Apr 19

ஒன்ராரியோவில் வீடு விற்பனை தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள்

ஒன்ராரியோவில் வீடு விற்பனைச் சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவர்களைக் குறிவைத்து சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஒன்ராரியோவின் நிதி அமைச்சர் சார்ள்ஸ்  சௌசா அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிதாகக் கட்டப்படும் வீடுகளைக் கொள்வனவு செய்யும் முதலீட்டாளர்கள், வீடுகள் கட்டப்படுவதற்கு முன்பாகவே அவற்றைப் பலதடவைகள் மீண்டும் மீண்டும் விற்பனை செய்வதன் மூலம் வீடுகளின் விலைகளைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்வதாக அமைச்சர் சௌசா தெரிவித்தார். இவ்வாறு பல வீடுகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வோர் அவற்றிற்கான வரியைக் கட்டத்தவறுவதாகவும் அமைச்சர் சௌசா  மேலும் தெரிவித்தார்.

எனினும் “Property scalping” என அழைக்கப்படும் இந்தச் செயன்முறை தொடர்பாக சரியான புள்ளிவிபரங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இதையொத்த “Shadow flipping” என்றழைக்கப்படும் நடைமுறை வான்கூவர் நகரிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. வான்குவர் நகரில் வீடுகளின் விலைகள் அதிக அளவில் அதிகரித்தமைக்கு இந்த “Shadow flipping” உம் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது. ஒன்ராரியோவில் இந்த செயற்பாடு புதிதாகக் கட்டப்படும் வீடுகளிலேயே காணப்படுவதாக அமைச்சர் சௌசா  தெரிவித்தார்.

இந்த நிலையில் வீட்டுச் சந்தையில் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒன்ராரியோ மாகாண வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது