Mar 03

கட்சியைக் கைப்பற்ற பன்னீர்ச்செல்வம் வகுக்கும் வியூகம்: தீபாவுடன் இணைவாரா?

ஆட்சியை பறிகொடுத்த பன்னீர் செல்வம் இப்போது அ.தி.மு.க-வை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். பன்னீர்செலவம் அணியுடன் இணைந்து செயல்படுவோம் என்று தீபா சொல்லிய நிலையில் அவர், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையை தொடங்கி விட்டார். என்ன நடந்தது என்று இரு தரப்பிலும் விசாரித்தோம். சமாதிக்கு இரண்டாவது முறை உத்தரவு வாங்கப் போன  ஓ.பன்னீர்செல்வத்தை, இயல்பாகச் சந்திப்பதுபோல் அங்கே தீபா  சந்தித்தார்.

வாக்குறுதியை வேறு இடத்தில் கொடுத்தால் கூட பின்னால் மாற்றிக் கொள்ளலாம், ஆனால் அம்மா சமாதியில் வைத்து தீபாம்மா கொடுத்துள்ளதால் இணைந்த கைகள், இனி சசிகலா தரப்பை துவம்சம் செய்து விடும் என்றனர். ஆனால், இரு தரப்பு ஆதரவாளர்களின் கணிப்பு  அடுத்தடுத்த நாட்களில் தவிடுப் பொடியானது. அண்ணனோடு இனி இணைந்து செயல்படுவோம் என்று,  தீபா  கொடுத்திருந்த உறுதி அடுத்தடுத்த நாட்களில் காற்றில் பறந்தது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியன்று  ஆர்.கே.நகரில் அன்னதானத்தோடு தன்னுடைய பயணத்தை  ஓ.பி.எஸ். தொடங்கினார். தீபாவோ, அதே நாளில், 'எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை' என்ற பெயரில் தனிக்கட்சியைத்  தொடங்கி விட்டார்.தி.நகரில் உள்ள அவருடைய வீடே தற்காலிகத் தலைமைக் கழகமாக மாறியுள்ளது. வெறும் கட்சி மட்டும் இல்லை, கொடியையும் வடிவமைத்து அதையும் அன்றே வெளியிட்டு விட்டார். ''இனி கிராமம் கிராமமாகப் போய் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரப் பிரசாரம் மேற்கொள்வேன்'' என்றும் செய்தியாளர்களிடம் தீபா தெரிவித்தார்.  

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் கொண்டாடிய ஜெயலலிதாவின் பிறந்தநாள் போஸ்டர்களில் தீபாவின் படமும் தவறாமல் இருந்தது. தீபாவின் வருகையை அன்று பிற்பகல் வரையில் ஓ.பி.எஸ் அணியினர் எதிர்பார்த்து இருந்தனர் என்பதையே அது காட்டுகிறது. ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ் அளித்த பிரஸ்மீட்டில்,  தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், வெளிநடப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அது அவர்கள் (தி.மு.க) கட்சி விஷயம் அதில் நாங்கள் கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்றார்.  ஒருபோதும் தி.மு.க-வுடன் நட்பாக இல்லை  என்பதை அ.தி.மு.க. தொண்டர்களுக்குக் காட்டவே ஓ.பி.எஸ் அப்படி ஒரு பதிலை அளித்தார் என்று உடனிருந்த தலைவர்கள் சிலர் பெருமையாகச் சொல்லி மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டனர்.

ஓ.பி.எஸ் அணிக்காக சட்டப்பேரவையில் தி.மு.க வாதாடியது.ஆனால், இப்போது தி.மு.க.வுக்கு எதிராக  ஓ.பி.எஸ் அணியே திருப்பி விட்டது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு இரண்டு பக்க அடியாக விழுந்துள்ளது. ஒரு புறம் சசிகலா அணியினரும், இன்னொரு புறம் ஸ்டாலினும், கடந்த சில நாட்களாகப்  ஓ.பி.எஸ். அணியை தாக்கத்  தொடங்கியுள்ளார். சசிகலா அணியும், ''இனி ஓ.பி.எஸ். அணிக்கு போதிய பலம் இல்லை'' என்ற முடிவுக்கு வந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்ததும் கொஞ்சம் அச்சத்தில் இருந்த சசிகலா அணி, இப்போது விண்ணப்பப் படிவங்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளது. சுவர் விளம்பரங்களுக்கு இடங்களைப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.                    

எந்தப் பஞ்சாயத்திலும் இல்லாமல், தீபா அணி பேரவை என்ற வடிவத்தோடு கிராமங்களை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.'என்னதான் திட்டம் வைத்திருக்கிறீர்கள், சொல்லுங்களேன்' என்று ஓ.பி.எஸ் அணியின் முக்கிய தலைகளிடம் பேசினோம். "பொதுக்குழு உறுப்பினர்கள் 2,800 பேரும், செயற்குழு உறுப்பினர்கள் 240 பேரும் சேர்ந்து வாக்களித்தால்தான் கட்சியின் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பது விதி. அத்தனை பேரும் அண்ணன் ஓ.பி.எஸ் அணியில்தான் இப்போது உள்ளனர். சசிகலா ஆதரவு ஆட்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை கடத்திப்போய் கையெழுத்து வாங்கிக் கணக்குக் காட்டிய கதை எல்லாம் தேர்தல் ஆணையத்தில் புகாராக உள்ளது.

பொதுக்குழு உறுப்பினர்களைக் கடத்திப்போயெல்லாம் கூவத்தூர் போல வைக்க முடியாது. நகர்ப்புறங்களில் பகுதிச் செயலாளர் பதவியும்,  புறநகர்களில் ஒன்றியச் செயலாளர் பதவியும் எம்.எல்.ஏ. பதவிக்கு இணையானது. அவர்களைத் தொடக்கூட சசிகலா தரப்பால் முடியாது. கட்சியின் எம்.எல்.ஏ., மந்திரிகள், மாவட்டச் செயலாளர்களை மட்டும் கையில் வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தலாம், ஆனால் கட்சியை நடத்த முடியாது. கட்சியை அண்ணன் ஓ.பி.எஸ் தான் நடத்தமுடியும். கட்சியே அண்ணன் கையில் வந்து விட்ட பின்னர் ஆட்சியை சசிகலா தரப்பு எப்படி நடத்த முடியும்? ஒரே வாரத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் பாருங்கள்" என்கின்றனர் நம்பிக்கையோடு.

டி.டி.வி. தினகரன் தரப்போ, ஓ.பி.எஸ். கைவசம் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களை  தம் பக்கம் இழுக்கும் அத்தனை வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளது... ஓ.பி.எஸ். சற்று ஏமாந்தாலும் தினகரன் காட்டில் கனமழைதான் என்பதே இப்போதுள்ள நிலவரம்!