Apr 13

புதிய வருடத்திலும் தமிழருக்கு தொடரப்போகும் பிரச்சினைகள்

- சஞ்யைன் -

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில் தாயகத்தில் இம்முறையும் வழமையாக ஏற்படக்கூடிய புதிய நம்பிக்கைகளைக் காணமுடியவில்லை. தமிழ் மக்கள் அனுபவிக்கும் அன்றாடப் பிரச்சினைகள், அடிப்படைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வு காணப்படாத நிலையிலேயே புதிய வருடம் பிறந்திருக்கின்றது. அரசியல் தலைவர்கள் தமது புதுவருட வாழ்த்துச் செய்திகளில் என்னத்தைத்தான் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொன்னாலும், யதார்த்த நிலை அதற்கு முற்றிலும் முரணானதாகவே இருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தும் போராட்டம், நில மீட்புப் போராட்டம் என்பனவற்றுக்கு முடிவில்லாத நிலையில் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளில் தலைவர்கள் வெளிப்படுத்தும் நம்பிக்கைகள் வெறும் போலியானவையாகவே தெரிகின்றன. இதனைவிட, பொறுப்புக் கூறல் கைவிடப்பட்டிருக்கின்றது. நிரந்தரமான ஒரு தீர்வைத் தரக்கூடிய அரசியலமைப்பு சீர்திருத்தச் செயற்பாடுகள் சிங்களவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான பாதையில் செல்லத் தொடங்கியிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த செயற்பாடுகளும் கேள்விக்குறியாகவே உள்ளன. அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளிலிருந்து இனநெருக்கடிக்குத் தீர்வாக முன்வைக்கப்படக்கூடிய "அதிகாரப் பரவலாக்கல்" என்ற விடயம் சத்தமில்லாமல் தூக்கப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தும் செய்திகளே வெளிவந்துகொண்டிருக்கின்றன. இறுதியாக நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கூட இது தொடர்பில் பேசப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும்தான் அரசியல் தீர்வில் நம்பிக்கை வைத்தவராக இருக்கின்றார். கடும் சிங்களத் தேசியவாதத் தலைவர்களில் ஒருவரான தினேஷ் குணவர்த்தன மட்டுமன்றி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனும் இந்த விடயத்தில் சுமந்திரனின் கருத்துடன் முரண்படுகின்றார்கள். அதிகாரப்பரவலாக்கல் திட்டத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டதாக மனோ கணேசன் சொல்கிறார். இவ்விடயம் குறித்து உடன்பாடு எதுவும் இல்லை என்கிறார் தினேஷ். பரந்தளவிலான அதிகாரப்பரவலாக்கலுக்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் சுமந்திரன்.

அரசியலமைப்பு திருத்த யோசனைகளைத் தயாரித்துக்கொண்டிருக்கும் வழிநடத்தல் குழுவில் என்ன நடைபெறுகின்றது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. இதனை மூடிமறைத்துவைத்திருக்க வேண்டிய எந்தவிதமான அவசியமும் இல்லை. அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமா, இல்லையா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளதாக பிந்திய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பாக வழிகாட்டல் குழுவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு தகவல் வெளியிடுகையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பொருள் மற்றும் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் வரப்போவது, ஒரு புதிய அரசியலமைப்பா அல்லது  அரசியலமைப்பு திருத்தமா என்பது தொடர்பில் ஏகமனதான முடிவு இதுவரையில் இல்லை. ஆனால், எவ்வாறாயினும், அண்மையில் வழிகாட்டல் குழு உறுப்பினர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இது உகந்த சூழல் அல்ல என்று தெரிவித்துள்ளனர். இதன்படி பார்க்கும் போது முழுஅளவிலான அரசியலமைப்பு மாற்றத்தை அவர்கள் விரும்பவில்லை. அரசியலமைப்பில் திருத்தம் ஒன்றை மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதாவது, தேர்தல் திருத்தத்தை உள்ளடக்கிய அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துடன் விஷயத்தை முடித்துவிடுவதுதான் அவர்களுடைய அக்கறையாகவே தெரிகின்றது. பொதுவாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்லாமல் அதனை மட்டும்தான் பாராளுமன்றத்தில் கொண்டுவர முடியும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பது. இனநெருக்கடிக்கு நிரந்தரமான ஒரு தீர்வைத் தரக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் திட்டம் என்பன இப்போதைக்கு அக்கறைக்குரிய விடயங்களாகத் தெரியவில்லை. அந்த இரண்டையும் செய்வதற்கு பொதுவாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பது அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்து. அதற்கு உகந்த சூழ்நிலை இப்போது இல்லை எனத் தெரிவித்திருப்பதன் மூலம் அந்த இரு விடயங்களையும் ஜனாதிபதியும், பிரதமரும் தட்டிக்களிக்க முற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இதில் இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கது. அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டதாகவே அரசியல் நகர்வுகள் அனைத்தும் இடம்பெறும் நிலையில் அதிகாரப்பரவலாக்கல் குறித்து இணக்கப்பாடு ஒன்று ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. அதனைவிட, ஜனாதிபதி முறையைத் தக்கவைத்துக்கொள்வதுதான் இரு பிரதான கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது. இந்த நிலையில், தேர்தல் சீர்திருத்தத்துடன் அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் அவர்களுடைய தேவையாக இருக்கும்.

