Oct 09

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பிரத்தியேக நேர்காணல்


சிங்களவரை அண்டி வாழ்வதே ஒரே வழி என்று எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றுவதாகவே அமையும். யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்னேற யாவரும் ஒன்றிணைய வேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன்.                                                                                              நேர்கண்டவர் யதீந்திரா


அரசியல் பிரவேசம் - முதலில் உங்களுடைய அரசியல் பிரவேசத்திலிருந்து ஆரம்பிப்போம் - உங்களுடைய அரசியல் பிரவேசம் பற்றி கூறுங்கள் - அது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது நன்கு திட்டமிடப்பட்ட ஒன்றா?

என்னுடைய வாழ்வில் நன்கு திட்டமிடப்படும் விடயங்கள் அல்லது என்னால் எதிர்பார்க்கும் விடயங்கள் நடைபெறுவதில்லை. காத்திராப் பிரகாரமாகவே நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 1962ம் ஆண்டில் சட்ட மாணவர்கள் சங்கத்தலைவரானதும் அவ்வாறே. எனக்குப் பின் இன்னொரு தமிழர் சட்ட மாணவர் சங்கத் தலைவராக வர 48 வருடங்கள் போயின. எதிர்பாராது குறித்த பதவி என்னை வந்தடைந்தது.

பலரின் வற்புறுத்தலும் கண்ணியமான கோரிக்கைகளுமே என்னைத் தடம் மாறச் செய்து அரசியலுக்குள் அழைத்து வந்துள்ளன. ஆறு மாதங்கள் தொடர்ந்;து அரசியலுக்கு வர முடியாது என்று கண்டிப்பாக இருந்தேன். நண்பர்களினதும் மற்றையோரினதும் தொடர் கோரிக்கைகளை மறுக்க முடியாது போகவே நான் ஒரு பாரிய தவறைச்செய்துவிட்டேன். அது என்னவென்றால் எல்லோரும் சேர்ந்து கோரிக்கை விடுத்தால் உங்கள் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிப்பேன் என்று கூறிவிட்டேன். எமது தமிழ்த் தலைவர்கள் ஒரு போதும் சேர மாட்டார்கள் என்ற திட நம்பிக்கையில் அவ்வாறு கூறிவிட்டேன். ஆனால் அவர்களோ சேர்ந்து கோரிக்கை விடுத்தார்கள். எனது சுதந்திரம் பறி போய்விட்டது. அரசியலுக்கு வர நேர்ந்தது. இதை நான் தற்செயல் நிகழ்வெனக் கூறமாட்டேன். யோக சுவாமிகளுடன் சேர்ந்து எப்பவோ முடிந்த காரியம்என்று தான் கூறுவேன்? கண்டிப்பாக இது திட்டமிடப்பட்ட செயல் அல்ல.


எனக்கு நினைவிருக்கிறது நீங்கள் உச்சநீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற பொழுது, ஒரு உரையை ஆற்றியிருந்தீர்கள் - அப்போது தமிழீழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. உங்களது உரை தெற்கில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அந்த உரை தொடர்பில் அப்போது, ஜாதிக ஹெல உறுமய உங்களை கடுமையாக விமர்சித்திருந்தது. அவர்கள் உங்;களை ஒரு தமிழ் இனவாதியாகச் காண்பிக்க முயன்றனர். ஆனால் தமிழ் சமூகமோ அந்த உரையின் மூலம் விக்கினேஸ்வரனுக்குள் இருக்கும் தமிழ் உணர்வை அறிந்து கொண்டது. அப்படியொரு உரையை ஆற்றவேண்டுமென்னும் எண்ணம் ஏன் உங்களுக்கு ஏற்பட்டது? ஏனெனில் நீங்கள் கொழும்பில் வாழ்ந்துவந்த ஒருவர். சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து செல்லக் கூடிய வாய்ப்புகள் உங்கள் முன் தாராளமாகவே இருந்தது. ஆனாலும் நீங்களோ அதனைச் தெரிவு செய்யவில்லை - ஏன்?

உண்மையை உணர்ந்து ஒருவன் உண்மையைப் பேசப் பின்நிற்க வேண்டியதில்லை. எனக்குத் தமிழ் உணர்வு இருக்கின்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது. தமிழ் மொழி, அதன் இலக்கியம், தமிழர்களின் பாரம்பரிய குறிக்கோள்கள் பற்றி ஆர்வமும் பக்தியும் றோயல் கல்லூரி நாட்களில் இருந்தே என்னுள் வளர்ந்து வந்துள்ளன. இதற்கு எமது தமிழ்ப் பாட ஆசான்களே காரணம் என்று நினைக்கின்றேன். மேலும் என்னுடைய தாயார் நாளாந்தம் ஆங்கிலப் பத்திரிகைகள் வாசித்து வந்தவர். ஆனால் என் தந்தையுடனோ, எம்முடனோ ஆங்கிலத்தில் பேசமாட்டார். தமிழிலேயே பேசுவார். குடும்பத்தினுள் ஆங்கிலத்தில் பேசுவது ஒரு தரக் குறைவான செயல் என்றே அவர் கருதியிருக்க வேண்டும். தமிழில் பற்று ஏற்பட உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற எனது தாயாரும் ஒரு காரணம். எனது பேச்சுக்களை இன ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ பார்ப்பது பிழை என்றே கூறுவேன். அவை உண்மையின் பாற்பட்டவை. நான் அன்று கூறியவை இன்றும் உண்மையே. எனக்கு உண்மை மிக முக்கியம். தமிழர்களைத் தரக் குறைவாக அரசாங்கங்கள் நடாத்தி வருகின்றன என்பது உண்மை. அந்த உண்மையையே உச்ச நீதிமன்றத்திலும் உரக்க உரைத்தேன்.


வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் பெயர் வெளித்தெரிந்த போது அதனை சிறந்த தெரிவாகப் பார்த்த சிங்களவர்கள் பலரும் பின்னர் தலைகீழாக மாறினர். நிமல்கா பெனார்ண்டோ போன்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட உங்களை விமர்சிக்குமளவிற்கு நிலைமைகள் திடீரென்று மாறின. உங்களை இப்போது பலரும், சிங்களவர்கள் மட்டுமல்ல சில தமிழர்கள் கூட (நுஒவசநஅளைவ) கடும்போக்குவாதியாகவே காண்பிக்க முற்படுகின்றனர். இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? கடும்போக்குவாதி தமிழ்த் தேசியவாதி உண்மையில் விக்கினேஸ்வரன் யார்?

நல்ல கேள்வி. ஒவ்வொருவரும் தமது கருத்துக்களைக் கூறும் போது தமது ஏதோவொரு சூழ்நிலை, ஸ்தானம், கருத்துக்கோணம் ஒன்றில் இருந்து தான் பேசுகின்றார்கள். உதாரணத்திற்கு ஒரு மார்க்சியவாதியை எடுத்துக் கொள்வோம். மனித வாழ்க்கையை, மனித வளர்ச்சியை, மனித வரலாற்றை, உலக பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியை அவர்கள் கார்ல் மார்க்ஸ், ஏங்கில்ஸ்  என்ற இருவரின் கண்கள் ஊடாகவே பார்த்துப் பரீட்சயப்பட்டவர்கள். தம்மைச் சுற்றி நடைபெறும் ஒவ்வொன்றையும் அவர்களின் அந்தப் பார்வையின் கீழ் கொண்டு வந்து அங்கிருந்து அலசி ஆராய்ந்தே முடிவுக்கு வருகின்றார்கள். தமது கருத்துக்களை அந்த நிலையில் இருந்தே உலகுக்கு எடுத்துக் கூறுகின்றார்கள். என் நண்பர் வாசுதேவ நாணயக்காரவும் அவ்வாறே. அவர் நண்பர் நிமல்காவும் அவ்வாறே. எமது கருத்துக்கள், நடவடிக்கைகள் அவர்களின் அந்தக் கருத்துக் கோணத்திற்கு ஒவ்வாததாக இருந்தால் அதனைக் கண்டனம் செய்ய அவர்கள் தவறுவதில்லை.

எமது நாட்டில் நடந்தது என்ன? சிங்களத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தைத் தம்வசம் எடுத்துக் கொண்டு தாம் செய்ததே சரியென்ற அடிப்படையில் இதுவரை காலமும் நடந்து கொண்டதே இந் நாட்டில் அரசியல் நிலை பாதிப்படைந்ததற்குக் காரணம். அரசியல் முட்டுச் சந்துக்கும் (Impasse) அதுவே காரணம். சில தமிழ்த் தலைவர்கள் கூட தப்பு செய்யப்பட்டுவிட்டது. அந்தத் தப்பைத், தவறை இனி மாற்றமுடியாது. கிடைக்கின்றதை இனிச் சுருட்டிக் கொள்ள வேண்டியது தான்என்று நினைக்கின்றார்கள். அவ்வாறான சிந்தனை கொண்டவர்கள் உண்மையை எடுத்துக் கூறுவோரைக் கடும் போக்குவாதிகளாகவே காண்பார்கள்.

மேலும் சில அரசியல்வாதிகள் இயற்கையாகவே கரவான எண்ணங்களைக் கொண்டவர்கள். அது அவர்களின் இயல்பு. எனவே நாங்கள் ஏதேனும் ஒன்றைச் சொன்னாலோ செய்தாலோ அவர்களின் கரவெண்ணங்கள் கரவாகவே சிந்தித்து கரவான சிந்தனைகளையே அவர்கள் சிதறவிடுவார்கள். உதாரணத்திற்கு விக்னேஸ்வரன் பிறிதொரு கட்சியை ஆரம்பிக்கவே கடும் போக்குவாதியாக மாறிவிட்டார் என்போர் தாம் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதை வைத்தே என்னையும் விமர்சிக்கின்றனர்.

நான் கடும் போக்கும் இல்லை மென்; போக்கும் இல்லை. உண்மையை உள்ளவாறு நோக்குகின்றவன். உண்மை தான் முக்கியம். ஒவ்வொருவரின் கருத்துக் கோணம் முக்கியமல்ல. கருத்துக் கோணங்கள் ஒருவர்க்கொருவர் வேற்றுமைப்படும். ஆகவே தமது கோணத்திற்கு எனது நடவடிக்கை முரண்பாடாக இருப்பதாக அவர்கள் நினைத்தால் அவர்கள் என்னைக் கடும் போக்காளன், யதார்த்த நிலை அறியாதவன், சுயநலவாதி என்று அழைக்கத்தான் பார்ப்பார்கள். அதற்கு நான் பொறுப்பல்ல.

