Apr 16

'ஸ்மார்ட்' அணுகுண்டுச் சோதனை: அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது

உலகின் மிக அபாயகரமான ‘ஸ்மார்ட்’ அணுகுண்டு மாதிரி சோதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவிடம் 7,200-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் உள் ளன. இதில் 2000-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகளை வீச 94 போர் விமானங்கள் உள்ளன. இவை தவிர அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்த 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் உள்ளன.

இந்நிலையில் தற்போதுள்ள அணுகுண்டுகளுக்கு பதிலாக பி61-12 என்ற அதிநவீன ஸ்மார்ட் அணுகுண்டை தயாரிக்கும் திட்டத்தில் அமெரிக்க விஞ்ஞானி கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். வரும் 2020-ம் ஆண்டில் இவை அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பி61-12 அணுகுண்டுகள் தயாரிக்கும் பணியை தீவிரப் படுத்தியுள்ளார். அதன்படி கடந்த 14-ம் தேதி எப்.16 ரக விமானத்தில் பி61-12 அணுகுண்டின் மாதிரி எடுத்துச் செல்லப்பட்டு நிவேடா பாலைவனத்தில் வீசப்பட்டது. இந்தச் சோதனை முழு வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்க அணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1945 ஆகஸ்ட் 6-ம் தேதி ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது அமெரிக்க போர் விமானம் ‘லிட்டில் பாய்’ என்று பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது. இது 18 கிலோடன் சக்தி கொண்டதாகும். அந்த அணுகுண்டால் 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா தற்போது தயாரித்து வரும் பி61-12 ஸ்மார்ட் அணுகுண்டு 340 கிலோடன் சக்தி கொண்டது என்று கூறப்படுகிறது. இது பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அணுவிஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.