Apr 10

வீட்டுக் காணியில் எறிகணைக் குண்டு: வெடிக்காத நிலையில் மீட்பு

வவுனியா பொலிஸ் நிலையப்பிரிவில் உள்ள பத்தியார் மகிளங்குளத்தில் வீட்டுக் காணியில்   புதையுண்ட நிலையில் காணப்பட்ட  எறிகணைக்  குண்டு ஒன்று விசேட அதிரடிப் படை வீரர்களினால் மீட்கப்பட்டு பின்னர் அது  செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் 12.15 மணியளவில்  வீட்டார்  காணியை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது நிலத்தில் புதையுண்ட நிலையில் ஏறிகணைச் குண்டு ஒன்று  இருப்பதை அவதானித்து விட்டு அது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் எறிகணைச் குண்டைச் சுற்றி பாதுகாப்பு ஏற்படுத்தியதுடன் வவுனியா மாவ ட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

இந் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றதை அடுத்து விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் அதனை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர். 

இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், இந்த ஏவுகணைக் குண்டு கடந்தகால யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில்  நீண்டகாலமாக மண்ணில் புதையுண்டு இருந்துடன் அது செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்