Apr 14

256 மாணவர்கள் 9 -ஏ எடுத்துள்ள போதிலும் கல்வியில் பின்னிற்கும் வட மாகாணம்

க.பொ.த சாதரணப் பரீட்சையில் வட மாகாணத்தில் இந்த ஆண்டில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றபோதிலும் தேசிய ரீதியில் வட மாகாணம் இந்த ஆண்டும் 9ம் இடத்தில் இருந்து முன்னேற முடியவில்லை.

க.பொ.த சாதாரணப் பரீட்சையின் பெறுபேறு அண்மையில் வெளிவந்தது . அதன் அடிப்படையில் வட மாகாணத்தில் 459 பாடசாலையை சேர்ந்த 18 ஆயிரத்து 188பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 17 ஆயிரத்து 418 பேர் பரீட்சைக்குத் தோற்றினர். இவ்வாறு தோற்றியவர்களில் 10 ஆயிரத்து 562 பேர் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இதன் பிரகாரம் வடக்கில் 6 ஆயிரத்து 851 மாணவர்கள் சித்தி எய்த தவறியுள்ளனர்.

இவ்வாறு சித்தியெய்த தவறிய மாணவர்களில் 775 மாணவர்கள் எந்தப் பாடத்திலும் சித்தி எய்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தேசிய ரீதியில் முறையே தென் மாகாணம் , மேல் மாகாணம் , சப்ரகமுவா , வட மேல் , மத்தி , ஊவா மாகாணமும் 7ம் இடத்தினை வட மத்திய மாகாணமும் 8ம் இடத்தினை கிழக்கு மாகாணமும் பெற்றுள்ளதோடு தொடர்ந்தும் 9வது இடத்திலேயே வடக்கு மாகாணம் உள்ளது.