Apr 13

வன்முறையை எதிர்க்கும் கத்தி தேவன்

இங்கிலாந்தைச் சேர்ந்த அல்ஃபி பிராட்லி, இரண்டு ஆண்டுகள் உழைப்பில் ‘கத்தி தேவன்’ சிலையை உருவாக்கியிருக்கிறார். 24 அடி உயரத்தில் இருக்கும் இந்தச் சிலையில் 1 லட்சம் கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

காவல் நிலையங்களால் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கத்திகள் இவை. ஆர்.ஆர். மார்டினின் கற்பனையில் உருவான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரம் கத்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு சிம்மாசனம் இடம்பெறும். இவர் அதைப் பார்த்துதான் கத்தி தேவனை உருவாக்கியிருக்கிறார்.

“குற்றங்கள் இப்போது அதிகம் நடக்கின்றன. கத்திக் குத்தில் ஏராளமான அப்பாவிகள் இறந்து போயிருக்கிறார்கள். அதனால் வன்முறைக்கு எதிரான பிரச்சாரமாக இந்தப் பணியை மேற்கொண்டேன். விஷயம் அறிந்த பொதுமக்கள் தெருக்களில் கிடைத்த கத்திகளைக் கொடுத்தார்கள்.

சிலையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முயன்றோம். ஆனால் கத்தியைப் பயன்படுத்தி எப்படி ஒரு சிற்பத்தை உருவாக்கலாம், யார் அனுமதி கொடுத்தனர் என்ற கேள்வி எழுந்தது. காவல் நிலையங்கள் தாங்கள் கத்தி கொடுத்த விஷயத்தைச் சொல்ல மறுத்தன. அதனால் அனுமதி கிடைக்கவில்லை.

கத்திக் குத்துகளால் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இந்தச் சிலையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்றும் தங்களைப் போல யாரும் அன்பானவர்களை இழந்து துயரப்படக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இனி இந்த கம்பீரமான கத்தி தேவன், கத்தியால் உயிரிழந்தவர்களின் வலிகளைச் சொல்லிக் கொண்டிருப்பான்.

அதைப் பார்க்கும் குற்றவாளிகளில் சிலர் திருந்தினால் கூட என் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக்கொள்வேன்” என்கிறார் அல்ஃபி பிராட்லி.