Sep 13

யாழில் சுகாதார ஊழியர்களின் மாபெரும் பேரணி, போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து அனைத்து சுகாதார ஊழியர்களும் போராட்டம் மற்றும் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

போராட்டத்தை ஸ்ரீலங்காவின் சகல பகுதி சுகாதார ஊழியர்களும் இணைந்து யாழில் இன்று காலை இந்த போராட்டம் மற்றும் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர்.   

யாழ். மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றியவேளையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து இலங்கையின் சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் பணியாற்றியவேளையில் சுகாதார அமைச்சின் ஊடாக இடமாற்றம் வழங்கப்பட்டதனைக் கண்டித்து தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஐவருக்கும் தொடர்ந்தும் மாநகரசபையிலேயே பணியாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

சுகாதார அமைச்சின் செயலாளர் நியமனம் வழங்கப்பட்டு உள்ளூராட்சித் திணைக்களங்களில் பணிக்கமர்த்தப்பட்ட பொதுச் சுகாதார  ஊழியர்களில் ஒரே சபையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களிற்கு கடந்த ஆண்டின் இறுதியில் 2017 ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.