Sep 28

மக்களின் சொத்து தியாகி திலீபன்

கிட்டத்தட்ட 2 தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத் தில் தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் பெருமெடுப்பில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடந்துள்ளது. தனது இனத்துக்காகத் தன்னையே ஆகுதியாக்கிக்கொண்ட ஒரு இளைஞனின் நினைவுகளை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் இனம் மீட்டெடுத்திருப்பது கவனத்துக்குரியது.

இன்றைய தமிழ்த் தலைமுறைக்கு திலீபனின் நினைவுகள் மிக முக்கியமானவை. தமிழர்களது மிகக் குறைந்தளவு கோரிக்கை கள்கூட ஆட்சியாளர்களாலும், பிராந்திய வல்லரசாலும் எவ்வாறு துச்சமாக மதிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஏகப்பட்ட கவனக் கலைப்பான்களுக்கு மத்தியில் விடுதலைத் தீயை நெஞ்சில் தொடர்ந்து ஏந்திச் செல்வதற்கும் திலீபனின் நினைவுகள் மிக மிக அவசியம்.

இப்போது வேடமிடுவோரினதும், நன்மைகள் செய்கிறோம் என நடிப்போரினதும் சுயரூபம் என்ன என்பதை இளைய தலைமுறை உணர்வதற்கும், உண்மையைப் புரிந்துகொள் வ தற்கும் அது அவசியம்.

திலீபன் கொழும்பு அரசிடமும், இந்திய அரசிடமும் முன் வைத்த கோரிக்கைகள் 5. அவை ஒன்றும் நிறைவேற்றவே முடியாத கருதுகோள்கள் அல்ல. நடைமுறைச் சாத்தியமான சிறு கோரிக்கைகள் மட்டுமே.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், -சிறைக்கூடங்களிலும் இராணுவ ,பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும், -அவசர காலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்,- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களை யப்படவேண்டும், -தமிழர் பகுதிகளில் புதிதாக பொலிஸ் நிலை யங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் ஆகியவை தான் திலீபன் முன்வைத்த கோரிக்கைகள்.

நிறைவேற்றுவதில் எந்தச் சிக்கல்களும் இருக்க முடியாத இந்தக் கோரிக்கைகளை, மேலாதிக்கத் திமிரோடு கொழும்பும், வல்லாதிக்கத் திமிரோடு இந்தியாவும் நிராகரித்தன. அதனா லேயே திலீபனின் சாவு சம்பவித்தது. அதுவரையில் இந்தியா மீது தமிழ் மக்களுக்கு இருந்து வந்த மயக்கத்தை நீக்கினான் திலீ பன். அகிம்சையைப் பேசினாலும், வல்லாதிக்க சக்திகள் எப் போதும் ஆதிக்க சக்திகளே; அவை ஆதிக் க சக்திகளுடன்தான் கைகோர்க்கும் என்பதைத் தமிழர்களுக்குப் புரிய வைத்தான்.

துன்பியல் என்னவென்றால், அவன் போதித்தவற்றைத் தமிழ் மக்கள் கற்றுக்கொண்டார்களா என்பதுதான். 30 ஆண்டுகள் கடந்தும் அவனது கோரிக்கைகள் அப்படியேதான் உயிர்வாழ் கின்றன. அவற்றுக்குத் தீர்வு வரவில்லை. அதற்குக் காரணம், சிங்கள பௌத்த மேலாதிக்கமும் ,இந்திய வல்லாதிக்கமும்தான் என்பதை அடுத்து வரும் தலைமுறைகள் புரிந்துகொள்ளவும், அதற்கேற்பத் தமது அரசியலை முன்னகர்த்தவும் திலீபனின் நினைவுகள் மிக முக்கியமானவை.

எனவே திலீபனின் நினைவுகள் மீட்கப்பட்டிருப்பது ஈழத் தமிழ் இனத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது. ஆனால், அது அரசியல் கட்சி சார் நடவடிக்கைகளாக முடங்கிவிடாமலும், அரசியல் போட்டிக்குள் சிக்கிவிடாமலும் இருப்பதை உறுதிப்படுத்துவதும் முக்கியமானது. அதற்கு, நினைவு தினங்கள் எல்லாவற்றையுமே கையாளக்கூடிய அரசியல்சாரா பொதுக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப் படவேண்டும்.

நினைவுகளையும் நினைவிடங்களையும் மீட்டெடுப்பதில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு இன்றியமையாதது, தேவையானது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது தானென்றாலும் தொடர்ந்து அதனை நிர்வகிக்கும் பொறுப்பை பொதுக் கட்டமைப்பு ஒன்றிடம் விட்டுவிடவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையும் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் திலீபன் கட்சிகளின் சொத்தல்ல, அவன் ஈழத் தமிழ் மக்களின் சொத்து.