Apr 12

நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம்; சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்தவர் கலாபவன் பணி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு 2016-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

அவரது மர்ம மரணம் குறித்து கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது உள்ளுறுப்புகளை கொச்சியில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்தபோது குளோரோபைரிபாஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அவரது ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாக அறிக்கை தரப்பட்டது. இந்நிலையில் கேரள போலீஸாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று கலாபவன் மணியின் உறவினர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதை ஏற்கவில்லை. மாநில போலீஸாரே தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவி்த்தது.

இந்நிலையில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மார்க்சிஸ்ட் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. இதைத் தொடர்ந்து கலாபவன் மணியின் உறவினர்கள் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட கேரள அரசு, கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதுதொடர்பாக அந்த மாநில போலீஸ் டிஜிபி லோக்நாத் பெஹைரா மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை செய்ததை அடுத்து, சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு மாதத்துக்குள் சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.