Sep 23

மருத்துவர் பொன்.சத்தியநாதன்.. வாழ்வார். வரலாற்றில்... - ஓவியர் புகழேந்தி

2000 ஆவது ஆண்டு என்னுடைய உறங்கா நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்று முடிந்த சில மாதங்களில் அண்ணன் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்த மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதன் பிறகு அவர் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அவரை சந்திப்பதும், தமிழ், தமிழீழம், விடுதலைப் போராட்டம், போராளிகள், தலைவர் பிரபாகரன் குறித்து அவரோடு நீண்ட நேரம் உரையாடுவதும் வழக்கமாயிற்று.
தமிழ் மீது அவருக்கு அளவற்ற பற்றும் ஈடுபாடும் இருந்தது. ஒரு மருத்துவராக இருந்தபோதிலும் தமிழ் மொழி குறித்து ஆய்வு நோக்கில் அதிகமாக சிந்தித்தார். மலையாள மொழியை சேரத் தமிழ் என்றே அவர் குறிப்பிடுவார்.
2002 இல் அமெரிக்க, ஐரோப்பிய பயணம் முடித்து திரும்பிய பிறகு, சென்னையில் என்னை சந்தித்த அவர், ஆஸ்த்திரேலியாவிற்கும் நீங்கள் வரவேண்டும் என்று அழைத்தார். சமாதான காலத்திற்குப் பிறகு முதலில் தமிழீழம் சென்று பிறகுதான் தமிழகம் வருவார். 2004 ஆம் ஆண்டு நான் தமிழீழத்திற்கு சென்று, தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து திரும்பிய பிறகு, தமிழகம் வந்த மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்கள் இந்த ஆண்டு மாவீரர் நாளுக்கு ஆஸ்த்திரேலியாவிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அங்கு சென்ற போதுதான் "எரியும் வண்ணங்கள்" "உறங்கா நிறங்கள்" தொகுப்புகளில் இருந்த தமிழீழ விடுதலை சார்ந்த 27 ஓவியங்களை தனியாகப் பிரித்து "புயலின் நிறங்கள்" என்றத் தலைப்பில் காட்சிப்படுத்தினோம். அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தவர் மருத்துவர் பொன்.சத்தியநாதன் அவர்கள்தான்.
ஆஸ்த்திரேலியா சென்ற பிறகுதான் அவர் எப்படிப்பட்ட செயற்பாட்டாளர் என்பதை இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள முடிந்தது. அவர் இல்லமே தமிழ்ச்செயற்பாட்டாளர்களால் நிறைந்திருந்தது. களத்தில் விழுப்புண் அடைந்து, மேலும் களத்தில் நின்று போராட முடியாத போராளிகளை வெவ்வேறு துறைகளில் வளர்த்தெடுத்தார் தலைவர். அது தமிழீழ நாட்டிற்கு பயன்படும் என்று தலைவர் சிந்தித்தார். அந்த சிந்தனைக்கு உயிர் கொடுத்து செயல் வடிவம் கொடுப்பவராக மருத்துவர் பொன்.சத்தியநாதன் இருந்தார் என்பதை அறிந்து வியந்தேன். மருத்துவராக சம்பாதிக்கும் வருவாயை தமிழீழ விடுதலை செயற்பாட்டிற்கு செலவு செய்பவராக இருந்தார். அவர் மனைவி அதற்கு மிகவும் துணையாக இருந்தார். அவர் இல்லத்தில் நான் தங்கியிருந்த பத்து நாட்களும் எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.
தமிழீழத் தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் நேரடித் தொடர்புடைய மருத்துவராகவும், புலிகள் அமைப்பின் மருத்துவ ஆலோசகராகவும், கிளிநொச்சி தமிழீழ மருத்துவமனை நிறுவியவர்களில் ஒருவராகவும் இருந்தார். மருத்துவ மனைக்குத் தேவையான அனைத்து வெளிநாட்டு நவீன கருவிகளையும் தமிழீழத்திற்கு கொண்டுவந்தவர் அவர். இதை நான் பின் வந்த ஆண்டுகளில் தமிழீழம் சென்றபோது அறிந்துகொண்டேன்.
பொன்.சத்தியநாதன் அவர்கள் ஈழத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும், அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத் தமிழ் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் துணை நின்றிருக்கிறார்.
மெல்போர்னில் தமிழ்ப் பாடசாலைகள் தொடங்கி நடத்துவதில் முன்னோடியாக செயற்பட்டு வந்த அவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாகவும் விளங்கினார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் ஆஸ்த்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு முதுகெலும்பாக செயற்பட்டார்.
ஆஸ்த்திரேலியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகளோடும், ஆளுமைகளோடும் நல்ல உறவோடிருந்தார். என்னை பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று உரையாற்ற வைத்தார். சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார். நான் அங்கு சென்றிருந்த போது, தமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருப்பதாகக் என்னிடம் கூறினார். அடிக்கடி என்னிடம் அதுகுறித்து பேசுவார். ஆனால் அதை இறுதி செய்வதற்கு முன்பாகவே, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவர் உடல் நிலை பாதிக்கப் பட்டு செயல்பட முடியா நிலைக்குத் தள்ளப்பட்டார். அது மிகப் பெரிய இழப்பாகும்.
அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் தலைமையில் இயங்கிய உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். அப்போது நானும் அவ்வமைப்பில் தீவிரமாக செயலாற்றினேன்.  சென்னையில் உள்ள உலகத் தமிழர் அலுவலகக் கட்டிடத்தை அவர்தான் வழங்கினார்.
தமிழ், தமிழீழ விடுதலை செயற்பாடுகளில் பங்களித்த பலரை நாம் இழந்துவிட்டோம். இப்போது மருத்துவர் பொன்.சத்தியநாதன். ஆனால் தமிழீழ விடுதலை வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும். அவரால் உருவாக்கப் பட்டவர்கள், பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் அவரும் வாழ்வார். வரலாற்றில்...