Apr 14

இது அமெரிக்க அதிபருக்குத் தெரியுமா?

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் 64 வயது லி லியாங்வி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சாயலில் இருக்கிறார். ஒரு பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

“ஒருமுறை என் கண்ணாடியை வேகமாகக் கழற்றி வைத்தேன். உடனே என் நண்பர் இதே மாதிரிதான் ட்ரம்ப்பும் செய்கிறார். உருவமும் ஒத்துப் போகிறது. அதனால் ட்ரம்ப் போல சில விஷயங்களைக் கற்றுக்கொண்டால், பிரபலமாகலாம் என்றார். எனக்கு மார்ஷியல் கலைகள் மீதும் புரட்சிகர பாடல்கள் மீதும் அளவற்ற ஆர்வம் உண்டு.

நான் ஏன் ட்ரம்ப்பைப் போல என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் ஒருவர் என்னைக் கட்டாயப்படுத்தி, ட்ரம்ப் போல் நடை, உடை, பேச்சு எல்லாவற்றையும் மாற்றுவதற்குப் பயிற்சியளித்தார். எனக்கு அவரைப் போன்று ஆங்கிலம் பேச வரவில்லை.

தலைமுடி, தோல் நிறத்திலும் வித்தியாசம் இருந்தது. பொதுவாக சீனர்களிடம் ட்ரம்ப்க்கு பெரிய வரவேற்பு இல்லை. அதனால் எனக்கு சின்னச் சின்ன விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்புகளே கிடைத்தன. தற்போது சில பொருட்களுக்கு மாடலாக இருந்து வருகிறேன். ஓரளவு நல்ல வருமானமும் கிடைக்கிறது” என்கிறார் லி லியாங்வி.