Oct 12

சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் முனைவர் அசோகா பண்டாரகே

கடந்த செப்தெம்பர் 21, 2017 அன்று பிரதமர் இரணில் விக்கிரமசிங்கா  அரசியலமைப்பு வழிநடத்தல்  குழுவினால் தயாரிக்கப்பட்ட  இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு பேரவையில் தாக்கல் செய்தார்.

அரசியலமைப்பு செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட 06 உபகுழுக்களின் அறிக்கைகள் மற்றும் மக்கள் கருத்தறியும் லால் விஜயநாயக்கவின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த இடைக்­கால  அறிக்கை மீதான விவாதம் இம்­மாதம் 30, 31 ஆம் திகதிகளிலும் மற்றும் நொவெம்பர் முதலாம் திகதியும் நடைபெறும். 

பிரதமரினால் தாக்கல் செய்யப்பட்ட  இடைக்கால அறிக்கை வடக்கிலும் தென்னிலங்கையிலும் சூடான வாதத்தை எழுப்பியுள்ளது.  வழமை போல   தென்னிலங்கை சிங்கள - பவுத்த தேசியவாதிகள் இந்த அறிக்கைக்க எதிராக தீவிரமாகப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அதே சமயம்  தீவிர தமிழ்த் தேசியவாதிகள் இந்த  இடைக்கால அறிக்கையை  யானை பார்த்த குருடன் கதை போல பலவிதமாகக் கண்டித்துப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். 

ஒரே பொருள் ஆனால் வியாக்கியானம் நேர் எதிர்மாறாக இருக்கிறது. இந்த இடைக்கால அறிக்கையில் ஒன்றுமே இல்லை என தீவிர தமிழ்த் தேசியவாதிகள் ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள். இந்த இடைக்கால அறிக்கையில் வட கிழக்கு இணைப்பு இல்லை,   இணைப்பாட்சி இல்லை, காணி அதிகாரம் இல்லை, காவல்துறை அதிகாரம் இல்லை எனப் புலம்புகிறார்கள்.

ஒரு சிலர் இப்போதிருக்கிற யாப்பை விட இந்த உத்தேச யாப்பு மோசமாக இருக்கப் போவதாகவும்   கிளி சோதிடம் சொல்கிறார்கள். இவர்கள் எந்தத் தீர்வுத் திட்டமும் வந்து விடக் கூடாது என்பதில் கரிசனையாக இருக்கிறார்கள்.  மொத்தத்தில் இடைக்கால அறிக்கையை ஆதரிப்பவர்களை விட அதனை எதிர்த்து விமரிசனம் செய்பவர்களே அதிகம். தமிழர்கள் எப்போதும் உணர்ச்சி வசப்படும் குணம்  கொண்டவர்கள். உணர்ச்சிவசப்படுத்தும் பண்பு கொண்டவர்கள்.  இந்தக் குணம் தமிழர்களிடமிருந்து மாறவேண்டும். 

மறுபுறம் தீவிர சிங்கள - பவுத்த தேசியவாதிகள் இந்த இடைக்கால அறிக்கை இணைப்பாட்சிக்குப் போடப்பட்டுள்ள அத்திவாரம் என்கிறார்கள். மத்திய அரசு இனிப் பெயருக்கு மட்டும் இருக்கப் போகிறது, எல்லா அதிகாரங்களும் மாகாண சபைக்கே வழங்கப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள் அல்லது  எழுதுகிறார்கள். 

ஓர் அரசியல் யாப்பை உருவாக்கு என்பது எளிதான செயல் அல்ல. அதிலும் இலங்கை போன்ற பல்லின,  பல்சமயங்கள், இருமொழி  பேசுகின்ற நாட்டில்  எல்லோரது நலன்களையும் உள்ளடக்கக் கூடிய யாப்பை எழுதுவது கடினம். 

இலங்கை  பெப்ரவரி 4, 1948 இல் சோல்பெரி யாப்பின் கீழேதான் சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் 1972 இல் ஒரு யாப்பு எழுதப்பட்டது.  பின்னர் இப்போது நடைமுறையில் உள்ள  யாப்பு 1978 இல் ஒரு யாப்பு உருவாக்கப்பட்டது.  இப்போது நான்காவது  யாப்பை எழுதும் முயற்சியில் இலங்கை அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்கள். அதாவது 70 ஆண்டு கால வரலாற்றில் நான்கு அரசியல் யாப்புக்கள்.

ஒரு யாப்புத்தான் நாட்டின் மிக உச்ச அதிகாரம்   (supreme) படைத்த  சட்டமாகும். ஒரு நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, அமைதி,  பொருளாதார மேம்பாடு, ஆட்புல உறுதிப்பாடு எல்லாமே அந்த நாட்டின் யாப்பில்தான் தங்கியிருக்கிறது.