மக்கள் யாவரையும் நேசிப்பவன் என்ற எனது அடிப்படை நிலையில் இருந்து நான் என்றுமே மாறியதில்லை. ஆனால் என்னைப் பற்றித் தவறான எண்ணங்கள் பரப்பியவர்கள் நான் மகா நாயக்கர்களைச் சந்தித்த பின் தற்போது விக்னேஸ்வரன் மாறிவருகின்றார்என்று கூறுகின்றார்கள். ஏனென்றால் கடும்போக்காளர் என்று தாங்கள் கருத்து வெளியிட்ட ஒருவர் எவ்வாறு மகாநாயக்கர்களைச் சென்று சந்தித்தார்? ஆகவே அவரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்கின்றார்கள். ஆனால் அது தவறு. நான் மகாநாயக்கர்களுக்கு என்றுமே எனது மதிப்பைத் தெரிவிப்பவன். உண்மையில் காவியுடையணிந்த, மத உரியணிந்த எந்த மதகுருவையும் மதிப்பவன். ஆனால் அவர்கள் அல்லது அவர்களுடன் சேர்ந்தவர்கள் தவறுகள் செய்கின்றார்கள் என்றால் அதைச் சுட்டிக் காட்டப் பின் நிற்காதவன்.  ஆகவே விக்னேஸ்வரன் கடும்போக்கில் இருந்து மென்போக்குக்குத் திரும்பிவிட்டார் என்பவர்கள் நான் மகாநாயக்கர்களுடன் என்ன பேசிக் கொண்டேன், எப்படிப் பேசிக் கொண்டேன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களின் முன்னைய கணிப்பு பிழையென அவர்களுக்குத் தெரியவரும். 

மீண்டும் கூறுகின்றேன். நான் கடும்போக்காளனும் அல்ல. மென் போக்காளனும் அல்ல. அது அவரவர் பார்வையில்த் தான் இருக்கின்றது. நான் என்றும் போல் உண்மையில் நாட்டமுள்ளவன். மக்களில் நாட்டமுள்ளவன். என் கடமையில் குறியாக இருப்பவன்.

நீங்களே பல தடவைகள் கூறியிருக்கின்றீர்கள் - உங்களை அரசியலுக்கு கொண்டு வந்தது திரு- சம்பந்தன் அவர்கள் என்று. அன்று, உங்களது தெரிவு தொடர்பில் கூட்டமைப்பிற்குள்ளேயே எதிர்ப்பிருந்தது. அதனை நீங்கள் அறிவீர்கள் - அந்த நேரத்தில் மாவை சேனாதிராஜாவின் பெயரையே பலரும் சிபார்சு செய்திருந்தனர். ஆனால் சம்பந்தனோ மாவை இதற்கு பொருத்தமற்றவர் என்று நிராகரித்திருந்தார். அந்த நேரத்தில் இது பற்றி கூறும் போது சம்பந்தன் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார். அதாவது, சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய, உதாரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுடன் பேசக் கூடிய ஆற்றலுள்ள ஒருவரே எங்களுக்குத் தேவை. அப்படியான ஒருவர்தான் விக்கினேஸ்வரன். ஆனால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான முயற்சிகளில் எந்தவொரு இடத்திலும் உங்களின் பங்களிப்பு உள்வாங்கப்படவில்லையே - ஏன்? இன்று மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பில் உங்களின் அவதானம் என்ன?

சம்பந்தர் உட்பட பலர் எனக்கு அழுத்தம் கொடுத்தே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். நுழைந்த போது எனது பார்வை, கருத்துக் கோணம் திரு.சம்பந்தருடனும் மற்றைய தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகளுடனும் ஒத்துப்போவதாகவே இருந்தது.

எப்பொழுது நான் யாழ்ப்பாணத்தில் குடியேறினேனோ, தற்போதைக்கு நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினேனோ அப்போதே திரு.சம்பந்தர் அவர்களினதும் வேறு சில தமிழ் அரசியல்வாதிகளினதுங் கருத்து தவறானது என்று புரிந்து கொண்டேன். கொழும்பில் இருந்து அங்கிருக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட ஒரு கருத்தே அவர்தம் கருத்து என்று புரிந்து கொண்டேன். அவர்கள் கருத்தில் ஒரு செயற்கையை நான் உணர்ந்தேன். வட கிழக்குப் பெரும்பான்மை மக்களின் இயற்கைச் சிந்தனை ஒன்றாக இருக்க, அரசியல் தலைமைத்துவந் தாம் சரியென்று தீர்மானித்த செயற்கைக் கருத்தே முழுத் தமிழ்ச் சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு நிலையில் இருந்து பேசி வந்ததை அவதானித்தேன். அது தான் உண்மையான தலைமைத்துவம் என்றும் அவர்கள் நினைத்தார்கள். மக்களின் இயற்கையான கருத்தை அறிந்தவர் என்ற முறையில் குறித்த செயற்கைத் தீர்மானங்களுக்கு என்னால் ஏற்புத் தெரிவிக்க முடியவில்லை. தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரான பேராசிரியர் சிற்றம்பலம் போன்றோர் எமது மக்கள் பற்றிய எனது கணிப்பு சரியென்றே கூறுகின்றார்கள். அவ்வாறே சிவில் இயக்கங்களின் தலைவர்கள் பலர் எனது பார்வையை, கருத்தை, யதார்த்தத்தை ஏற்றுள்ளார்கள், வரவேற்றுமுள்ளார்கள்.

