Sep 15

மக்களுடன் மக்களாய் ஒன்றித்து வாழ்ந்த அக்காச்சி!

யாழ்ப்பாண மாவட்டம், நீர்வேலியைச் சேர்ந்த சிவகுமாரன், கனகமணி ஆகியோரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் சிறீகாந்தன். மற்றவர் சிறீரஞ்சன் என்றும் பெயரிட்டிருந்தனர். ஸ்ரீரஞ்சன் சிறு வயதிலேயே இறந்து விட்டான். சிறீகாந்தன் விடுதலை இயக்கத்தில் ஜெகன் என்ற பெயரில் இணைந்து கொண்டு அக்காச்சி என்ற பெயரில் நீர்வேலிப் பிரதேசத் தலைவர் ஆனார். அக்காச்சி பாடசாலையில் படிக்கும் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளிலும் கராட்டிப் பயிற்சிகளிலும் குதிரையேற்றப் பயிற்சிகளிலும் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார்.

புலிகள் இயக்கத்தில் அக்காச்சி

1983ஆம் ஆண்டு கலவரத்தின் எதிரொலிகள் எல்லோரையும் போல அக்காச்சியையும் பாதித்தது. இதனால் விடுதலை இயக்கத்தின் போரணியில் ஒர் உறுப்பினனாக இணைந்து கொண்டான். நீர்வேலியைச் சேர்ந்த கப்டன் கண்ணாடி ராஜனும்(இராஜதுரை ஜெயக்குமார்) இவனும் ஒரே நாளில் இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.அக்காய் ரீசேர்ட் அணிந்து கொண்டு நின்ற ஜெகனைக் கண்ட, மறைந்த கப்டன் பண்டிதர் அக்காச்சிஎன்ற பெயரை வைத்தார். அன்றிலிருந்து அப்பெயரே நிலைத்து நின்றுவிட்டது.

விடுதலை இயக்கத்தின் இரண்டாம் படைப்பிரிவில் படையப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1985ஆம் ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்பிய அக்காச்சி அக்கால கட்டத்தில் விடுதலை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட பல தாக்குதல் நடவடிக்கைகளிலும், 1985 பெப்ரவரியில் இடம்பெற்ற கொக்கிளாய் படை முகாம் தாக்குதல், 1985 ஏப்ரல் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாணப் காவல்துறை நிலையத் தாக்குதல், 1985 மே மாதம் நடைபெற்ற மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதல் என்பவற்றில் பங்கேற்றான். யாழ். காவல்துறைநிலையத் தாக்குதலில் அக்காச்சி குருநகர் பாசையூர் பகுதிகளில் தாக்குதலுக்குத் தயார் நிலையில் நின்ற விடுதலைப் புலிகளுடன் இணைந்து குருநகர் படை முகாமைச் சேர்ந்தோர் வெளியேறி முன்னேறாதபடி தடுத்துக் கொண்டிருந்தான்.

1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ். குடா நாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் பின் நீர்வேலிப் பகுதிப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட அக்காச்சி ஸ்ரீலங்காப் படைகள் முகாமைவிட்டு வெளியேறாத படி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றினான்.

குறிப்பாக பலாலியிலிருந்த தரைப்படை வான்படை கூட்டுத் தளத்திலருந்து படைகள் வெளியேற முயன்றபோது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல எதிர்த் தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றான். நீர்வேலிப் பகுதியில் பொம்மர் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டுகளை வீசித் தாக்ககுதல் மேற் கொண்டபோது அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்காச்சி உதவி செய்தான். படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வேலி கூட்டுறவுச் சங்கக் கட்டடமொன்றை ஒதுக்கிக் கொடுத்து அவர்கள் நலன்களைக் திறம்படக் கவனித்துக் கொண்டான்.

பல இடம்பெயர்ந்தோர் முகாம்களை அமைத்து மக்களைப் பாதுகாத்தான். மழையில் நனைந்து கொண்டு சென்று இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவிகள் செய்திருக்கிறான். விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்டு உழைத்த பொது மக்களுக்கு தோள் கொடுத்து உதவியிருக்கிறான். வறுமையில் வாடிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அளிக்க பண்ணைகளை நிறுவினான்.

