Apr 22

காணாமல் ஆக்கப்பட்டோர் விபரங்கள் அடுத்தவாரம் ராஜிதவிடம் கையளிப்பு

வவுனியாவில் 57ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று (21) பகல் 2.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் காணாமல் ஆக்கப்பட்டோர் 115 பேரின் விபரங்களை கையளித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,

மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த 2 ஆம் திகதி வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை என்னிடம் ஒப்படைக்குமாறும் அவற்றை தனக்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கிணங்க வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் 115 காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் விபரங்களை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். எதிர்வரும் 27 திகதி சுகாதார அமைச்சரின் மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெற இருக்கின்றது அங்கு இவ் விபரங்களை சுகாதார அமைச்சருக்கு வழங்கவுள்ளேன் என தெரிவித்தார்.