Apr 21

மகிழ்ச்சியாக வாழட்டும்!

நியூயார்க்கில் வசிக்கும் 24 வயது அல்மா டோர்ரெஸ், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருகிறார். ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, இடுப்பு வலி, தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் முடி போன்ற பல பிரச்சினைகள் இதன்மூலம் ஏற்படுகின்றன. எடை அதிகரிப்பு, தூக்கமின்மை, இதயக் கோளாறுகள் போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

16 வயதிலிருந்து இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அல்மா, முகத்தில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர்ந்ததால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார். ஒருகட்டத்தில் மனதளவில் சோர்ந்து போய், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஆனால் அவரது காதலர், “மீசை, தாடியுடன் இருந்தாலும் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்! இயற்கையாக இப்படியே இருந்துவிடு. இதில் எனக் கொன்றும் பிரச்சினை இல்லை” என்று சொல்லி, அல்மாவுக்கு நம்பிக்கையளித்தார்.

அதற்குப் பிறகு தாடி, மீசையுடன் வெளியில் செல்ல ஆரம்பித்தார். “எனக்கு நேராக எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நான் நடந்து செல்லும்போது செல்போனில் படம் பிடிப்பார்கள். இன்று எல்லாவற்றையும் எளிதில் கடந்துவிடும் மனநிலையில் இருக்கிறேன். தாடி, மீசையால் இன்னும் கம்பீரமான, தைரியமான பெண்ணாக உணர்கிறேன். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறித்து பிற பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். ஐந்து ஆண்டுகளாக என் காதலர் கொடுத்த நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு தூரம் மாறியிருக்கிறேன். இதைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கை அடைந்தால் போதும்” என்கிறார் அல்மா.

“உள்ளத்தைத் தான் நான் பார்க்கிறேன். தாடியும் மீசையும் ஒரு குறையாகவே என்றைக்கும் தெரிந்ததில்லை. நோயை எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டுப் பிறர் என்ன நினைக்கிறார்களோ என்று வருத்தப்படுவது கொடுமையானது. அல்மா தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டுவிட்டார். இனி எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்” என்கிறார் டெய்லர்.