Sep 29

வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி : கென்யாவில் அதிசயம்

கென்ய வனவிலங்கு சரணாலயத்தில் அரிதிலும் அரிதாக இருக்கும் வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி முதன்முறையாக வீடியோவில் பதிவானது.

பூமியில் வாழும் விலங்குகளுள் உயரமான உயிரினம் ஒட்டகச் சிவிங்கி. இது ஆப்ரிக்காவில் அதிகளவில் காணப்படுகின்றன. ஒட்டகம் மாதிரி உயரமாகவும், சிறுத்தைபுலி மாதிரி புள்ளிகளை பெற்றிருப்பதாலும் இதற்கு ஒட்டகச்சிவிங்கி என பெயர் வந்தது என கூறுப்படுகிறது. ஆண் ஒட்டகச் சிவிங்கி 16 அடி முதல் 18 அடி உயரம் வரை இருக்கும். இதன் சிறப்பம்சமே அதன் நீண்ட கழுத்து தான்.

இவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட 10 சதவீதம் நீளமானவை. இதன் கர்ப்பகாலம் 14 - 15 மாதங்கள். பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டிபோடும்போது நின்றுகொண்டேதான் பிரசவிக்கும். குட்டி ஆறு அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தாலும் எந்தக் காயமும் ஏற்படாது. பிறந்து சில மணி நேரங்களில் குட்டிகள் ஓடக்கூடியவை. இது வெப்பமான வறண்ட பகுதிகளில் அதிகளவில் வாழ்கின்றன.

வீடியோவில் பதிவு : இந்நிலையில் கென்யாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் வெள்ளை நிற தாய் மற்றும் குட்டி ஒட்டகச்சிவிங்கி நடந்து செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதற்கு முன் 2016 ஜனவரியில் தான்சானியாவில் முதன்முதலாக வெள்றை நிற ஒட்டகச்சிவிங்கி கண்டுபிடிக்கப்பட்டது.

பின் 2016 மார்ச்சில் கென்யாவில் அறியப்பட்டது. ஆனால் நேற்று முதன்முறையாக இது வீடியோவில் பதிவாகியுள்ளது. 'லியூசிசிம்' எனும் நிறமி பாதிப்பு காரணமாக விலங்குகளில் சில இவ்வாறு முழுவதும் வெள்ளை நிறத்தை பெறுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.