Apr 17

கனடாவில் 2018 இல் சட்டபூர்வமாகும் கஞ்சா வினியோகமும் ஒன்ராரியோ மாகாணம் எதிர்நோக்கும் சிக்கலான தெரிவுகளும்

கனடாவில் கஞ்சா வினியோகத்தை 2018 இல் சட்டபூர்வமாக்கும் முயற்சிகளில் லிபரல் அரசு ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக ஒன்ராரியோ மாகாணம் சிக்கலான தெரிவுகளை எதிர்நோக்குகிறது. கஞ்சா விற்பனை, விநியோகம் செய்யப்படும் முறைகள், அதைப் பாவிப்பர்களின் வயதெல்லை போன்ற விடயங்கள் இவற்றில் சிலவாகும்.

மத்திய அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையை அடுத்து ஒன்ராரியோ மாகாணம் பாரிய அளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது என ஒன்ராரியோ மாகாண சட்டமா அதிபர் Yasir Naqvi தெரிவித்துள்ளார்.

விற்பனை வலையமைப்பு, கஞ்சாவை வாங்கக் கூடியவர்களின் வயதெல்லை இளையோரைப் பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், வீதிகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தல், குடிமக்களுக்கு கஞ்சாப் பாவனை பற்றிய ஆபத்துக்களைத் தெளிவுபடுத்தல் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்ராரியோவில் மதுபானப் பாவனைக்கான சட்டரீதியான அதிகுறைந்த வயது 19 ஆகும். ஆயினும் மத்திய அரசின் கஞ்சாப் பாவனைக்கான அதிகுறைந்த வயது 18 ஆகும். இந்த விடயம் ஒன்ராரியோ மாகாண அரசு எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாகும்.