ஒரு செயற்கையான அரசில் தீர்வை நாடுபவர்கள் எவ்வாறு மக்களின் இயற்கையான எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒருவரைத் தம்முடன் சேர்ப்பார்கள்? என்னால் அவர்களின் பயணம் தடைப்பட்டுப் போய்விடுமே? அதனால்த்தான் என்னைக் கூப்பிடவில்லை என்று நம்புகின்றேன். எவ்வாறு ஒரு முதலமைச்சர் தன்னோடு ஒத்துப் போகாத ஒருவரைத் தன் அமைச்சர் அவையில் வைத்திருக்க உடன்படாரோ என் கருத்துக்களைத் தெரிந்து கொண்டு தமிழ்த் தலைமைகள் என்னைத் தீர்வு முயற்சிகளுக்கு அழைக்க உடன்படாதது விசித்திரமன்று. 

என்னுடைய இன்றைய தீர்வு முயற்சிகளைப் பற்றிய கருத்தைக் கேட்டுள்ளீர்கள்.

எனது அவதானம் பின்வருமாறு -

ஒருவர் நோயுற்றிருந்தால் அவரின் அந்த நோய் என்ன என்று முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதன்பின் அந்த நோய்க்கு எவ்வாறான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆராயவேண்டும். அந்த ஆராய்வின் முடிவில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு நோயைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

நாம் இப்போது எமது நோயைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே எனது கருத்து. நோயைப் புரிந்து கொள்ளாது ஒவ்வொருவரும் பனடொல் கொடுப்போம், கசாயம் கொடுப்போம், பனடீன் கொடுப்போம், எண்ணை தேய்ப்போம்  என்று கொண்டிருக்கின்றோம். நோயைப் புரிந்து கொள்ளாது மருந்துகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டுள்ளோம். நோயைப் புரிந்து கொள்ள நோயின் சரித்திரம் மிக அவசியம். எவ்வாறான பின்புலம் இன்றைய நோயை ஏற்படுத்தியது என்று அறிந்தால்த் தான் உரிய சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். நோயைப் புரிந்து கொள்ளாது சிகிச்சையில் நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதே எனது அவதானம்.

இடைக்கால அறிக்கை வந்திருக்கிறது - அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் இருக்கிறது. ஏனெனில் அதற்கான வழிகாட்டல் குழுவில் திரு.சம்பந்தனும், திரு.சுமந்திரனும் அங்கம் வகித்தனர். அந்த அறிக்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

இடைக்கால அறிக்கை நோயை அறிந்ததாகவோ, தீர்க்கப் போதுமானதாகவோ தென்படவில்லை. நோயை அறியாத சிகிச்சை தோல்வியில் முடியும்.


கடந்த ஒரு சில மாதங்களில் ஏற்பட்ட சம்பவங்களை பார்த்தால் எப்படியாவது உங்களை தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து அகற்றிவிட வேண்டுமென்னும் ஒரு போக்கே தெரிந்தது. இப்போதும் தெரிகிறது. ஆனால் மக்களோ உங்கள் மீது அளப்பரிய நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். 2009இற்கு பிறகு ஒரு வலுவான குரல் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு நீங்கள் கிடைத்தீர்கள். விக்கினேஸ்வரனை மக்கள் நேசிக்கின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சியோ எதிர்க்கிறது. ஏன் இந்த நிலைமைதமிழரசு கட்சி உங்களை எதிர்க்கிறது என்று நான் கூறுவதற்கு பின்னால் வலுவான ஆதாரங்கள் உண்டு. ஒன்று, உங்களை இரவோடு இரவாக அகற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை முயற்சி.  அந்த முயற்சி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது உங்களுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் போக்கை பார்த்தால் அதன் பின்னாலும் உங்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து உங்களை அகற்ற வேண்டும் என்னும் நோக்கமே தெரிகிறது. உங்களது வேண்டுகோளின் அடிப்படையில் ஆளுனரால் பணி நீக்கம் செய்யப்பட்ட வடக்கு மாகாண முன்னைநாள் போக்குவரத்து அமைச்சர் டென்னீஸ்வரன் உங்களுக்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கில் டென்னீஸ்வரனுக்கு ஆதரவாக ஆஜராகியிருக்கும் சட்டத்தரணி நிரான் அங்கிற்ரல் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கனிஸ்ட சட்டத்தரணி என்பது அனைவரும் அறிந்த விடயம். இதிலும் தமிழரசு கட்சி உங்களுக்கு எதிராகத்தானே இருக்கிறது. உங்கள் மீது தமிழரசு கட்சிக்கு ஏன் இந்தளவு வெறுப்பு?