மன்னர் காலத்தில் மன்னன் உயிர்த்தே  மலர்தலை உலகம் என்ற கோட்பாடு இருந்தது. மக்களுக்கு மன்னன்தான் உயிர். அதனை உணர்ந்து கொள்வது அவனது கடமை. இறைமையும் மன்னனிடமே இருந்தது. இன்று மன்னர்கள் இல்லை. மக்கள்தான் மன்னர்கள். மக்களிடம்தான் இறைமையும் உண்டு. மக்களது  உயிர் போன்று இருக்க வேண்டியவர்கள் ஆள்வோர்.  அப்போதுதான் அந்த நாட்டில் மிக்க பசியும்  நீங்காத நோயும்  புறத்து நின்றும்  மற்றும் அகத்து இருந்தும் அழிவு செய்யும் புறப்பகை, உட்பகை  இருக்காது. 

ஒக்தோபர் 10 அன்று வெளிவந்த டெயிலி மிறர் என்ற நாளேட்டில் முனைவர்  அசோகா பண்டாரகே என்பவர்  இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் (Sovereignty, Territorial Integrity and Constitutional Reform in Sri Lanka) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இந்த இடைக்கால அறிக்கை பற்றி ஒரு சிங்கள - பவுத்த தேசியவாதிகளது பார்வை எப்படியிருக்கிறது என்பதற்கும் ஒரு கதைக்கு இரண்டு பக்கம் உண்டு என்பதற்கும்  இந்தக் கட்டுரை  நல்ல எடுத்துக்காட்டு. அதன் முக்கிய பகுதிகளின் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க சனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் நாடுகளது ஆட்சியில்  இறையாண்மை அவற்றின் நெறிமுறையாக இருக்க வேண்டும் என்றார். இந்தக் கூற்று ஒருபுறம் இருக்க,  ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பன்னாட்டு சமூகம் ஏனைய நாடுகளது உள்ளக  விவகாரங்களில் தொடர்ந்து தலையீடு செய்வதை தமது கொள்கையாகக் கொண்டுள்ளன.  சிறிலங்கா இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. 

தமிழீழ வி.புலிகளின் பணம்படைத்த புலம்பெயர்   அமைப்புக்களின் செல்வாக்குக் காரணமாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒக்தோபர் 01, 2015 அன்று ஜெனிவாவில்  ஒரு தீர்மானத்தை (அமெரிக்கா மற்றும் சிறிலங்கா நாடுகளது அனுசரணையோடு) நிறைவேற்றியது.  இந்தத் தீர்மானம் பொறுப்புக் கூறல் மற்றும் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் இடைமாறுபாட்டு கால ஏற்பாடுகள், நல்லிணக்கம் பற்றி ஒரு பன்னாட்டு கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியது. 

இந்தத் தீர்மானத்தின் உறுப்புரை 16,  சிறிலங்கா யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் அரசியல் தீர்வு,  மீளிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்காவின் ஈடுபாட்டை அது உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்  கேட்டுள்ளது.  அமெரிக்க உயர் மட்ட அரச அதிகாரிகள் ஐக்கிய நாடு மனித உரிமைப்  பேரவையின் தீர்மானத்துக்கும் சிறிலங்காவின் புதிய யாப்பு உருவாக்கத்துக்கும் 'நேரடித் தொடர்பு' (‘direct link’) இருப்பதாக ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த யாப்பின் வரைவை  உருவாக்குவதற்கு   தங்கள் உதவியை நல்குவதோடு அதன் நிறைவேற்றத்தை கண்காணிக்கவும் முன்வந்துள்ளார்கள்.  "இந்த யாப்பு உருவாக்கத்தின் வெற்றியில் தங்களுக்கு பகிரப்பட்ட பொறுப்பு இருப்பதாக" உரிமை கொண்டாடுகிறார்கள்.

