Mar 04

இலங்கையை கண்டிக்க இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும்: அன்புமணி

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


"ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34-வது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.


இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது. மாறாக, நீதியின் பக்கம் நிற்க முன்வர வேண்டும். ஐநா மனித உரிமை பேரவையில் 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பரிந்துரைகளையும், உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தையும் இந்திய அரசு அதன் தீர்மானத்தில் முன்வைக்க வேண்டும்.


கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை இலங்கை அரசு செயல்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் விவாதிப்பதையும் உறுதி செய்யும்படி இந்தியத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்.


இலங்கை இறுதிப்போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தரும் நோக்குடன், இலங்கை சிக்கலை ஐநா பொது அவையின் மூலம் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கு கொண்டு செல்லும்படியும் ஐநா மனித உரிமை பேரவையை இந்தியா கோர வேண்டும்.


ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பொருத்தமான தீர்மானத்தைக் கொண்டு வந்து நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் கடமையை இந்தியா நிறைவேற்ற வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.