என் மீது எவருக்குமே வெறுப்பு இல்லை. தங்கள் மீதும், அரசியல் தரக்கூடிய அதிகாரங்கள் மீதும், தம்முடைய எதிர்காலம் மீதும் அவர்களுக்கிருக்கும் அலாதியான பிணைப்பே அவர்களை அவ்வாறு நடந்து கொள்ளச் செய்கின்றது.

ஒரு உதாரணத்தைத் தருகின்றேன். 2015ம் ஆண்டு ஜனவரி 8ந் திகதி புதிய அரசாங்கம் வந்ததும் பலவிதமான எதிர்பார்ப்புகள் தமிழர் தரப்பில் இருந்தன. அந்தக்கால பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தீர்களானால் அரசியல் ஹே~;யங்கள் பல பத்திரிகைகளில் வெளிவந்தன. இன்னாருக்கு இந்த அமைச்சு என்றெல்லாம் வெளிவந்தன. எமது ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதால் அவ்வாறான எதிர்பார்ப்புக்களை நாம் பிழையென்று கூற முடியாது.

ஆனால் நாம் வடமாகாணசபையில் அதே வருடம் பெப்ரவரி 10ந் திகதி இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை நிறைவேற்றிய போது இன்னாருக்கு இந்த அமைச்சு என்ற அரசியல் ஹே~;யங்கள் நிறுத்தப்பட்டன. சிலரின் எதிர்பார்ப்புக்களும் அப்போது சுக்கு நூறாக்கப்பட்டன. இதனால்த் தான் வெளித்தோற்ற அமைதிக்கும் தமது எதிர்பார்ப்புக்களுக்கும் பங்கம் விளைவிக்கக் கூடிய ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருகின்றது.

இது உண்மையில் எம்மவர் சிந்தனையா அல்லது கொழும்பின் அதிகார பீடத்தின் சிந்தனையின் ஒரு பரிமாணமா என்று தெரியவில்லை. அந்த அதிகாரமையத்திற்கு அண்மித்த எம்மவர்கள் அந்த அதிகார பீடத்தின் எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்தவும் இவ்வாறான காரியங்களில் இறங்கியிருக்கக்கூடும். என்னைப் பொறுத்த வரையில் எம் மக்கள் சார்பான ஒரு வழக்கைக் கையேந்தி உள்ளேன். வழக்கை எனது கட்சிக்காரர்களான தமிழ்ப் பேசும் மக்கள் சார்பில் நடத்தி முடிப்பது எனது கடமை. அதையே நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன். சவால்களைக் கண்டு துவண்டு விடக்கூடாது.

உங்களுக்கு இன்னொன்றையும் கூற வேண்டும். எமது கட்சி மட்டும் அல்ல எமது ஆளுநர் கூட எதிர் நடவடிக்கைகளில் எமக்கெதிராக ஈடுபட்டுவருகின்றார். அமைச்சரவை கோரும் செயலாளர்களை எமக்குத் தராமல் தாக்காட்டித், தாமதித்து எமது நிர்வாகத்தை தடை செய்யப் பார்க்கின்றார். தடை செய்துவிட்டு வடமாகாணசபை நிர்வாகத்திறன் இல்லாதது என்ற கருத்தை முன்வைக்கப் பலர் ஒன்று கூடியுள்ளார்கள்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது எப்போதுமே முரண்பாடுகளின் கூடாரமாகவே இருக்கிறது. ஒற்றுமை அவசியம் என்று சொல்லிக் கொண்டாலும் கூட அப்படியான ஒற்றுமைக்கான முயற்சிகள் எதனையும் காணமுடியவில்லை. நீங்கள் கூட பல தடவைகள் ஒற்றுமையின் அவசியம் பற்றி வலியுறுத்தியிருக்கின்றீர்கள். ஆனால் நடைமுறையில் அது ஒரு பெரும் சவாலாகவே இருக்கிறது. இந்த நிலையில், தொகுதிவாரித் தேர்தல் முறை அறிமுகமானால் கூட்டமைப்பின் தேவையும் இல்லாமல் போய்விடும் என்பது சிலரது கணிப்பாக இருக்கிறது. ஆனால் தேர்தல் அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான தலைமை அவசியம் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு. இந்த நிலையில் கூட்டமைப்பின் தேவை மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பில் உங்களின் அவதானம் என்ன?

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு கட்சி அல்ல. அது ஒரு கூட்டமைப்பு. கொள்கை ரீதியில் முன்னைய ஆயுதக் கட்சிகளுக்கிடையே பலத்த வேற்றுமை தென்படாவிட்டாலும் கட்சி ரீதியில் அவர்கள் ஒவ்வொருவரும் தமது கட்சியைக் கட்டிக் காக்கவே முற்பட்டுள்ளனர். இலங்கை தமிழரசுக்கட்சி தன்னைப் பற்றிய பிறிதொரு கருத்தைக் கொண்டுள்ளது. நாம் ஒரு ஜனநாயகக்கட்சி. முன்னர் ஆயுதம் ஏந்திய கட்சிகள் போன்று வன்முறை நிகழ்வுகளில் நாங்கள் ஈடுபடவில்லை. நாம் வழி அமைத்துக் கொடுத்தால்த் தான் மற்றைய கட்சிகளால் மக்களின் செல்வாக்கைப் பெற முடியும் என்று நம்புகின்றார்கள். எனவே தான் ஒற்றுமை என்பது கானல் நீராகத் தென்படுகின்றது. சிந்தனைகள் வேறாக இருப்பதால்த் தான் இந்த சிதறுண்ட நிலை காணப்படுகின்றது.

எமது கட்சிகளையும், வேற்றுமைகளையும் மறந்து தமிழ் மக்களின் நலனே முக்கியம் என்ற அடிப்படையில் அரசியல் ரீதியாக உழைக்க முன்வந்தோமானால் ஒத்துழைப்பு என்பது எட்டாத கனியாக இருக்கவேண்டியதில்லை.

கூட்டமைப்பு ஜனநாயகத்திற்கு உடன்படும் எல்லாக் கட்சிகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். தேர்தல் காலங்களில் தமிழரசுக் கட்சி தனக்குக் கூடிய போட்டியாளர்களைக் கோரலாம். ஆனால் நடைமுறையில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. கட்சிகளுக்குள் சிலர் தமது முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஒற்றுமையை வரவிடாது தடுக்கின்றார்கள். சிலர் தமது முக்கியத்துவம் ஃ அதிகாரம் குறைந்து விடும் என்று கட்சிகளுக்குள் இளைஞர்களை உள்நுழைக்க தயக்கம் காட்டுகின்றார்கள். கட்சிகளால் தமிழ் மக்களுக்குக் கூடிய தொல்லைகளே ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் நலத்தை விட கட்சிகளின் தலைமைத்துவங்கள் தத்தமது கட்சிகளுக்கே முதலிடம் கொடுக்கின்றார்கள். கட்சிகளுக்கு அப்பால் சென்று தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தினால்த் தான் எமக்கு விமோசனம் கிடைக்கும்.

கட்சி அரசியலுக்கு அப்பால் உங்களை நோக்குபவர்கள் இப்படியொரு விமர்சனத்தை முன்வைக்கின்றார்கள் - அதாவது, கொள்கை ரீதியில் விக்கினேஸ்வரனின் உறுதி முக்கியமானது அது கட்டாயமான ஒன்றுதான். ஆனால் வடக்கு மாகாண சபையை வினைத்திறன்மிக்க வகையில் நிர்வகிப்பதில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை அரசாங்கம் ஒதுக்கிய நிதியைக் கூட முழுமையாக பயன்படுத்தவில்லை - அவை திரும்பிச் செல்கிறது - இப்படியான விமர்சனங்களுக்கு உங்களின் பதில் என்ன?

முதலில் ஒதுக்கிய நிதி பற்றிக் கூறிவிடுகின்றேன். அண்மையில் வடமாகாணசபையிலும் முழுவிபரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் ஒரு சதம் கூட இதுவரையில் திருப்பி அனுப்பப்படவில்லை. ஒரு பொய்யை 100 தடவை சொன்னால் உண்மையாகிவிடும் என்ற எண்ணத்தில்த்தான் இவ்வாறான பொய்மைகள் காற்றில் விடப்படுகின்றன. எனவே இது பொய்யென்றால் அடுத்தது புளுகாகும்.

13வது திருத்தச் சட்டத்தில் இருக்கும் குறைபாடுகள் பற்றி திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம்மற்றும் தற்போதைய தலைவர் சம்பந்தன் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ந் திகதி அப்போதைய இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்கள். எதிர்பார்த்த அதிகாரங்கள் எவையும் எமக்குத் தரப்படவில்லை. ஆளுநரின் உள்ளீடல் வெகுவாக இருக்கின்றது என்றெல்லாம் கூறினார்கள். 13வது திருத்தச்சட்டத்தைப் புறக்கணித்ததால் பல தேர்தல் ஊடான பாதிப்புக்களையும் எமது கட்சி எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆகவே அதே முழுமையற்ற, முட்கள் நிறைந்த, முன்னுக்குப் பின் முரண்பாடுகள் காணப்படும் 13வது திருத்தச்சட்டத்தையும் மாகாணசபைகள் சட்டத்தையுங் கொண்டு தான் அவற்றின் அடிப்படையில் நாங்கள் 2013ல் வடமாகாணத்தில் முதன் முறையாக ஆட்சி அமைத்தோம். பலவருடகாலம் எமது நிர்வாகம் அலுவலர்கள் கைவசம் இருந்தது. அவர்கள் அப்போதைய அரசியல்வாதிகளையும் ஆளுநரையும் திருப்திப்படுத்திக் கொண்டு தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வந்தார்கள். மக்களாட்சி வந்ததும். அவர்களால் மாறமுடியவில்லை அல்லது மாறத் தயங்கினார்கள். அரசியல்வாதிகள் அப்பொழுதும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த எத்தனித்தார்கள். அதிகாரம் எம் கையில் இல்லாத போது இவர்களைக் கட்டுப்படுத்துவது மிகுந்த கடினமான செயலாக இருந்தது. வினைத்திறன் மிக்க நிர்வாகம் என்பது எமது கொள்கைகளை உடனே நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள் எமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தால்த் தான் சாத்தியமாகும். வெளியார்களுக்குத் தாளம் போடுபவர்களை வைத்து எமது நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாது. மாகாணசபையின் பிரதம செயலாளர் என்பவர் அமைச்சர் அவைக்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்படாத ஒரு பிரதம செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் எமக்கெதிராக ஒரு வழக்கு வைத்தார். இவ்வாறான பல வித நெருக்கடிகளுள் அகப்பட்டே கடமையாற்றி வருகின்றோம். இன்று கூட எமக்குத் தேவையான செயலாளர்களைக் கேட்கும் போது ஆளுநர் தரமறுக்கிறார். செப்டெம்பர் 1ந் திகதி மாற்றலாகிச் செல்ல வேண்டிய ஒரு செயலாளரை வலுக் கட்டாயமாகத் தொடர்ந்து இங்கு சேவையாற்ற இடமளித்து எமது கோரிக்கைகளைப் புறக்கணித்து வருகின்றார். ஆகவே மத்திய அரசாங்க உள்ளீடல்கள், ஆளுநரின் உள்ளீடல்கள், அரசியல்வாதிகளின் உள்ளீடல்கள் ஆகியவற்றினால் பிழையான நெறிமுறைகளில் ஊறிவந்த அலுவலர்களின் அசமந்தப் போக்கு ஆகியவற்றின் மத்தியிலேயே நாம் நிர்வாகம் நடத்த வேண்டியுள்ளது.

