Sep 13

ஸ்ரீலங்காவிற்கு அமெரிக்காவின் இராணுவ உதவிகள் அதிகரிப்பு

அமெரிக்காவினால் ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்படும் இராணுவ உதவிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நிதியை நிலை நாட்டுவதற்கான பொறுப்புக்கூறும் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசினால் நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் பூர்த்திசெய்யாது இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

அமெரிக்காவுடன் அனைத்து வித உறவுகளையும் குறிப்பாக இராணுவ ரீதியிலான ஒத்துழைப்புக்களை அதிகரித்துக்கொள்ள ஸ்ரீலங்கா அரசு அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவதை அடுத்தே ஸ்ரீலங்காவிற்கான இராணுவ உதவிகளை அதிகரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் பதில் துணை இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்காவிற்கு கடந்த ஓகஸ்ட் 30 முதல் செப்டெம்பர் இரண்டாம் திகதி வரை விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் பதில் துணை இராஜாங்கச் செயலாளர் அலிஸ் ஜீ வேல்ஸ் ஸ்ரீலங்காவிற்கான இராணுவ உதவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

மனித உரிமைகள் விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசு முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவதுடன் அமெரிக்காவுடன் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்புக்களையும் அதிகரித்துக்கொள்ள ஸ்ரீலங்கா ஆர்வமாக செயற்பட்டு வருவதாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான குழுவில் முன்னிலையாகி கருத்துத் தெரிவித்துள்ள பதில் துணை இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறிப்பாக ஆட் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் புள்ளிவிபரங்களை முன்வைத்து குற்றம்சாட்டி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் ஐ.நா உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்தாத அமெரிக்க பதில் துணை இராஜாங்கச் செயலாளர் அலிஸ் ஜீ வேல்ஸ் ஸ்ரீலங்காவிற்கு அடுத்துவரும் ஒரு ஆண்டு காலத்திற்காக மேலதிகமாக மூன்று தசம் நான்கு மில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

இந்த உதவி பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும்,  தந்திரோபாய வர்த்தக ஒத்துழைப்புகளையும் மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்தப்படும் என்றும் வேல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் யாப்பு மறுசீரமைப்புப் பணிகள் ஊடாக மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கவும், தற்போது நடைமுறையிலுள்ள கடுமையான சட்டமான பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை உள்வாங்கிய புதிய சட்டமொன்றை தயாரிக்க,  இராணுவம் உட்பட அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது,  காணாமல் போனோர் அலுவலகம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் ஸ்ரீலங்கா அரசு நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் வேல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் ஸ்ரீலங்கா அரசு காணாமல் போனோர் அலுவலகம் அமைக்ககும் விடையத்தில் மாத்திரமே முன்னேற்றத்தை காண்பித்திருப்பதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அலிஸ் ஜீ வேல்ஸ் கூறுவது போல் வேறு எந்த துறைகளிலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தவில்லை என குற்றம்சாட்டுகின்றன.

அதுவும் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கான சட்டத்தை  ஒருவருடத்திற்கு முன்னரே நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ள ஸ்ரீலங்கா அரசு இன்னமும் குறித்த அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூறும் விடையத்தில் உதாசீனமாக செயற்படுவது குறித்து சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை, யஸ்மின் சூக்கா தலைமையிலான நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச செயற்திட்டம், சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கடும் ஆத்திரத்தையும் விசனத்தையும் வெளியிட்டுள்ள நிலையிலேயே அமெரிக்காவின் பதில் துணை இராஜாங்கச் செயலாளர் அலிஸ் ஜீ வேல்ஸ் ஸ்ரீலங்கா அரசை பாராட்டியிருக்கின்றார்.

இதேவேளை ஸ்ரீலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையினை உருவாக்குவதற்கும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்குமான பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனினும் ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை அடுத்து ஐ.நா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு ஆண்டுகால கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசம் வழங்கப்பட்டு ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலும் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை என்று நேற்றைய தினம் கடுமையாக சாடியிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன், ஸ்ரீலங்கா அரசு போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால் சர்வதுச நீதிமன்றின் ஊடாக யுத்தக் குற்ற விசாரணைகளை நடத்த நேரிடும் என்றும் எச்சரித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஸ்ரீலங்காவிற்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் நிதி உதவிகளை 92 வீதத்தால் குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த யோசனையை அமெரிக்க செனட் குழு நிராகரித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவத்தை கருதி அமெரிக்க அதிபரின் யோசனையை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க செனட் ஒதுக்கீட்டுக் குழு  அறிவித்திருக்கின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு செனட் ஒதுக்கீட்டுக் குழுவில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட போதே அந்தக் குழு ஸ்ரீலங்காவிற்கான நிதி உதவிகளை குறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அடுத்த ஆண்டிற்காக முன்வைக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டில் ஸ்ரீலங்காவிற்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இதில் 35 மில்லியன் டொலர் நிதி பொருளாதார உதவிகளுக்காகவும் ஆறு தசம் எட்டு மில்லியன் டொலர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும் ஐந்து இலட்சம் டொலர் இராணுவ உதவிகள் மற்றும் இராணுவத்தினருக்காக பயிற்சிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.