Apr 13

'கௌரவ பிரஜை' அந்தஸ்த்து வழங்கி மலாலாவுக்கு கனடா கௌரவம்

பாகிஸ்தானின் மனித உரிமைப் போராளியான மலாலா யூசுப்சாய்க்கு கௌரவ பிரஜாவுரிமையை வழங்கி கௌரவித்திருக்கின்றது கனடா. புதன்கிழமை ஓட்டாவாவில் இடம்பெற்ற கௌரவ பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வில் மலாலாவுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

கனடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மலாலா கௌரவ பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர்களும், கலரியில் நிறைந்திருந்த பொதுமக்களும் எழுந்துநின்று கரகோசம் செய்து அதனை வரவேற்றார்கள்.

மலாலா யூசுப்சாய் பாகிஸ்தானில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் தொடர்ந்து தாக்கி வந்த தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடியவர். 2012-ம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் பள்ளிக்கு செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்குப் போராடி, ஒரு வருட கால சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்தவர்.

பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய இவரது சாதனையைப் பாராட்டி 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தனது 17-வது வயதில் இப்பரிசை வென்றதன் மூலம், இளம் வயதில் நோபல் பரிசு வென்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதராக உள்ள அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சாடியுள்ளார். அவர், "அகதிகளுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். அகதிகளுக்காக நீங்கள் கதவுகளைத் திறக்கவில்லை என்றால் அவர்கள் கொல்லப்படும் நிலை உள்ளது. நான் அகதிகள் முகாம்களுக்குச் சென்றுள்ளதால், அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்குப் புரிகிறது. அகதிகள் முகாம்களுக்குச் சென்று பார்த்தால் தான் ட்ரம்பிற்கும் அது புரியும்" எனத் தெரிவித்துள்ளார்.