மார்ச் 9, 2016 இல் சிறிலங்கா நாடாளுமன்றம்  ஓர் அரசியல் அமைப்புப் பேரவையை  (நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு ஒரு சபையாக இருப்பார்கள்) உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.  அரசியல் நிர்ணயசபையின் வழிநடத்தல் குழு செப்தெம்பர் 21, 2017 அன்று தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. இந்த இடைக்கால அறிக்கை பெரும்பாலும் 13 ஆவது சட்ட திருத்தத்தை விரிவாக்கியும் அரசியல் அமைப்புப் பேரவையின் மத்திய - சுற்றயல் உறவுகள் பற்றிய உபகுழுவின் அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலையீட்டை அடுத்து எழுதப்பட்ட  இந்திய - இலங்கை உடன்படிக்கையை அடுத்து 13 ஆவது சட்ட திருத்தம்  நொவெம்பர் 14, 1987 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது. இந்த உடன்பாடு 'ஐக்கியம், இறையாண்மை மற்றும் ஆட்புல உறுதிப்பாட்டைக்  கட்டிக்காக்கும் அதேவேளை சிறிலங்காவின் இனச் சிக்கலைத் தீர்த்து வைப்பதை நோக்கமாகக்  கொண்டது'.  மாகாண சபைகளுக்கு அரசியல் அதிகாரத்தை கொடுப்பதற்காகவே இந்த 13 ஆவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனினும்  இந்திய தலையீடு, இந்திய - இலங்கை உடன்படிக்கை மற்றும் 13 ஆவது சட்ட திருத்தம் பெருத்த தோல்விகளில் முடிந்தன.  இதனைத் தொடர்ந்து வந்த எஞ்சிய சகாப்தங்களில் மோதல் தவிர்ப்பல்ல மாறாக  மோதல்  அதிகரிப்பு, வன்முறை மற்றும் பயங்கரவாத இயக்கமான வி.புலிகள் தமிழ்மக்களின் 'ஏகப் பிரதிநிதியாக' உருப்பெற்றன. மே 2009 இல் வி.புலிகள் இராணவ மட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வி.புலிகள் ஆதரவுக் குழு மற்றும் "பன்னாட்டு சமூகம்" 13 ஆவது திருத்த அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை  தீவிரப்படுத்தியுள்ளன.

நிறைவேற்ற அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் தேர்தல் முறையை சீர் செய்தல் என்ற ஆணையைப் பெற்று இப்போதுள்ள சிறிலங்கா அரசு சனனவரி 2015 இல் ஆட்சிக்கு வந்தது.  இந்த அரசுக்கு ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கு அல்லது ஆட்சிக் கட்டமைப்பை ஒற்றையாட்சியில் இருந்து இணைப்பாட்சிக்கு மாற்றவோ ஆணை கொடுக்கப்படவில்லை. உள்ளூர் மக்களது கண்ணேட்டத்தில் அரசாங்கம் முகம்கொடுக்கும் நெறிமுறைகளுக்கு, எடுத்துக் காட்டாக மத்திய வங்கி பிணைமுறி விற்பனை பற்றிய மோசடி, புது யாப்பு உருவாக்கத்தைவிட முன்னுரிமை கொடுக்கிறார்கள்.  இருந்தும் 13 ஆவது திருத்த சட்டத்துக்கு அப்பால், நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைக்  குறைக்கும்  அதிகாரப் பரவலாக்கல் முன் வைக்கப்பட்டுள்ளது.  ஆனால் யாப்பு உருவாக்கம் பற்றிய வெளிப்படைத்தன்மை  இல்லாத குறைபாடு  இருக்கிறது.  புதிய யாப்பைப் பற்றிய தகவல்கள் நாட்டின் பொதுமக்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. இடைக்கால அறிக்கையில்  முக்கிய விடயங்கள் தெளிவற்றதாகவும் மழுப்பலாகவும் இருக்கின்றன.  தேசியப் பட்டியலில் (மத்திய அரசாங்கத்தின் அதிகாரம்) இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்குத் தேவையான விடயங்கள்  உள்ளடக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  எனினும்,  இந்த அறிக்கை விரிவான தேசியப் பட்டியல் ஒன்றைக் கொடுக்கவில்லை.  இதனால்  13ஏ சட்ட திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பட்டியலில்  இருக்கும் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம், தனிமங்கள், குடிவரவு - குடியுரிமை,  புள்ளிவிபரம்,  அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள், துறைமுகங்கள், பெருந்துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, விமானநிலையங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து இருக்குமா அல்லது புதிய யாப்பின் கீழ் மாகாணசபைக்கு பாரப்படுத்தப்படுமா என்பதுபற்றிப்  பொதுமக்கள் இருட்டில் விடப்பட்டுள்ளார்கள். இடைக்கால அறிக்கை யாப்பு நீதிமன்றத்தை அறிமுகப்படுத்துகிறது. இப்படியான நீதிமன்றம், இது  இப்போதுள்ள 13ஏ சட்ட திருத்தத்தில் இல்லை, மத்தியஅரசுக்கும் மாகாண சபைக்கும் இடையில் எழும் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும். ஆனால்  அதில்  யார் யார் அதில் இடம்பெறுவார்கள்,  அது எப்படி இயங்கும்  என்ற விபரம்   இடைக்கால அறிக்கையில் இல்லை.  (தொடரும்)