சட்டத்தின் வலுவற்ற தன்மையை உணர்ந்த நாங்கள் மிகக் கவனமாக முன்னேறி வருகின்றோம். எல்லா அலுவலர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று கூறமுடியாது. மக்கட் பிரதிநிதிகளின் கருத்தறிந்து கடமைகளில் ஈடுபடும் பலர் இருப்பதால்த் தான் எமது நிர்வாகம் இந்தளவுக்கு சுமூகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. சிலர் அலுவலர்களை நாம் ஏன் கட்டாயப்படுத்தவில்லை என்று கேட்கின்றார்கள். சட்டம் எம் சார்பில் இல்லாத போது கட்டாயப்படுத்தி எதுவும் நடைபெறாது. எமது அலுவலர்கள் பெரும்பான்மையினரின் கடமையுணர்ச்சியும் கட்டுப்பாடுமே எம்மை இந்தளவுக்கு சுமூகமாக இயங்கச் செய்துள்ளது.

 

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் ஒரு அங்கமாகும். இதில் எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியமில்லை. அதனை பின்னர் பார்ப்போம், இப்போது கிடைப்பதை எடுப்போம் என்றும் சிலர் கூறிவருகின்றனர். அதே வேளை கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் இணங்காவிட்டால் கிழக்கிலுள்ள தமிழ் பகுதிகளை வடக்கோடு இணைத்தாவது இதனைச் செய்யலாம் என்பது இன்னும் ஒரு சிலரது வாதம். ஆனால் அதுவும் பலவீனமான ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில் அவ்வாறானதொரு நிலைப்பாட்டுக்குச் சென்றால், திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியை கைவிட வேண்டிவரும். ஏனெனில் அது தற்போது ஒரு தமிழ் பகுதியல்ல. அனைத்து இனங்களும் வாழும் பகுதி. திருகோணமலை ஒரு மூலோபாய தளம் என்னும் வகையில் அதனை தமிழர்கள் கைவிடுவதானது மறுபுறத்தில் தமிழர்களின் மூலோபாய முக்கியத்துவத்தையும் இல்லாது செய்துவிடும். இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தை கையாள்வது எப்படி? இது தொடர்பில் உங்களது பார்வை என்ன?

 

வடக்கு கிழக்கு இணைப்பை நடைமுறைப்படுத்த விடாமலே அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது. தமிழ்ப் பேசும் திருகோணமலை மாவட்டம் முப்பகுதியினரின் மாவட்டமாகக் கடந்த ஐம்பது வருடங்களுக்குள்ளேயே மாற்றப்பட்டுள்ளது.

சம~;டியில் சில தனித்துவ அலகுகளையும் உள்ளடக்கலாம். திருகோணமலை நகரத்திற்கென ஒரு சிறப்பு நிர்வாகத்தை ஏற்படுத்தலாம். வட கிழக்கு இணைப்பு எதற்காக கோரப்படுகின்றது என்பதை நாம் முற்றாக அறிந்திருக்க வேண்டும். தமிழ்ப் பேசும் பிரதேசங்கள் ஒன்றாக இல்லாவிட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு நடந்ததே மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் நடக்கும். அரசாங்கத்திற்குப் பல அனுசரணைகள் உண்டு. நாட்டின் மத்திய அரசாங்கம் பெரும்பான்மையினரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கூடிய நாட்டு மக்கள் பெரும்பான்மையினத்தவர்கள். பிறநாடுகளுடன் ஒப்பந்தங்கள் வைத்துக் கொள்ளும் அதிகாரம் அவர்களுடையது. மகாவலி அபிவிருத்தி போன்ற சட்டங்களை அவர்களே நடைமுறைப்படுத்துகின்றார்கள். ஆகவே தான் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தையும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தையும் பெரும்பான்மையினத்தவரின் குடியேற்ற நிலங்களாக மாற்றிவருகின்றாரகள்.