'நல்லாட்சி' ஏற்பட்டபோது அதில் மக்களுக்குப்   பெருமளவு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது என்பது உண்மை. கடந்த ஆட்சியில் காணப்பட்ட சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயக மறுப்பு, குடும்ப ஆதிக்கம் என்பவற்றுடன் ஊழல் மோசடிகள் என்பனதான் ஆட்சி மாற்றம் ஒன்றின் அவசியத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. அடக்குமுறையிலிருந்து விடுபட தமிழ் மக்களும் ஆட்சிமாற்றத்தை விரும்பினார்கள். இதற்கு ஏற்றவாறு சர்வதேச சமூகமும் அவ்வாறான மாற்றம் ஒன்றை விரும்பியது அதற்காகச் செயற்பட்டது. மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுடன் மகிந்த ராஜபக்‌ஷ இணங்கிப் போகாததால் அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அந்த நாடுகளும் விரும்பின. அதாவது, மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கு அப்பால் "நல்லாட்சி"யை ஏற்படுத்தியவர்களிடம்  வேறு எந்தத் திட்டமும் இருக்கவில்லை. மகிந்த ஆட்சி எந்த அணுகுமுறையில் பிரச்சினைகளைக் கையாண்டதோ அதே அணுகுமுறையில்தான் இப்போதைய ஆட்சியாளர்களும் பிரச்சினைகளை அணுகுகின்றார்கள்.

புதிய ஆட்சி ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்திருக்கும் நிலையில்தான், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதைவிட அவர்களிடம் ஆரோக்கியமான நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. தமிழ் மக்கள் இந்த ஆட்சியில் அதிகளவு நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அதனால்தான் அதிகளவுக்கு ஏமாற்றமடைந்தவர்களாக அவர்கள் காணப்படுகின்றார்கள். மகிந்த ஆட்சிக் காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள்தான் ஆட்சிமாற்றத்தை அவர்கள் விரும்பியதற்குக் காரணம்.

ஆனால், ஆட்சிமாற்றம் போராட்டங்களை நடத்துவதற்கான ஒரு சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்திருப்பதைவிட வேறு எதனையும் கொடுக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை முடிவுக்கு வரும்போல தெரியவில்லை. படையினர் மீது விசாரணை நடத்துவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாகவிருக்கும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை முடிவுக்கு வரப்போவதில்லை. நீல மீட்புப் போராட்டமும் தொடரும் நிலை உள்ளது. அரசியல் தீர்வு காணல் நீராகத்தான் உள்ளது. பொறுப்புக்கூறல் நடைபெறப்போவதில்லை என்பதை ஜனாதிபதி, பிரதமர்  ஆகியோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் புத்தாண்டு வாழ்த்துக்கள் மட்டும் நிலைமைகளை மாற்றிவிடப் போவதில்லை.