Oct 05

என் பிள்ளை நடைப்பிணமானான் இலங்கையில் தொடரும் சித்திரவதை

இந்த வருச (2017) முற்பகுதியில நான் யாழ்ப்பாணம் போய் மாமாவோட வந்துகொண்டிருந்தனான். வீட்டிலயிருந்து 200 மீற்றர் தூரத்துல, வெள்ள வான் நிண்டது. நான் கணக்கெடுக்காம வந்தனான். பின்னால வந்து வழிமறிச்சு என்ட பெயர கேட்க நான் கத்த வெளிக்கிட, சத்தமிடக் கூடாதென்று சொல்லி இழுத்து ஏத்திக்கொண்டு போனாங்க. கத்தக்கூடாதெண்டு சொல்லி வாய கட்டினாங்க. சுமார் மூண்டு மணிநேரம் வான் ஓடிக்கொண்டிருந்ததுஎன்று போர் முடிந்தபின்னும் தான் கடத்தப்பட்டதையும் சித்திரவதைக்குள்ளானதையும் விவரித்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கமைய இலங்கை ஆறாவது ஆண்டாகவும் இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது. அதேவேளை, புதிய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றபோதிலும் இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு  அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு சித்திரவதைகளுக்குள்ளான 230 பேருக்கு தாங்கள் உதவிசெய்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம்செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தனது விஜயத்தின் இறுதியில் இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். நாட்டில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு பொலிஸாரும் இராணுவம் உட்பட முப்படையினரும் இந்தச் சித்திரவதைகளில் ஈடுபட்டுவருவதுடன், அதனை அவர்கள் நியாயப்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

நாட்டில் அமைந்துள்ள இராணுவ முகாம்களிலுள்ள சித்திரவதைக்கூடங்களில் குடிவரவு மோசடிகள், மனிதக் கடத்தல்கள், அச்சுறுத்தி பணம் பறித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்வதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வெள்ளை வானில் ஆட்களைக் கடத்துவது ஆச்சரியப்படவேண்டிய விடயமல்ல எனவும், கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குச் சான்றாக ராஜாவின் இந்த வாக்குமூலம் ஆதாரமாக உள்ளது.

வானிலிருந்து இறக்கி ஒரு படியால கொண்டுபோய் ஒரு செல்லுக்குள் போட்டுவிட்டவங்கள். அடுத்தநாள் காலம வேறொரு அறைக்கு கொண்டந்தாங்கள். ரெண்டு பேர் தங்கள இராணுவ புலனாய்வுத்துறை என்று அறிமுகப்படுத்தினாங்க. மீள இயக்கத்த உருவாக்க முயற்சிக்கிறியோ என்று கேட்டு சித்திரவதை செஞ்சாங்க. கொட்டனால அடிச்சு, வாங்குல இருத்திப்போட்டு குதிக்காலாலெல்லாம் அடிச்சாங்க. ஆண்குறியெல்லாம் இழுத்து அடிக்கேக்க நான் மயங்கிப்போயிற்றன் என அவர் தான் அனுபவிச்ச சித்திரவதையை விவரிக்கும் ஒளி நாடாவும் அந்த அமைப்பிடம் உள்ளது.

இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இருப்பதோடு, தமிழர்களை சித்திரவதை செய்வது பெருமளவு இலகுவானதாக இருப்பதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்ட அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவிக்கின்றார்.

இந்த அரசு பதவியேற்றதன் பின்னர் சித்திரவதைக்குள்ளான 57 தமிழர்களின் விவரங்கள் தம்மிடம் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களில் 24 பேர் 2016 மற்றும் 2017இன் ஆரம்ப காலப்பகுதியில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் எந்தவொரு அலுவலரோ அல்லது சந்தேகநபரோ விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்ட அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, தம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் இராணுவ சீருடையில் இருந்ததாகவும், ஜோசப் முகாம் எனப்படும் பாதுகாப்புப் படையின் வன்னித் தலைமையகத்திலேயே அது நடந்தது எனவும் பாதிக்கப்பட்டவர்களில் எட்டு பேர் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

நாலு ஆக்கள் சிவில் உடையில வந்து என்ன கூட்டிக்கொண்டு போகவேணும் எண்டு சொன்னாங்க. நான் வரமுடியாதென்டு கூற. என்ர கழுத்த பிடிச்சு வானுக்குள்ள ஏத்தினாங்க. அதற்குப் பிறகு கையைக் கட்டி, கண்ணயும் கட்டிட்டாங்க. வாய்குள்ள துணிய வச்சிற்றாங்க. அப்பிடியே கொண்டுபோய் கூடாதா மணமுள்ள ஒரு அறயில அடச்சாங்கள். ரெண்டு பேர் வந்து தாங்கள் இராணுவம் என அறிமுகப்படுத்தினாங்கள். உன்ன பத்தி விசாரிக்கணும் எண்டு சொல்லி கொடுமைப்படுத்தினாங்கள்என தான் சித்திரவதை அனுபவிச்ச கதையைக் கூற ஆரம்பித்தார் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

