Apr 16

கடம்பன்; ஒரு விமர்சனம்

காட்டை காசாக்க நினைக்கும் கார்ப்பரேட் முதலாளியின் சதித் திட்டங்களும், அதை முறியடிக்க முயற்சிக்கும் பூர்வகுடிகளின் போராட்டமே 'கடம்பன்'.

பல தலைமுறைகள் கடந்தும் காலம் காலமாக மலையை விட்டு கீழே வராமல் கடம்பவனத்தில் மக்கள் வாழ்கின்றனர். சிமெண்ட் தொழிற்சாலைக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்களை எடுப்பதற்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கடம்பவனம் உள்ளிட்ட சுற்றியுள்ள மலைப் பகுதிகளை அழிக்கப் பார்க்கிறது. இதற்கு வனத்துறை அதிகாரிகளும் துணை போகின்றனர். மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது கார்ப்பரேட் நிறுவனம். அதற்குப் பிறகு என்ன ஆகிறது, மக்கள் மலையை விட்டு கீழே வந்தார்களா, அவர்கள் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொண்டார்கள் என்பதைச் சொல்கிறது 'கடம்பன்'.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையையும், பூர்வ குடிகளின் பரிதாப நிலையையும் அழுத்தமாக சொன்ன விதத்தில் இயக்குநர் ராகவா கவனம் ஈர்க்கிறார்.

ஆர்யா அகன்ற தோள்கள், விரிந்த மார்பு, கட்டுமஸ்தான உடல், தீர்க்கமான பார்வை, எதிரிகளைப் பந்தாடும் ஆவேசம், காதல் காட்சிகளில் கண்ணியம் என்று முழுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். மரம் விட்டு மரம் தாவுவது, அசுர வேகத்தில் மரம் ஏறுவது என ஆர்யா பார்யா என ஆச்சரியப்பட வைக்கிறார்.

கேத்ரீன் தெரஸாவுக்கு ஆர்யாவை பின் தொடர்வதும், காதல் செய்வதுமே வேலையாக இருக்கிறது. நாயகிக்கான பங்களிப்பை சரியாக வழங்குகிறார்.

தீப்ராஜ் ராணா, சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ், ராஜசிம்மன், மதுவந்தி அருண், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

காடு, மலை, அருவி என்று ஒட்டுமொத்த அழகையும், ரம்மியத்தையும் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் நம் கண்களுக்கும், மனதுக்கும் கடத்துகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒத்த பார்வையில், ஆகாத காலம் ஆகிய இரு பாடல்களும் ரசனை. பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது.

''வசதிங்கிறது வாழ்ற தரத்துல இல்லை. வாழ்ற முறையில இருக்கு'', ''காட்டை அழிக்குறது கர்ப்பப்பையில் இருக்குற குழந்தை கத்தி எடுத்து தாயை அழிக்கிற மாதிரி'', ''காட்டை அழிக்க உன்னை மாதிரி 1000 பேர் வந்தா என்னை மாதிரி 100 பேர் வருவான்'', ''நம்ம பாட்டன் பூட்டன் பாத்த பாதி வளங்களை நம்ம ஐயனுங்க பார்க்கலை, நம்ம ஐயனுங்க பார்த்த மீதி வளங்களை நாம பார்க்கலை, இன்னைக்கு நாம பார்த்த வளங்களை நமக்கு பின்னாடி வர்ற சந்ததிங்க பார்ப்பாங்களா இல்லையான்னு தெரியலை', ''எங்க சந்ததியை சார்ந்த கடைசி ஒருத்தன் இருக்குற வரைக்கும் உங்களால காட்டுல இருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க முடியாது'' என்ற தேவ்- ராகவாவின் வசனங்கள் படத்துக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.

கார்ப்பரேட் நிறுவனத்தின் பேராசையையும், அதற்கான வியாபார வியூகங்களையும், அதற்கு ஒத்துழைக்கும் அதிகாரிகளின் சுயநலத்தையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராகவா. தனியார் தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறைகளையும் அக்கறையுடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சைகை மொழி, புதை குழி, சடலம் புதைக்கும் விதம், சடங்கு, தேன் எடுத்தல், கிழங்கு கொண்டு வருதல் உள்ளிட்ட மலை வாழ் மக்களின் வாழ்வியலை நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். யானைக் கூட்ட நடுவிலான ஆர்யாவின் ஆக்ரோஷம் அசத்தல்.

ஆனால், மிகப் பெரிய துப்பாக்கிகளுடன் பலம் பொருந்தியவர்களாக வரும் படைகளை காட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே விரட்டி அடிக்கும் விதம், லாரிகள், ஜேசிபி இயந்திரங்களைத் தாக்கும் விதம், டயர்கள் மூலம் விரோதிகளை துரத்தும் விதம் ஆகியவை நம்பும்படியாக இல்லை. அரசுக்குத் தெரியாமல் இரண்டு அதிகாரிகள் புலிகள் காப்பகம் அமைக்கப் போவதாக சொல்லிவிட முடியுமா? காடுகளுக்கும் மனிதர்களுக்குமான தொன்றுதொட்டு வரும் தொடர்பை, உறவை உணர்வுபூர்வமாக சொல்வதில் சறுக்கல் தெரிகிறது.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் பூர்வகுடிகளுக்கு ஏற்படும் ஆபத்தையும், காடு வாழ் உயிரினங்களுக்கு நிகழும் பாதிப்புகளையும், இயற்கையின் மதிப்பையும் உணர வைத்த விதத்தில் 'கடம்பன்' கைவிடவில்லை.