Oct 10

மன்னாரில் இருந்து மாலதியை எடுத்துவைப்பேன் உன் முன் நாளையும் உண்டு தீர்ந்துபோகாத வரலாறு

ஒன்பது வருடங்களுக்கு முன்

ஒக்ரோபர் பத்தில்

என் தோழிகளை திருவிழாவில் தேர்போல அல்ல

தெருவுலாவரும் தெள்ளிய சூரியன்களாய் பார்ப்பேன்

பிக்பொஸ் பிரபாகரன் படையிருந்த

எட்டுக்கோடி தமிழரும் வாக்களித்து நிமிரவேண்டிய

இளவரசி மாலதியின் நாள்தான் இது

அன்றைய நாளில் அங்கயற்கண்ணிகள்

புதுவரியுடுத்து புன்னகையோடு திகழ்வார்கள்

கண்ணுக்கும் கட்டிலுக்கும் மட்டுமே விருந்தாயிருந்த

விட்டில்கள்

கெட்டி மேளத்தில் மத்தியில்

வெட்கப்பட்டிருந்த வெள்ளிரதங்கள்

வெட்டியெடுத்துவந்த வெஞ்சமர் வெற்றிகளை

ஒவ்வொன்றாய் புரட்டி

கவிஞர்கள் நாம் உச்சிமுகர்ந்துகொண்டிருப்போம்

இன்று கற்பழிப்புகள் மட்டுமே

கவிதைப்பொருளாகின்றது

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும்

கொடிகளின் கண்ணீர் மட்டுமே

கட்டுரைத்தலைப்பாகின்றது

கல்பனா சாவ்லாவும் சிறீமாவும் தட்சரும் தவிர

இங்கு பலருக்கு வேறு எதுவும் அப்டேற் ஆவதில்லை

விதுசா சோதியா துர்க்காவென்று

எதுக்கு வில்லங்கமென்று

நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த நன்னடை

நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகளுமென

பாரதியார் பாட்டோடு மட்டும்

புதுமைப்பெண் பேச்சை மட்டுப்படுத்திக்கொள்ளும்

மங்கையர் சங்கங்களும்தான் மிச்சமாகின்றது

காவியங்களை பொங்கிப்படைத்து

சிங்கங்களை சிப்பிலியாட்டிய

கொதிமணிக்கொடிகளை

குருடும் செவிடும் நொண்டியுமாய்

தண்டிப்பிழைப்பதற்கு விட்டு

ஓவியாவை தேடுகின்றன சல்லிக்கட்டு காளைகள்

நிலத்தீயாய் எழுந்து

கொடும்படைகளை அவன்வீட்டு குசினிவரை துரத்திய

குலக்கொழுந்துகள்

பசிவயிற்றின் கொடுமையில்

பச்சைக்குழந்தைகளை காத்திடபிச்சை ஏந்தி அன்னியனியனிடமே

விழுந்து தொலைகையில்

ஜிமிக்கி கம்மல் ஆடுகின்றது

கலிங்கத்து பரணியில் கடைசின் வாரிசு

கோப்பாய்வெளியில் கூர்காவுக்கெல்லாம்

குடலையுருவும் கூத்தாடிய மாலதிக்கு

கண்ணில் ஒன்றிக்கொள்ள ஒரு தூபி இல்லை

அவளை கொன்றவனுக்கு

அவள் நிலத்தில் சல்யூட் செய்கிறது ஏகாதிபத்தியம்

கசூரினாவில் வாங்கும் காற்றும்

இடைவெளி நெளியும் விரல்களும்

இரவு விடுதிகளும்

சுதந்திரத்தின் பொருளாய்

பொத்தி வளர்க்கிறது சுயநலம்

கஸ்தூரியும் வானதியும் எழுதப்படிக்கத் தெரியாதவளா

கையில் துப்பாக்கியும் கவிதையுமாய் இருந்த

அந்தப் புரட்சிக்கொடிகளை நட்டுவையுங்கள் மனதில்

எட்டிப்பிடிக்கமுடியாது உயரங்களுக்கு

அது படர்ந்து செல்வதை உணர்வீர்கள்

வட்டுவாகலில் முடிந்துவிட்டால்

சில்வா என் சிறு மலருக்கு சித்தப்பா ஆகமுடியாது

இசைப்பிரியாக்களை தின்ற மிருகங்கள்

இன்னும் எங்கோ உயிரோடுலவுகின்றபோது

என் புன்னகையில்

நஞ்சு கலக்காமல் இருக்கப்போவதில்லை

என் நல்லிணக்கம் வேறு

நீ ஏகிய இராச்சியத்தை தேடும்போது

நான் கற்பூரப்புல்வெளியில் தேடுவேன்

என் காதுக்குள் நீ புத்தம் சரணம்பாடும்போது

உன் காதுக்குள் சாமகானத்தை பாடுவேன்

நிறைய உண்டு என்னிடமும்

இன்று

மன்னாரில் இருந்து மாலதியை எடுத்துவைப்பேன்

உன் முன்

நாளையும் உண்டு தீர்ந்துபோகாத வரலாறு