்பைகளை  கொட்டுகின்ற இடங்கள் தொடர்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் காலாகாலமாக மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன,


ஆனால் எந்த அரசாங்கங்கள் மாறி மாறி வந்த  போதிலும் குப்பைகளை கொட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு  இற்றைவரை நிரந்தரமான  தீர்வை வழங்க தவறியுள்ளன என்ற குற்றச்சாட்டையே  சமூக ஆர்வலர்களும் ,மக்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றமையையே சுட்டிக்காட்ட வேண்டும்,


இன்று கூட கொலன்னாவையிலுள்ள குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல முற்படுவதாகவும் அந்தக் குப்பைகளை தமது பகுதிக்கு கொண்டு வர வேண்டாம் எனக் கூறி புத்தளம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர் .

 

எனவே குப்பைகளை இடம்மாற்றுவது நாட்டின் கழிவு முகாமைத்துவ திட்டமாக அமையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

இன்று  மட்டக்களப்பு மாவட்டத்தில் கழிவகற்றல்  செயற்பாட்டிற்காக நாம் கொடுவாமடு திண்மக்கழிவகற்றல்  முகாமைத்துவ நிலையத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.


இதனூடாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் வேறு வேறாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை கொடுவாமடு கழிவு முகாமைத்துவ நிலையத்தில் மீள்சுழற்சி செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

 

இது  நீண்டகாலத் திட்டமாகவே  நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இதனூடாக ஓரீடத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் நிலைமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

 

ஆகவே  கழிவுப் பிரச்சினைக்கு  உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறித்தெடுத்து  மத்திய அரசாங்கத்துக்கு வழங்கும் தீர்வு என்பது தலைவலிக்கு தலையணை மாற்றுவது போலாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,

 

 இதற்கு முன்னரும் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுப்பதற்கான அதிகாரத்தையும் மாகாண அரசாங்கத்திடமிருந்து பறித்தெடுக்கும் செயற்பாட்டை மத்தியரசு மேற்கொண்டிருந்தது.

 

ஆகவே  மீதொட்டுமுல்லை  குப்பை மேடு தொடர்பில் மத்தியரசு மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதுடன் மாகாண அரசு  மீது எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லாத நிலையில்  மாகாண அரசின் அதிகாரத்தை மத்திய அரசு எந்த  தார்மீக அடிப்படையில் பறித்தெடுக்க முற்படுகின்றது என்பதை நாம் கேட்காமல் இருக்க முடியாது.

 

இது  தொடர்பான பிரேரணையொன்றையும் நாம் எதிர்வரும் 25 ஆம் திகதி நாம் மாகாண சபையில் கொண்டுவரவுள்ளதுடன்  முதலமைச்சர்கள் அனைவரும் கூடி இது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்