Apr 19

தமிழீழ தேசியப்பற்றாளர் தெய்வேந்தரநாதன் காலமானார்

தமிழீழ தேசியப் பற்றாளரும், கனடா தமிழ் ஊடகங்களின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்தவரும், சமூக சேவகருமான கார்த்திகேசு தெய்வேந்திரநாதன் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 18) கனடாவில் காலமானார். மரணமடையும்போது அவருக்கு 64 வயது.

யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட தெய்வேந்திரநாதன் புலம்பெயர்ந்து கனடாவில் கனடிய பாதுகாப்பு அமைச்சில் கணக்காளராகப் பணிபுரிந்துவந்துள்ளார்.  

கனடாவில் உலகத் தமிழர் பத்திரிகை, ஈழமுரசு ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை வழங்கிய இவர், கனடிய செய்திகளை தமிழில் மொழிபெயர்துக்கொடுப்பதுடன், கட்டுரைகள் பலவற்றையும் இவற்றில் எழுதியுள்ளார். இதன்மூலம் கனடாவிலுள்ள தமிழ் ஊடகத்துறையினர், மற்றும் தமிழ் அபிமானிகள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துள்ளார்.

இதனைவிட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் முக்கியமான ஒரு பங்களிப்பை இவர் வழங்கிவந்துள்ளார். கனடா கந்தசுவாமி கோவிலில்  தொண்டர் அடிப்படையில் கணக்காளராக பணிபுரிந்துள்ளார். மொழி மற்றும் சமயத் தொண்டுகளுக்கு ஒருபோதும் பின்நிற்காத இவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்ததியுள்ளது.

தம்பசிட்டி குமார் கார்த்திகேசு, கரவெட்டி செல்லம்மா கார்த்திகேசு தம்பதிகளின் மகனான இவர், சுரேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் தந்தையுமாவார்.

அன்னாரது பூதவுடன் அஞ்சலிக்காக ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 23 ஆம் திகதி பி.ப. 5:00 மணி முதல் பி.ப. 9:00 மணிவரையும், திங்கட்கிழமை ஏப்ரல் 24 ஆம் திகதி காலை 8:00 முதல்  காலை 9:30 வரையில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை காலை 9:30 மணிமுதல் 11:30 மணிவரை CHAPEL RIDGE FUNERAL HOME இல் (8911 Woodbine Ave. Markham, Ontario L3R 5G1) இடம்பெறும்.