Apr 16

வரும் காலங்களில் ரஜினி - கமல் போன்ற ஆளுமைகள் கிடைக்குமா?- வைரமுத்து கேள்வி

இனி வரும் நூற்றாண்டுகளில் ரஜினி - கமல் போன்ற ஆளுமைகள் தமிழ் சினிமாவில் கிடைக்குமா என்று வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா, 'பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனம்' ஒன்றை சென்னையில் துவங்கியுள்ளார். இதனை ரஜினி, கமல் திறந்து வைத்தார்கள்.

இவ்விழாவில் வைரமுத்து, இயக்குநர் கே.பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி, ராம், சேரன், சமுத்திரக்கனி, நடிகைகள் ராதா, அம்பிகா, ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் வைரமுத்து பேசுகையில் "1950களில் பிறந்த யாரும் 4 பேரை ரசிக்காமல் இருக்க முடியாது. அந்த நால்வரும் பாதிப்பு இல்லாமல் யாரும் தமிழ்நாட்டு காற்றை தனியாக சுவாசித்திருக்க முடியாது. எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி மற்றும் கண்ணதாசன் இந்த நால்வரும் தான் 1950-களில் பிறந்தவர்களைப் பாதிக்கிறவர்கள். இவர்களின் எழுத்து, அசைவு, கவிதை, உச்சரிப்பு அனைத்துமே தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வியலை ஏதாவது ஒரு மூலையில் பாதித்தது. அந்த பாதிப்பில் வளர்ந்தவன் தான் நான்.

இந்த நான்கு ஆளுமைகளைத் தாண்டி, இன்னொரு ஆளுமை திரையுலகில் உண்டு என்று வியந்தது பாரதிராஜாவை மட்டும் தான். இந்த பாரதிராஜாவை நான் நேசித்ததிற்கு காரணம் அவருடைய ஆற்றல் என்பதை விட, எங்கள் மண்ணுக்கு அவர் கொடுத்த மரியாதை. எங்கள் ஊரின் அனைத்து பெருமைகளையும் திரையில் பதிவு செய்ய முடியும் என்று காட்டியவர் பாரதிராஜா. எனவே, எங்கள் மண்ணின் கலைஞன் என்று அவரை சந்திக்கப் போனேன். நான் இயக்குநர்களில் அதிகம் நேசிப்பவர் பாரதிராஜா என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித தயக்கமுமில்லை.

5 ஆண்டுகள் திரையுலகைவிட்டு தள்ளியிருந்தால், திரையுலகின் பாதி உறவுகள் அறுந்துவிடும். மீதி கொஞ்ச நாட்களில் திரையுலக நட்பு சுருங்கிவிடும். ஆனால், பாரதிராஜா 40 ஆண்டுகளாக நிகழ்கால கலையுலகில் தனது சுவடுகளை பதித்து வருகிறார் என்பது அவருடைய சாமர்த்தியம். அவர் எதையும் நம்ப வைக்கக்கூடிய வல்லமை உள்ளவர்.

எனக்கு ரஜினி மற்றும் கமல் இருவரின் மீதும் இருக்கக்கூடிய காதலே பயணித்தின் நீட்சி தான். இனி வரும் உலகம் மிகவும் வேகமான உலகம். இந்த உலகம் 5 நிமிடத்தில் ஒருவனை உலகப்புகழுக்கு கொண்டுவந்து விடும். 3 நிமிடத்தில் மறக்கடித்துவிடும். இந்த வேகமான யுகத்தில் கூட கறுப்பு வெள்ளை யுகத்திலிருந்து இந்த டிஜிட்டல் யுகம் வரை வந்திருக்கும் இவ்விரண்டு கலைஞர்களைப் பார்க்கும் போது, இனி வரும் நூற்றாண்டுகளில் இவ்விரண்டு ஆளுமைகள் போல் தமிழ் சினிமாவில் கிடைக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்வி.

இயக்குநர் பாரதிராஜாவின் படங்கள் மட்டும் தான், தமிழன் நாகரிகத்தின் படிமங்களைக் காட்டக் கூடிய எச்சங்கள். அவரைப் பார்த்து பெருமைப்படுகிறேன். பல நேரங்களில் சிறுசிறு முரண்பாடுகள் உண்டு.

தமிழ் சினிமா 100 ஆண்டுகளை கடக்கும் தருவாயில் இந்த பயிற்சி கல்லூரி வந்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவுக்கு சரியான ஆவணங்கள் இல்லை. சரியான ஆவணக் களஞ்சியங்கள் தயாரியுங்கள்" என்று பேசினார் வைரமுத்து.