Oct 04

தாய் வீடு திலீப்குமாரின் அரங்கியல் விழா

நாட்டுக் கூத்து மேடையேற்றப் பட்டது

தாய் வீடு திலீப்குமாரின் அரங்கியல் விழா இரு நிகழ்வுகளாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு கொடுக்கப் பட்டிருந்த பெயரைப் போல நிகழ்ச்சிகளும் வித்தியாசமாக இருந்தன.

கிளு கிளு நடனங்கள் இல்லை, காதைத் துளைத்தெடுக்கும் இசையுடன் கூடிய திரைப் பாடல்கள் இல்லை, தென்னிந்திய தாக்கம் இல்லை. இவற்றை எல்லாம் ரசிக்கின்ற ரசிகர்களுக்கும் அப்பால், தொலை தூரத்தில் எதையோ தொலைத்து விட்டு, என்னத்தையோ எதிர்பார்த்து, ஏங்கி நிற்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை இனம் கண்டு, அவர்களின் தாகத்தைத் தீர்த்து வைத்திருக்கிறது அரங்கியல் விழா.

கட்டணம் அறவிட்டு நடத்தப் படும் நிகழ்ச்சி ஒன்றில் இவை, இவை உள்ளடக்கப் பட்டால் தான், மண்டபம் நிறையும் என்ற எழுதப் படாத வரையறை ஒன்று, தெரிந்தோ தெரியாமலோ நம்மவர் மத்தியில் ஏற்படுத்தப் பட்டு விட்ட நிலையில், துணிந்து விஷப் பரீட்சையில் குதித்து, இரு நிகழ்வுகளையும் மண்டபம் நிறைந்த நிகழ்வுகளாக நடத்தி முடித்திருக்கிறது தாய் வீடு. நாட்டுக் கூத்து, நாட்டிய நாடகம், கலை நயத்துடன் கூடிய குழு நடனம் ........ .

"நாட்டுக் கூத்தா! ஐயோ, தூக்கம் வருமே, வேண்டாமே இது" என்று அங்கலாய்க்கக் கூடியவர்களும் மண்டபத்தில் இருந்த நிலையில், இவர்களும் ரசிக்கக் கூடிய விதத்தில், pin drop silenceஇல் நாட்டுக் கூத்து மேடையேற்றப் பட்டது அருமை. தெரிந்தோ தெரியாமலோ புறக்கணிக்கப் பட்டு வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டு அவர்களின் இசை திறமையை வெளிக் கொணர்ந்தது சிறப்பு.

நாடகம் அருமை, நாடகம் எதைச் சொல்ல முயற்சிக்கின்றது என்று அதன் இறுதி வரை அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர்களையே கரகோஷம் செய்து ஆர்ப்பரிக்க வைத்தது நாடகத்தின் முடிவு. அந்த இளைஞன் துப்பாக்கியைக் கையில் எடுக்கின்ற போது திரை மூடப் பட ஆயத்தமாகும் வேளையில் முடிவுக் காட்சி........ அசத்தி விட்டார் இயக்குநர். திரை இசை நடனங்களைத் தவிர வேறு எது வித நடனங்களையுமே ரசிக்க மறந்து விட்ட ஒரு கூட்டத்தினரைச் சலிப்பில்லாது பரத நடனத்தையும் இமை வெட்டாது ரசிக்க வைத்த சுழன்று சுழன்று ஆடிய அத்தனை இளம் நர்த்தகிகளுக்கும் ஒரு ஜே! மொத்தத்தில்...... திலீப்குமார்! விஷப் பரீட்சையில் விஷம் உங்களிடம் தோற்று விட்டது. அடுத்த வருடம் மேலும் எதிர் பார்க்கிறோம்..... சிந்திப்போம்...... மீண்டும் சந்திப்போம் ...