கிராமிய உழைப்பாளர்கள் சுரண்டியபோது அம்மக்களின் நேர்மையான ஊதியத்திற்காகவும் நேரப்படியான உழைப்பிற்காகவும் போர்கொடி தூக்கிப் போராடியவன் அக்காச்சி. ஏழைகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக தளபதி கிட்டுவின் அறிவுரையில் பல நேர்மை விலைக் கடைகளைத் திறந்தான்..

தமிழீழ விடுதலை புலிகளின் பிரதி தலைவராக இருந்த மாத்தையா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நினைவு தூபி

பொதுப்பணிகள்

தமிழ் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பொதுப்பணி செய்ய முன்வரவேண்டும் என அறிஞர் அண்ணாத்துரை ஒரு முறை குறிப்பிட்டார். விடுதலைப் போராளியாகவும், சமூக ஒழுங்கமைப்பவனாகவும் பொதுப் பணியாளனாகவும் விளங்கிய கப்டன் அக்காச்சியை மக்கள் தலைவனாக்கிய சிறப்புப் பரிமாணங்கள் அவனது யாதார்த்தமான செயற்பாடுகளேயாகும். சக விடுதலைப் போராளிகள் அக்காச்சியை ஏழைகளின் தொண்டன், மக்கள் தலைவன் என்று சுவையாக குறிப்பிடுவதுண்டு. படித்தவர்கள் பலர் புத்தகப் பூச்சிகளாகவே வாழ்நாளை வீண் நாளாக்கி மறையும் காலத்தில் கிராமத்தையே கலாசாலையாக்கி ஏழைகளையே தனது ஆசான்கiளாக்கி அக்காச்சி அனுபவக் கல்வியூடாக மக்கள் பணிசெய்யக் கற்றுக் கொண்டவை ஏராளம். அவையே அவனது முன்னேற்றப் பாதையின் படிக்கற்களாகும்.

அபிவிருத்தியென்பது சமூகத்தின் அடி மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டு என ஒர்சுலாக்கிக்ஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டார். அபிவிருத்தியில் பல்வேறு பரிணாமங்களை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப விரும்பிய கப்டன் அக்காச்சி, கீழ் மட்டத்தில் வாழும் மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவைப் போதிக்க விரும்பி அதற்கான திட்டங்களை முதலில் வகுத்துக் கொண்டான்.

கல்விப் பணிகள்

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இப்படி மகாகவி பாரதியார் பாடினார். கப்டன் அக்காச்சியின் கல்விப் பணிகளும் பாரதி பாடலின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன.

நீர்வேலி பல பொருளாதார கட்டுமானங்களைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியாகும். பொருளாதார வசதி படைத்த செல்வந்தர்களும் மிக ஏழைகளும் இங்கே வாழ்கிறார்கள். முற்றிலும் கிராமப் புறம் சார்ந்த ஒரு பகுதிப் பொறுப்பாளனாக பொறுப்பேற்றுக் கொண்ட அக்காச்சி இப் பகுதியில் வாழும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு கல்வியூட்ட விரும்பி பல பகுதிகளில் மழலைகள் பாடசாலைகளை உருவாக்கினான்.

புத்தூர் வாதரவத்தையில் இரண்டு மழலைகள் பாடசாலைகளை திறந்து வைத்தான். நீர்வேலி கந்தசாமி கோயில் அருகில் ஓர் மழலைகள் பாடசாலையை உருக்கினான். இதைவிட இடைநிலைக் கல்வி கற்கும் மாணவர்களது வசதி கருதி அக்காச்சி கட்டணமற்ற வகுப்புக்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தினார். அக்காச்சி அச்செழுவில் நூலகம் ஒன்றை அமைத்திருந்தான். வெளிநாட்டு விடுதலைப் போராட்டங்கள் பற்றி அபூர்வமான நூல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

தனது போராளிகளை அரசியல் அறிஞர்களாக வளர்த்து எழுப்பதில் அவன் அதிக நாட்டமுடையவனாக இருந்தான். அந் நூலகத்தில் அருந்த நூல்களையெல்லாம் 1987 ஒக்ரோபர்நவம்பர் மாத காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பு அள்ளிக் கொண்டு சென்று நீர்வேலி  மாசுவன் சந்தியில் போட்டுத் தீயிட்டது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்த இந்தியா தனது வல்வளைப்புப் படைகள் மூலம் ஈழத்தின் பல பகுதிகளிலிருந்த நூலகங்களைத் தீக்கிரையாக்கி வரலாற்று பெருமையைப் பெற்றுக் கொண்டது.

மதிய உணவு

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும் திட்டமும் இலங்கை அரசின் மாணவர் மதிய உணவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படு முன்னரேயே கப்டன் அக்காச்சி பாலர்களிற்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தான். இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அரசியல் நோக்குடன் இத்திட்டம் அடுத்த தேர்தலை நோக்காக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த சந்ததின் வளமான வாழ்வுக்காக அக்காச்சி இத்திட்டத்தை அறிமுகம் செய்தான்.

நீர்வேலி கந்தசுவாமி கோயில் அருகில் அமைக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக்காக காலஞ்சென்ற மக்கள் கலைஞர் வி.எம்.குகராஜா அவர்கள் தயாரித்த மனிதனும் மிருகமும்என்ற நாடகத்தை அரங்கேற்றி அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பாடசாலைக்கான சுற்றுமதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான். பாடசாலை காலையிலும் மாலை வேளையிலும் இலவசமாக இருநேர உணவு வழங்க ஏற்பாடு செய்தான். பொருளாதார வசதியுடையவர்களை அணுகி அவர்கள் மூலமாக தளபாட வசதிகளைப் இப் பாடசாலைக்குச் செய்த கொடுத்தான்.

நீர்வேலி வீரபத்திரர் கோயில் அருகில் ஈகைச்சுடர் திலீபன் நினைவு ஒரு நூலகத்தை அமைத்த அக்காச்சி, அக் கட்டடித்திற்குத் தேவையான சீமெந்து கற்களை தனது சொந்த வீட்டிலிருந்தே எடுத்து வந்து பயன்படுத்தினான். ஏழை மக்கள் மதுப்பழக்கத்திற்கு இலக்காகி சீரழியாமல் தடுக்க விரும்பிய அக்காச்சி கசிப்பு ஒழிப்பு நாடக மூலம் பரப்புரை செய்தான். கசிப்பு ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான்.

தூய்மைப்படுத்தல் பணி

அக்காச்சி தான் பொறுப்பாளராகவிருந்த நீர்வேலிப் பகுதியில் காலத்திற்குக் காலம் பல தூய்மையாக்கல் பணிகளைச் செய்து வந்தான். இப் பணிகளில் போராளிகளும் பொது மக்களும் இணைந்து பங்கேற்றார்கள். நீர் வழங்கல் வசதி குறைந்த இடங்களில் குளங்களைத் திருத்தும் வேலைகளை அக்காச்சி செய்து வந்தான். அந்த வகையில் நீர்வேலிப் பகுதியிலுள்ள நடுவத்தாள், கிராஞ்சி போன்ற குளங்களின் திருத்த வேலைப் பணிகள் கப்டன் அக்காச்சியால் மேற்கொள்ளப் பட்டவையாகும்.

அக்காச்சி இரக்கம் மிக்க போராளி என்ற முறையில் வரட்சிக் காலத்தில் மேய்ச்சலுக்காக செல்லும் கால் நடைகளும் இக்குளங்களில் நீர் பருக வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. வாதரவத்தைப் பகுதியில் கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அயராது உழைத்த அக்காச்சி இப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையை தீர்கும் முகமாக வாகரவத்தையில் பெரியபொக்கணைக்கும் வீரவாணிக்கும் இடையில் வாழ்ந்த மக்கள் நலன் கருதி தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்தான்.

மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிணக்குகளை மனச்சாட்சியின் படி இயற்கை நீதிக் கோட்பாட்டைப் பின்பற்றி தீர்த்து வைத்தான். காணிப் பிரச்சினைகளை அவன் அணுகிய விதமும் தீர்த்து வைத்த முறையும் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது.

ஒப்பரேஷன் லிபரேஷன்

1987இல் இலங்கை அரசு வடமராட்சி மீது தொடுத்த ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான யுத்தத்தில் அக்காச்சி பங்குபற்றினார்.

இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்

இந்திய அமைதி காக்கும் படை 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளுடன் மீது போர் தொடுத்தது. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேற முயன்று கொண்டிருந்த அதே வேளையில் வேறு படைப் பிரிவினர் பலாலி வீதி, கே.கே.எஸ். வீதி, கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேற முயன்று கொண்டிருந்தனர்.

கைதடி கோப்பாய் வீதி வழியாக கோப்பாய்ச் சந்திக்க வரமுயன்ற இந்திய இராணுவத்தை அந்த இடத்தை நோக்கி நகரவிடாமல் பதினொரு நாட்கள் அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டது. உக்கிரமான போர் இடம்பெற்றது. பலத்த ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த உக்கிரமான போரில் கோப்பாய் சந்திக்கு வரமுடியாத நிலையில் நின்ற இந்திய இராணுவத்தின் ஒரு படைப் பிரிவை அக்காச்சி அணி தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்ட நிலையில் இன்னுமொரு இந்தியப் படைப்பிரிவு மறுபக்கத்தால் உரும்பிராய் கிருஷணன் கோயிலடிக்கு வந்து வாழைத் தோட்டங்களுக்கூடாக நீர்வேலி வெங்காயக் கூட்டுறவுச் சங்கமருகில் வந்தது.

கொமாண்டோ மோட்டார் ஷெல் தாக்குதல்களும் செயின் புளக்கு(டாங்கி) களாலும் தாக்கிய வண்ணம் கோப்பாய்ச் சந்திக்கு இந்திய இராணுவம் நள்ளிரவு கன்னிரண்டு மணிக்கே சென்றடைந்தது. இந்திய இராணுவ நடவடிக்கைளின் போது நீர்வேலிப்பகுதியில் அதிக உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாமல் அக்காச்சியே ஏற்ற நடவடிக்கைகளையெடுத்து தனது திறமையால் கிராமத்தைக் காப்பாற்றினார் என இப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள்.

வேறு தாக்குதல்கள்

1987 அக்டோபர் தொடக்கம் 1988 மார்ச் வரையுள்ள காலப்பகுதியில் நீர்வேலிப் பகுதியில் இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றார். பின்னர் அக்காச்சி அங்கிருந்து தப்பி பிறிதொரு பகுதிக்குள் நுழைந்தார்.

பொதுமகன் காப்பாற்றல்

1988 முற்பகுதியில் ஒரு நாள் அச்செழு பகுதிக்கு வந்த இந்திய இராணுவத்தினர் பற்றை மறைவுகளின் பின்னால் படுத்துக் கொண்டு போராளிகளது வருகைக்காகக் காத்துக் கிடந்தனர். முக்கிய போராளிகளான லெப்டினன்ட் கேணல் இம்ரான், கப்டன் நேரு, அக்காச்சி இப்படியாக பல போராளிகள் அங்கே தங்கியிருந்தனர்.

அதிகாலை ஆகையால் சன நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இராணுவ நடமாட்டம் பற்றிய தகவல் அன்றைய தினம் போராளிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பொதுமகன் மீன் வலைகளைத் தன் தோளில் போட்டுக் கொண்டு வந்து இராணுவ நடமாட்டம் பற்றிய தகவலைக் கொடுத்து போராளிகளைக் காப்பாற்றினார்.

வன்னியில் அக்காச்சி

1988 மார்ச் மாதம் தொடக்கம் 1989 தை மாதம் வரை அக்காச்சி வன்னிப் பகுதியில் இந்திய இராணுவத்துடன் பல மோதல்களில் ஈடுபட்டார்.