முன்னாள் போராளிகள ஏன் சந்திச்சாய்” எனக் கேட்டு காது சுவத்துல படுறமாதிரி மற்ற காதைப்பொத்தி அடிச்சாங்கள். பொலித்தீன் பேக்ல பெற்றோல ஊத்தி அத கட்டி எனக்கு மூச்சுத்திணற வச்சாங்க. எனக்கு ஒண்டும் தெரியாது. என்ன விட்டுறுங்கோ என கெஞ்சினன். அவங்க கேட்கவே இல்ல. சிகரெட் பிடிச்ச ஒருத்தன் என் நெஞ்சிலயும், முதுகுலயும் சிகரெட்டால சுட்டான். நான் வலி தாங்கமாட்டாம கத்தினன். ஓங்கி உதைக்க நான் விழுந்திட்டன். அப்புறம் தண்ணிக்குள்ள மூஞ்சிய தள்ளி உண்மைய சொல்லச் சொன்னாங்க. இரும்பு கம்பிய சூடாக்கி பொய் சொல்றதா சொல்லி. கைகால கட்டிட்டு முதுகில கோடு போட்டு சிரிச்சாங்க” என்று ரவி சொல்லும் அந்த ஒளிப்பதிவும் இந்த அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு, சித்திரவதைகள் நடைபெற்றதாகக் கூறப்படும் கருத்தை முற்றாக நிராகரிக்கின்றது. ஆனாலும், சித்திரவதைகள் நாட்டில் நடைபெற்றதாகவோ தற்போது நடைபெறுவதாகவோ இலங்கை அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் சித்திரவதைகள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக அரசு நிராகரித்து வருகின்றது. இலங்கையில் புதிய ஆட்சியின் கீழும், பலர் மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை உண்மைக்கு புறம்பானது என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், ஒருசில பொலிஸ் அதிகாரிகள் தவறிழைத்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரிப்பதற்குத் தயார் எனவும் ஏற்றுக்கொண்டுள்ள அரசு சித்திரவதைகள் நடைபெற்றதாகக் கூறப்படும் கருத்தை முற்றாக நிராகரிக்கின்றது. இந்நிலையில், கடத்திச்சென்று சித்திரவதைக்குள்ளான இரண்டு வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கக் கிடைத்தது.

எனது மகனை கடத்திச்சென்று மூன்று வருடங்கள் தடுத்துவைத்திருந்தார்கள். அவனுக்கு நடந்த சித்திரவதையால் இண்டைக்கு ஒரு நடைப்பிணமாக இருக்கிறான். அவன் திரும்பி வருகையில் அவனது உயிர் மாத்திரமே எஞ்சியிருந்தது. இந்த 30 வயசில எதுவுமே செய்யமுடியாதவனாய், நடைப்பிணமாய் இருக்கிறத பாக்க பெத்த வயிறு பத்தி எரியுது” என்று அழுகிறார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான ஓர் இளைஞனின் தாய் (வவுனியா).

இதேபோல், முல்லைத்தீவிலுள்ள ஒரு தந்தையின் உடைந்துபோன குரல். “என் மகன் யுத்தம் முடிந்து ஒரு வருடத்தின் பின்னர் (2010 மே) காணாமற்போயிருந்தார். பின்னர் கடத்தப்பட்டதாக அறிந்தோம். மூன்று வருடங்களின் பின்னர் அவர் தெய்வாதீனமாக திரும்பிவந்தார். ஆனால், அவற்ற உடலில உயிர் மட்டும்தான் இருந்தது. அவ்வளவு சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார். இன்று அவர் ஒரு நோயாளி. அவங்கள் ஈவிரக்கம் இல்லாமல் சப்பி துப்பின சக்கையாக இருக்கிறார். சித்திரவதையால எங்கட பிள்ளை கஸ்ரப்பட்டுது. இப்ப காலமெல்லாம் சித்திரவதையை நாங்கள் அனுபவிக்கிறம்.என்னத்தை சொல்லுறது. எங்களுக்கு விடிவுகாலமே இல்லை.

பெயர் விபரங்களை வெளிப்படுத்த விரும்பாத இருவரும் இலங்கையில் நடக்கும் சித்திரவதைகளின் நேரடிச் சாட்சிகளின் காவலர்கள். தம் பிள்ளைகள் உயிருடன் இருக்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டியழுத பெற்றோருக்கு உயிர் இருந்தாலும் நடைப்பிணமாக இருக்கும் தம் பிள்ளைகளைப் பார்க்க வேதனை இரட்டிப்பாகிறது. இதுக்கு அவர்கள் திரும்பி வராமலே இருந்திருக்கலாம் என ஒரு கணம் அவர்களை எண்ணவைக்கிறது