திருகோணமலைக்கு விசேட நிர்வாக அந்தஸ்தை அளித்து, மிகுதி வடகிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களை ஒன்றிணைத்து முஸ்லீம் மக்களுக்கு அதனுள் ஒரு தனி அலகை உருவாக்குவதே உசிதமெனத் தோற்றுகின்றது.

இந்த இடத்தில் இந்தியாவின் தலையீடு எவ்வாறு அமைய வேண்டுமென்று எண்ணுகின்றீர்கள்? ஏனெனில் இந்தியாவின் தலையீடு இன்றி அல்லது அனுசரனையின்றி தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை காண முடியாது என்பது ஒரு நீண்டகாலப் பார்வை. ஆனால் தமிழர் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் அது நிகழ வாய்ப்பில்லை. இந்தியாவுடனான கூட்டமைப்பின் ஊடாட்டமும் கூட மிகவும் குறைந்து விட்டதாகவே தோன்றுகின்றது. உதாரணமாக திரு.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் ஒரு முறை கூட இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக பயணிக்கவில்லை. இந்த நிலையில் இந்த விடயத்தை எவ்வாறு கையாளலாம் என்று எண்ணுகின்றீர்கள்?

இந்தியா தான் எமக்கு 13வது திருத்தச் சட்டத்தைத் தந்தது. எனவே அது மாற்றப்படும் போது இந்தியாவின் அனுசரணை அவசியம். இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவது எமது தலையாய கடமை என்றே கூறுவேன். பாரதத்துடனான எமது உறவுகள் மிக நெருக்கமாகவே இருக்கின்றன.

தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் தங்கள் மீது பெரும் மதிப்பும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அவர்களுடைய அழைப்பின் பேரில் நீங்கள் அங்கு சென்றும் வந்திருக்கின்றீர்கள். ஆனாலும் 2009இற்கு பின்னர் புலம்பெயர் அமைப்புக்களுக்கிடையிலும் ஒருங்கிணைவும் ஒன்றுபட்ட வேலைத்திட்டமும் இல்லை. இதற்கு காரணம் களத்திலிருந்து அவர்களை வழிப்படுத்தக் கூடிய ஒரு வலுவான தலைமை இல்லை. இந்த நிலையில்தான் அனைவரது பார்வையும் உங்களின் பக்கம் திரும்பியது. நீங்கள் புலம்பெயர் சமூகத்தோடு தொடர்பிலிருப்பவர் என்னும் வகையில் அவர்களது செயற்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

எமது தமிழ்ப் பேசும்  பாராளுமன்றத்தினர் சுயநலம் களைந்து யாவருடனும் ஒத்துழைத்தால் உலகத் தமிழ் மக்கள் யாவரும் ஒரு கொடிக் கீழ் நின்று உறவாடும், போராடும் ஒரு நிலை ஏற்படலாம். எம்மைப் பொறுத்த வரையில் கனடா மற்றும் பிரித்தானியாவில் இரட்டை நகர உடன்படிக்கைகள் மூலம் அங்குள்ள எம்மவரை இங்குள்ள எம்மவருடன் சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்;க ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் வருகின்றோம். முதலமைச்சர் நிதியத்தை அரசாங்கம் தொடர்ந்து தாமதப்படுத்துவதால் பொருளாதார முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் மக்களுடனான நெருங்கிய உறவுகளை நாம் ஏற்படுத்துவோம். அதில் சந்தேகம் வேண்டாம்.

மகிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்த போது இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் மேற்குலகு கூடுதல் கரிசனையை காண்பித்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த விடயங்கள் படிப்படியாக கிடப்பிற்குச் செல்கின்றன. ஆனால் எங்களுக்குத் தெரியும் கொழும்பின் ஆட்சியாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளாது விட்டால் தமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு விடயத்திலும் அக்கறை காண்பிக்க மாட்டார்கள். இந்த நிலையில் சர்வதேச அழுத்தங்களை பேணிப் பாதுகாக்கும் வகையில் களமும் புலமும் எவ்வாறு செயற்படலாம் என்று கருதுகின்றீர்கள்?

அது தான் ஏற்கனவே கூறிவிட்டேன். எமது தலைவர்களின் சிந்தனையில் தெளிவு ஏற்படவேண்டும். நாம் சிங்களவரைப் பகைத்து எதுவும் பெறமுடியாது அவர்களை அண்டி வாழ்வதே ஒரே வழி என்று எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றுவதாக முடியும். யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்னேற யாவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு முட்டுக் கட்டைகள் ஏற்படுத்துபவர்களை அடையாளம் கண்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். இடைக்கால அறிக்கையைப் பார்க்கின்ற போது  களமும் புலமும் கைகோர்க்க வேண்டிய கட்டம் வந்துகொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

இறுதியாக, நீதியரசர் விக்கினேஸ்வரன் மீது தமிழ் மக்கள் அளவுகடந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கின்றனர். விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் தங்களுடன் இருக்க வேண்டுமென்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் இந்த மக்களுக்காக விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்? மக்கள் எதிர்பார்ப்பது போன்று நிற்பாரா?


விக்னேஸ்வரன் என்றென்றும் மக்களுடன் தான். அவரை வழி நடத்துவது இறைவன். அவ்வளவு தான் இப்போதைக்கு என்னால் கூற முடியும்.