மீண்டும் குடாநாட்டில்

சில மாதங்களை வன்னியில் கழித்துவிட்டு மீண்டும் 1989 தை மாதமளவில் அக்காச்சி குடா நாட்டிற்குள் வந்தார். இக்காலத்தில் அக்காச்சியும் அவனது தோழர்களும் கெரில்லா வாழ்க்கையே மேற்கொண்டனர். வீதிகளைக் கடக்கும் போது அல்லது தனது ஆதரவாளர்களைச் சந்திக்க வரும்போது எதிர்பாராமல் இந்திய இராணுவத்தைச் சந்திக்க நேரிட்டால் மோதல்கள் ஏற்படுவதுண்டு. இவ்வாறான மோதல்களில் பெரும் இழப்புக்களோடு இந்திய இராணுவம் முகாம் திரும்பிய ஒரு மோதல் மே 17, 1989 அன்று நீர்வேலிப் பகுதியில் நிகழ்ந்தது. இதேபோல் மே 30, 1989 அன்று அக்காச்சியும் சிவநேசன் என்ற இன்னொரு போராளியும் எதிரும் புதிருமாக இந்திய இராணுவத்தைச் சந்தித்தபோது பெரும் மோதல் ஒன்று நிகழ்ந்தது. இந்த மோதலின் போது கப்டன் நேரு, லெப்.குட்டி ஆகியோரும் இராணுவத்தினருடன் மோதினர்.

நீர்வெலி  அச்செழு வீதியில் நிகழ்ந்த இந்த மோதலில் எல்லோரும் சுற்றி வளைப்பை உடைத்து வெளியேறினர். ஆனால் சிவநேசன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் மரணம் அடைந்தார். இதே போன்ற பிறிதொரு மோதல் ஆகஸ்ட் 8, 1989 அன்று பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கு அருகே ஏற்பட்டது. இந்த மோதலில் கப்டன் ஒருவர் உட்பட இரண்டு இந்திய இராணுவத்தினர் இறந்தனர். இந்த மோதலில் அக்காச்சி முக்கிய பங்கு வகித்தார். இந்த மோதல் நிகழ்ந்த மறுதினம் காலை 7:15 மணிக்கு ஆகாசவாணி டில்லி தமிழ்ச் செய்தியில் இந்த மோதல் பற்றிக் குறிப்பிட்டு அக்காச்சி தலைமையிலான குழுவே இந்த மோதலில் ஈடுபட்டது என்று அந்தச் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இறுதித் தாக்குதலும் மரணமும்

ஓட்டுமடம் என்ற இடத்தில் கூடாரமடித்து புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பினர் செப்டம்பர் 15, 1989 அன்று திலீபனின் அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். திலீபனின் அஞ்சலிப் பிரசுரம் ஒட்டிய மதனா என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவர்களை அக்காச்சி எதிர்த்ததால் அங்கே மோதல் ஒன்று ஆரம்பமானது. அப்போது நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குண்டடி பட்டு அக்காச்சி மரணம் அடைந்தார்.

அக்காச்சி நினைவாக தமிழீழ விடுதலை புலிகளால் வாதரவத்தை பகுதியில் உருவாக்கிய வீட்டு திட்டங்களில் ஒன்று 

இவரின் வித்துடல் யாழ்ப்பாணம் வாதரவத்தை பகுதியில் அக்காச்சி அவர்கள் ஒன்றித்திருந்த மக்களின் குடியிருப்பு ஒன்றில் எரியூட்டப்பட்டது.

பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் அப்பகுதியில் மக்களுக்கு குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டு அக்காச்சி குடியிருப்பு என்று பெயரும்க்கொ டுக்கப்பட்டு தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளில் மக்களிடம் கையளிக்கப்பட்டது .

இன்றும் அக்கிராமம் அக்காச்சியின் பெயர் சொல்லி நிமிர்ந்து நிக்கிறது